இன்னிசை இருநூறு - வாழ்த்து 8

இன்னிசை இருநூறு - பாடல் 8
இன்னிசை வெண்பா

வானம் பரவுதூஉம் வானம் பரவுதூஉம்
ஞான முதல்வ னருள்போல ஞாலக்குப்
பானமு மாகி வளமும் பலவளித்துத்
தானே துணையா தலான். 8

ஞாலக்கு – ஞாலத்துக்கு

புரிந்து கொள்ள எளிமையாக சந்தி பிரித்து இப்பாடல்:

வானம் பரவுதூஉம் வானம் பரவுதூஉம்
ஞான முதல்வன் அருள்போல ஞாலக்குப்
பானமும் ஆகி வளமும் பல அளித்துத்
தானே துணையா தலான். 8

இப்பாடலைப் படித்தவுடன் பலருக்கும்,

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12 வான்சிறப்பு

என்ற குறட்பா ஞாபகத்திற்கு வரும். அதே பொருளில் இவ்வாசிரியர் வானத்தை வாழ்த்திப் பாடுகிறார்.

தெளிவுரை:

வானத்தை வாழ்த்துகிறேன். அது அறிவிற் சிறந்த ஞானமாக விளங்கும், எல்லாவற்றிற்கும் முதற்பொருளான இறைவனின் திருவருள் போலவே, இந்தப் பரந்த உலகத்துக்கு உண்ணும் நீராகி, உற்பத்தி விளைச்சல் பலவும் கொடுத்து தானே உதவியாக இருப்பதால் வானத்தை, மழையைப் போற்றிப் பாடிப் பரவசம் கொள்கிறேன் என்கிறார் இப்பாடலாசிரியர்.

மாணிக்கவாசகர் தனது திருவெம்பாவையில் மழையைப் பற்றிப் பாடும்பொழுது,

.................................’நம்தம்மை ஆள்உடையாள்
தன்னில் பிரிவு இலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னி, அவள், நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய்!’

என்று பாடிய திறனும் இங்கு நினைந்து மகிழுதற்குரியது.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த எட்டாம் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (25-Mar-23, 10:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே