239 புண்ணியமிலாதார் சூதாடிப் பொழுது போக்குவர் – சூது 3

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)

ஓதரு விசையொடு மோடு நாளென
மேதையர் தந்தொழில் விடாது செய்குவர்
போதுநீட் டித்தெனப் பொறியி லாரதைச்
சூதெனும் வாள்கொடு துணிக்க நேர்வரே. 3

- சூது, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மிகுந்த வேகத்தில் நாள் ஓடுகின்றதென்று அறிவுடையோர் தானமும் தவமும் ஆகிய நற்தொழிலை இடைவிடாது செய்வர்.

ஆனால், புண்ணியப்பேறு இல்லாத அறிவற்றவர் பொழுது போகவில்லையென்று கருதி நீண்ட பொழுதைச் சூது என்ற வாள் கொண்டு வெட்டுவர்” என்று சூதாடுவதன் தீமையைக் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.

ஓதரு – மிகுந்த, சொல்ல முடியாத; விசை – விரைவு, வேகம். போது - பொழுது.
மேதையர் – அறிவுடையோர்; பொறி – அறிவு, புண்ணியம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-23, 6:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே