என் இதயக்கோவிலிலிருந்து வெளியேறிய ஒருவர்

மனிதனை அல்லது ஞானி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு சந்நியாசியை அசைவம் உண்பவர் என்றால், அதனால் நாம் ஆச்சரியம் அடைவதில்லை. ஆனால் அகில உலக அளவில் மதித்துப் பேசப்படும், இந்தியாவின் மகிமை நிறைந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அசைவம் உண்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களால் ஏற்கமுடிகிறதா என்பது எனக்குத்தெரியாது. இவர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் புலால் உண்ணாத குடும்பத்தில்தான் பிறந்தார் என்னும் செய்தி, மனதிற்கு சங்கடத்தை இன்னும் அதிகரிக்கத்தான் செய்கிறது..

இவருடைய பிரதம சீடரான விவேகானந்தர் அசைவம் உண்ணும் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சீடரான பின்னும் விவேகானந்தர் அசைவ உணவுகளை சாப்பிட்டுத்தான் வந்தார். இப்படிப்பட்டவருக்கு காச நோய் ஏன் எப்படி வந்தது, அதனால் அவர் மரணம் அடைந்தார் என்பது சற்று ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது. இந்த இரு ஆன்மீகவாதிகளும் தூய அன்பையே கடவுளை அடைய முக்கிய காரணம் என்று உறுதியாக வலியுறுத்திவந்தவர்கள்.

நான் அறிந்தவரை பிரசித்தி பெற்ற ஆன்மீகவாதிகள் பொதுவில் சைவ உணவு உண்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், ஏன் இருந்தும் வருகிறார்கள். ஒருவரின் பசியை போக்கிக்கொள்ள ஓரறிவுள்ள தாவரங்களை உண்ணுதல் தவறில்லை பாபமும் இல்லை என்று பல பெரிய உயர்ந்த ஆன்மீகவாதிகளும் ஞானிகளும் சொல்ல கேட்டிருக்கிறேன். கிளையோடு கிள்ளி எடுக்கும் தாவரங்களைத்தவிர மற்ற காய் கனிகள் ஒரு மரத்திலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ பறிக்கப்படுகிறது. அந்த மரமோ செடியோ அதற்காக அழிக்கப்படுவதில்லை. மற்றபடி மரங்களையும் செடிகளையும் வெட்டிப்போடுவது சமுதாயத்தின் மற்றும் நாடு வளர்ச்சிக்கும் என்கிற பெயரில்தான் நடந்துவருகிறது. இன்னுமொரு தகவலை இந்த இடத்தில குறிப்பிட விரும்புகிறேன். தாய்மை மற்றும் பாசம் இவற்றை பொறுத்தவரை தாவரங்களின் உணர்ச்சி கொள்ளும் நிலை சிறிதும் இல்லை என்றே கூறவேண்டும். இவ்வளவு கூறிவிட்டு நான் இதையும் சொல்லியே ஆகவேண்டும், இன்னொரு உயிர் என்கிற முறையில் நாம் தாவரங்களை அழிப்பது, அதன் காய் கனிகளை பறிப்பது இவைகூட ஒருவித பாபச்செயலே ஆகும். இந்தச் செயலை நான் ஒரு திருடன் பிக் பாக்கெட் செய்வதற்கு ஈடானது என்றே கருதுவேன். அப்படி என்றால் விலங்குகளை கொலைபுரிவித்து உண்ணுதல் எத்தகைய குற்றம் என்பதை நீங்களே நினைத்துப்பாருங்கள்.

நம் கண் எதிரில் நம்மைப்போலவே தாய்மை பாசம் கொண்டு வளரும் பலவிதமான விலங்குகளை உணவிற்காக கொல்லுவது தாவரங்களைக்கொல்லுவதை விட பலமடங்கு பெரிய பாபமாகும் என்பதை நம் எவராலும் புரிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட சில மீன்வகைகளை நாம் மீன் தொட்டியில் இட்டு வளர்க்கிறோம். ஏன், அவற்றுடன் பிரியமாக இருக்கிறோம். ஆனால் மற்ற நீர் நிலைகளிலிருந்து பிடிக்கப்பட்டு இறக்கும் பலவகையான மீன்களை நாம் சமைத்து ரசித்து ருசித்து மகிழ்கின்றோம். இதைப்போலவே சேவல் கோழிகளும் ஆடுகளும் மாடுகளும். அன்புடன் வீட்டில் வளர்க்கப்பட்ட இந்த உயிர்கள் ஒருநாள் மனிதர்களின் உணவுக்காக கொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பாரபட்சமான செயல்களை ஒரு அன்புகொண்ட மனித மனம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

ராமகிருஷ்ண பரமஹம்சரை ஒரு குளவி கொட்டியதாம். அவர் அதை மெதுவாக எடுத்து கீழே விட்டாராம். குளவி மீண்டும் அவரை கொட்டியதாம். மீண்டும் அவர் அதை மெதுவாக எடுத்து கீழே விட்டாராம். இவ்வாறு பலமுறை நடந்ததும் அருகில் இருந்த அவரது சீடர்கள் " குளவி உங்களின் கையில் பலமுறை கொட்டியதால் ரத்தம் வந்தும் உங்களுக்கு வலி இருப்பினும் அதை நசுக்கிப்போடாமல் மீண்டும் மீண்டும் கீழே எடுத்து விடுகிறீர்கள்" என்று கேட்டனாராம். அதற்கு பரமஹம்சர் சொன்னாராம் " குழவியின் வேலை என் கையை கொட்டுவது, என்னுடைய கடமை அதை காப்பாற்றுவது. எப்படி குளவி அதன் தர்மத்தில் வழுவாமல் இருக்கிறதோ நானும் என் தர்மத்திலிருந்து வழுவாமல் இருக்கிறேன்".

இப்படிபட்ட மனிதநேயம், பிற உயிர்களிடத்து அன்பு கொண்ட பரமஹம்சர்
எப்படி புலால் உண்டார் என்பதை நினைக்கையில் எனக்கு நம்பவே முடியவில்லை. தன்னைக் குளவி ஒன்று கொட்டியபோது அஹிம்சை வழியைப் புரிந்து அதை போதித்த ராமகிருஷ்ணர், தினசரி வாழ்வில் மனிதனால் கொல்லப்பட்டு உணவாக சமைக்கப்பட்ட புலாலை எந்த காரணத்தினால் உண்டார் என்பது என்னை பொறுத்தவரை ஒரு பெரிய கொள்கை முரண்பாடு. இவரது முதன்மை சீடரான விவேகானந்தர் ஏன் அசைவம் உண்டு வாழ்ந்தார் என்று இப்போதும் நான் அவ்வப்போது நினைத்து மனம் பேதலிப்பேன். அப்படி இருக்கையில், அவரது குருவும் சீடரின் வழிதான் என்பதை கேள்விப்படுகையில் மிகவும் வேதனை கொள்கிறேன். இவர்கள் வசித்த மேற்குவங்காளத்தில் பொதுவாக அனைவரும் அசைவம் உண்பவர்கள் என்பதை, இதற்கு ஒரு சாக்காக அல்லது காரணமாக சொன்னால் அதை ஏற்றுக்கொள்பவன் நான் இல்லை. இன்னொரு தகவல், இந்தியாவிலேயே அதிகமான அளவில் புலால் உண்பவர்கள் கொண்ட மாநிலங்களில் மேற்கு வங்கம் முதல் இடத்தில், நமது அருமைத்தமிழகமோ அதிகம் சளைக்காத இரண்டாவது இடத்தில்.

ரமண மகரிஷியை எடுத்துக்கொள்ளுங்கள், அருட்பிரகாச வள்ளலாரை எடுத்துக்கொள்ளுங்கள், சேஷாத்திரி ஸ்வாமிகளை எடுத்துக்கொள்ளுங்கள், யோகிராம் சுரத்குமாரை எடுத்துக்கொள்ளுங்கள், தபோவனம் வாழ்ந்த கிரி ஞானாநந்தாவை எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் பக்தி மற்றும் ஆன்மீக மார்கத்து உதாரணங்களாக கருதப்படுபவர்கள். இவர்கள் அவதரித்த மாநிலம் மேலே குறிப்பிட்டபடி இந்தியாவில் அதிக மக்கள் அசைவம் சாப்பிடும் இரண்டாவது மாநிலமான தமிழ்நாடு. இருப்பினும் இவர்கள் அனைவருமே சைவம் மட்டுமே புசித்தவர்கள்தான். மேலே குறிப்பிட்ட துறவிகள் மற்றும் ஞானிகளின் ஆசிரமங்களில் இப்போது புலால் பரிமாறப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, அங்கே சென்றுவரும் பக்தர்களில், உபாசகர்களில் எவ்வளவு பேர் இந்த ஆசிரமங்களுக்குத் தொடர்ந்து செல்வார்கள்?

அருட்பிரகாச வள்ளலார் தமிழ்நாட்டு மண்ணில் பிறந்து, தெய்வீக ஆற்றல் கொண்டு, ஆறாயிரம் பக்தி பாடல்களை இயற்றி, முடிவில் உயிர் கொல்லாமை கூடிய, பிறரையும் தன்னைப்போலவே நினைக்கும் உயரிய அன்புதான் தெய்வீக நிலை என்கிற உன்னதமான கருத்தைத் தெளிவாக மக்களுக்கு போதித்து, ஜீவகாருண்யம் என்னும் உன்னதமான வாழ்க்கை குறிக்கோளை மக்கள் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்திய எளிய ஆனால் வலிமையான உயர்ந்த மனிதர். இப்படிப்பட்ட ஒரு மகான் நம் மாநிலத்தில் அவதரித்தது நாம் அனைவரும் செய்த புண்ணியம் என்றே நான் கருதுகிறேன். இந்த மாமனிதருக்கு முன்பாக உலகம் போற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும் ஒன்றுமே இல்லை என்று நான் ஆணித்தரமாகக் கூறுவேன்.

இன்னாள் வரையில் என்மனக்கோவிலில் மூன்று மனிதர்களை அற்புதமான தெய்வீக முனிவர்களாக நிலைநிறுத்தி அவர்களை மனதாராத்தொழுதுவந்தேன். ஆனால் இன்று என் மனக்கோவிலிலிருந்து ஒருவர் எழுந்து வெளியே ஓடிவிட்டார். இப்போது என் இதயகோவிலை அலங்கரிக்கும் இரண்டு அறிய அற்புதமான மகான்கள் 1 . வள்ளலார் இராமலிங்க அடிகள் 2 . திருவண்ணாமலை மாமுனி ரமண மகரிஷி.
கோவிலில் மூன்றாவது இடம் காலி இருக்கிறது. இந்த இடத்தில ஏதாவது மகான் வந்து அமருவாரா என்பது போகபோகத்தான் தெரியும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Mar-23, 9:19 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 110

சிறந்த கட்டுரைகள்

மேலே