இந்தத் துறவிகள் செய்த காரியம் சரிதானா
ராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் மனைவியுடன் தாம்பத்திய வாழ்க்கையை தவிர்த்து, அவளையும் முழுநேர பக்திமார்கத்தில் ஈடுபடச்செய்தார். அதனால் சாரதா எனும் ஒரு திருமணமாகிய பெண், சாரதா தேவியானாள். திருமணம் செய்துகொள்வதின் மூலநோக்கம் என்ன? திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் ஒருவரை ஒருவர் அன்புடன் நேசித்த வண்ணம், குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, அவரவர் கடமைகளைச் சரிவர செய்துகொண்டு ஒருவரை ஒருவர் எக்காலத்திலுக்கும் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் இணைந்த வாழ்வதுதானே? அதைவிடுத்து பேருக்காக திருமணம் செய்துகொண்டு, குடும்பவாழ்க்கை நடத்திவந்த மனைவியின் மனதை மாற்றி அவளையும் பக்திமார்கத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடச்செய்தது ராமகிருஷ்ண பரமஹம்சரின் சரியான செயலாக எனக்கு தென்படவில்லை. அவர் போதித்த கருத்துக்களும் நெறிமுறைகளும் மக்களுக்கு நன்மையை பயக்கலாம். ஆனால் அவர் செய்த மேற்கூறிய செயல் எந்தவிதத்தில் நெறிமுறைக்குட்பட்டது என்பது சாதாரண மனிதனான எனக்கு நிச்சயம் விளங்கவில்லை.
இராமலிங்க அடிகளாரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய கொல்லாமை, கருணையே இறைவன் என்பது போன்ற கருத்துக்களை முற்றிலும் ஆதரிப்பவன் நான். இருப்பினும் அவர் வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலின்காரணமாக திருமணம் செய்துகொண்டு, தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடாமல் அவர் மனைவியை தனிமைப்படுத்தியதை நான் சரியான செயலாகவே கருதவில்லை. ஆயிரம் இருப்பினும் திருமணம் செய்துகொள்வது தாம்பத்திய உறவுக்காக, குடும்ப விருத்திக்காக, இல்லற வாழ்க்கையை அனுபவிப்பதற்காக. இதைவிடுத்து 'நானும் திருமணம் செய்துகொண்டேன்' என்று சொல்வதற்காக திருமணம் செய்துகொண்டு அடுத்தநாளே மனைவியை விட்டுத் துறவறம் நாடிச்செல்வது மனிதஒழுக்கத்தின் நெறிதானா? மனிதாபிமானத்தின் முறைதானா?
மந்திராலயம் ராகவேந்திரா ஸ்வாமிகளைப்பற்றி பலரும் அறிவார்கள். அவர் திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலேயே இல்லற வாழ்விலிருந்து வெளியேறி துறவறம் மேற்கொண்டார். மிகவும் சிறிய வயதான அவரது மனைவிக்கு ராகவேந்திரர் செய்த காரியம் அப்படியொரு துன்பத்தையும் கவலையையும் அளித்தது. சிறிது நாட்களில் கல்யாணம் ஆகி கைவிடப்பட்ட அந்த இளம்பெண் தற்கொலை புரிந்துகொண்டாள். ராகவேந்திரரை குருவாகவும் தெய்வமாகவும் கொண்டவர்களை கேட்டால் ' அது அந்த பெண்ணின் விதி அவளது கர்மா' என்று எளிதாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் என்னைப்பொறுத்தமட்டில் தன் மனைவியின் சாவுக்கு அவளது தற்கொலைக்கு ராகவேந்திரர்தான் தார்மீகப்பொறுப்பு ஏற்கவேண்டும். துறவறம் பெற்றுக்கொண்டு ராகவேந்திரர் ஏராளமான நற்காரியங்களை செய்தார் என்றாலும், அவர் மனைவியை கைவிட்டு அதனால் அவள் தற்கொலை செய்துகொண்டதற்கு ராகவேந்திரர் தான் மூல காரணம். அத்தகைய காரியம் நிச்சயமாக மனிதகுலத்திற்கு ஒரு வழிகாட்டும் செயலாக நிச்சயம் இல்லை, இருக்கவும் கூடாது. இன்னொரு உயிரை எடுக்கக் காரணமாக இருந்த ஒருவரை தெய்வமாக போற்றுதல் எந்த அளவுக்கு சரி என்பது, என்னைப்பொறுத்தவரை சந்தேகமின்றி கேள்விக்குறிதான்.
கௌதம புத்தர் அவரது பதினாறாம் வயதில் திருமணம் கொண்டார். சிலவருடங்களுக்கு பிறகு தந்தையும் ஆனார். ஆயினும் அவரது இருபத்திஒன்பதாம் வயதில் ஒரு நிகழ்வைப்பார்த்தத்தினால் மனம்மாறி இல்லறவாழ்கையை விடுத்தது துறவறம் மேற்கொண்டார். தனது சுயநலத்திற்காக புத்தர் மனைவியையும் குழந்தையும் உதறிவிட்டு துறவறம் பூண்டார். எவ்வளவோ போதனைகள், அறிவுரைகள் வழங்கிய புத்தர் அவர் வாழ்வில் செய்த மேற்குறிப்பிட்ட செயல் உண்மையில் ஒரு பொறுப்புள்ள கணவன் செய்யும் செயலா, ஒரு மனிதநேயம் கொண்ட மனிதன் செய்யக்கூடிய செயலா?
நான் கூறியவை மேலோட்டமாகப்பார்க்கும்போது 'என்னடா இந்த ஆள் பைத்தியக்காரன் போல பிதற்றுகிறான்' என்று தோன்றும். ஆனால் உங்கள் மனசாட்சிகொண்டு நீங்கள் இந்த ஒவ்வொரு மகானின் செயல்களை தீர ஆலோசித்து அலசிப்பார்த்தால் நீங்களே அறிந்துகொள்ளலாம் , திருமணம் செய்துகொண்டு மனைவியை தனிமைப்படுத்திச்சென்ற இந்த பிரபலமான துறவிகளின் செய்கைகள் சரிதானா, இல்லையா என்று. எங்கு நல்ல கருத்துக்களும் எண்ணங்களும் இருப்பினும் அதை நான் மனமுவந்து நன்றியுடன் வரவேற்பவன். அந்த வகையின் மேலே குறிப்பிட்ட புகழ்வாய்ந்த மகான்களின் பல கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அந்த மகான்களின் செயல்களை அல்ல.
அந்த வகையில் நான் ரமண மகரிஷி, ஆதி சங்கரர் போன்றவர்களை கைகூப்பி தொழுகிறேன். இவரைபோன்றவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் அவர்களது ஆன்மீக பாதையில் முற்றிலுமாக மூழ்கி திளைத்தனர்.