நகையாகும் யானைப்பல் காண்பான் புகல் - பழமொழி நானூறு 298

நேரிசை வெண்பா
(’ன’ ‘மி’ மெல்லின எதுகை)

மானமும் நாணும் அறியார் மதிமயங்கி
ஞானம் அறிவார் இடைப்புக்குத் - தாமிருந்து
ஞானம் வினாஅய் உரைத்தல், நகையாகும்
யானைப்பல் காண்பான் புகல். 298

- பழமொழி நானூறு

பொருளுரை:

தகுந்த நூல்களைக் கல்லாதவர் தம் மானமும் நாணும் அழிதலை அறியாதவராய், அறிவு மயங்கி, பல நூல்களையும் கற்ற அறிவுடையோர் நடுவிற் புகுந்து அவர்களுக்கு இணையாகத் தாமும் இருந்து நூல்களை வினாவி உரைக்கப் புகுதல் யானையைப் பல் பிடித்துப் பார்க்கப் புகுதல் போல் யாவர்க்கும் நகைதரும் செயலாகும்.

கருத்து:

கற்றார் அறிவின் திறனைக் கல்லார் அறிய முயலுதல் நகைப்பிற்கிடமாகும்.

விளக்கம்:

மானம் – தந்நிலையில் தாழாமையும், தாழ்வு வந்தபொழுது வாழாமையும் ஆகும்.

நாணம் - தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடைய தன்மை.

ஞானம் - வீடுபயக்கும் உணர்வு, அவ்வுணர்வை நூல்கள் தருதலின் நூல்களுக்காயிற்று.

மதிமயங்கி என்பது ஞானம் அறியார் இடைப்புகுதலே அவர்க்கு இயல்பு என்பதாம்.

ஞானம் வினாவி உரைத்தலோடு நில்லாமல் அவரோடு ஒப்ப வீற்றிருந்த செய்கை நகைப்பிற்கு இடமாயிற்று.

'யானைப் பல் காண்பான் பகல்' என்பதும் ஒரு பாடம்.

'யானைப்பல் காண்பான் புகல்' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Mar-23, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே