தாய்மிதித்த ஆகா முடம் - பழமொழி நானூறு 299

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு, ’மி’ எதுகை)
.
உளைய உரைத்து விடினும் உறுதி
கிளைகள்வாய்க் கேட்பதே நன்று – விளைவயலுள்
பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர!
தா’ய்’மிதித்த ஆகா முடம். 299

- பழமொழி நானூறு

பொருளுரை:

நெல் விளைகின்ற கழனியுள் பூக்களை மிதித்து பறவைகள் தம்மிற் கூடி மகிழும் குளங்களையுடைய நீர் நாடனே! தாயால் மிதிக்கப்பட்டன கால் முடம்படுதல் இல்லை. ஆதலால், மனம் நோவுமாறு உரைப்பராயினும் உறுதியாயினவற்றை சுற்றத்தாரிடத்துக் கேட்டறிதலே நல்லது.

கருத்து:

சொற்கொடுமை நோக்காது உறுதியாயினவற்றை உறவினரிடத்துக் கேட்டறிக.

விளக்கம்:

'உளைய உரைத்துவிடினும்' எனவே, சுற்றத்தார் எது செய்தாயினும் நல்வழியில் நிறுத்தும் கருத்துடையார் என்பது அறியப்படும்.

மனம் உளையுமாறு உரைத்தால் தனக்கு நல்லது சொல்வதாக அறிந்து கொள்வான் என்பது கருதித் தீமையையும் மனம் உளையுமாறு உரைப்பாரும் உளராகலின், 'கிளைகள் வாய்க் கேட்பதே நன்று' என்றார்.

மிதித்த என்பது செயப்பாட்டு வினைப்பெயர். தாயால் மிதிக்கப்பட்டன முடமாதலைக் காண்டலில்லை. சுற்றத்தார் நோவ உரைப்பினும், அதனான் வரும் குற்றமொன்றுமில்லை.அவரைக் கேட்டே அறிக.

'தாய் மிதித்த ஆகா முடம்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Mar-23, 8:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே