இன்னிசை இருநூறு - வாழ்த்து 7

இன்னிசை வெண்பா

தூய மலர்தூ யிறைஞ்சுதூஉந் தொண்டியற்றித்
தாய்தந்தை யாசா னிவர்தம்மைச் சார்பாய
காயமு நல்லறிவு மீந்து கடவுளை
ஆயத் துணைநிற்ற லான். 7

புரிந்து கொள்ள எளிமையாக சந்தி பிரித்து இப்பாடல்:

தூய மலர்தூயி இறைஞ்சுதூஉம் தொண்டு இயற்றித்
தாய்தந்தை ஆசான், இவர்தம்மைச் சார்பாய
காயமும் நல்லறிவும் ஈந்து கடவுளை
ஆயத் துணைநிற்ற லான். 7

இதன் பொருளைத் தெரிந்து கொள்ள, நாம் வார்த்தைகளையும் வரிகளையும் சிறிது முன் பின்னாக, ‘தாய், தந்தை, ஆசான் (ஆகியவர்கள்) தொண்டு இயற்றிச் சார்பாய காயமும் நல்லறிவும் ஈந்து கடவுளை ஆயத் துணை நிற்றலான், இவர் தம்மைத் தூய மலர் தூவி இறைஞ்சுதும்’ என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

தெளிவுரை:

தாய், தந்தை, ஆசான் ஆகியவர்களை, ஒன்றுக்கொன்று பொருத்தமுடையதாகச் செயல்படும் உடலையும், நல்லறிவினையும், தந்து இறைவனை ஆலோசித்துத் தெரிந்தெடுத்துக் கொண்டாடும்படி செய்கின்ற தொண்டின் காரணமாகத் தூய்மையான மலர்களைத் தூவிப் பணிந்து போற்றுகின்றேன் என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த ஏழாம் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (25-Mar-23, 9:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே