சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு - பழமொழி நானூறு 313
நேரிசை வெண்பா
தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு. 313
- பழமொழி நானூறு
பொருளுரை:
பாம்பானது தெளிவாகத் துயர்செய்யப்படும் தன்மையது ஆயினும், அறிவுடையோர் கூட்டத்திற் சென்றால் இறவாது;
அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் தெளிவாக அறியப்பட்ட பகைவர்கள் அடையும் துன்பத்தினைக் கண்டால், தமக்குப் பல பிழைகளைச் செய்தவராயிருப்பினும் மீண்டும் அவரிடத்தில் கண்ணோட்டம் செலுத்துவர்.
கருத்து:
சான்றோர் துன்பப்படுபவர் தம் பகைவராயினும் அத்துன்பத்தை நீக்க முயலுவர்.
விளக்கம்:
இங்ஙனங் கண்ணோட்டஞ் செலுத்துவது ஊராண்மை எனப்படும். அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன்றானை முழுதும்படத் தமியனா யகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்திய ரிறை மேற்செல்லாது 'இன்று போய் நாளை வா' வென விட்டாற் போல்வது என்பர் பரிமேலழகர்.
'சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு' என்பது பழமொழி.