அயல்நாடு மோகம் அந்நியராகும் சோகம்
பிறப்பது வளர்வது தாய்நாடு
பறக்கத் துடிப்பது அயல்நாடு !
அடித்தளம் அமைப்பது இங்கே
வாழ்ந்திட விரும்புவது அங்கே !
ஆரம்பகால வாழ்வு இங்கு
ஆடம்பரமாய் வாழ்வது அங்கு !
உதவிகள் கேட்பது பெற்றோரை
உதறித் தள்ளுவது உற்றோரை !
ஆளாக்கி விட்டவர்கள் அந்தரத்தில்
அந்நியரை வைப்பது உயரத்தில்
இறுதிக் காலத்திலும் வாராது
இறுகிய இதயமும் உருகாது !
கல்லாகிப் போன உள்ளங்கள்
வில்லாக வளையாத மனங்கள் !
சடலத்தை காட்டிடும் கைபேசி
சலனமின்றி காணும் நெஞ்சங்கள் !
மறந்து விடுகின்றனர் உறவுகளை
துறந்து வாழ்கின்றனர் துறவிகளாக !
மோகத்தில் சுழல்கிறார் அங்குள்ளவர்
சோகத்தில் உழல்கிறார் இங்குள்ளவர் !
கற்றுப் பெற்றதை சேமித்து
செலவிட செல்கிறார் காசாக்க !
பிறப்பிடம் மறந்து துடிப்பதேன்
இருப்பிடம் இருக்க செல்வதேன் !
சிந்தியுங்கள் சிலநொடி ஒருமுறை
சிந்தாதீர் கண்ணீர் பலமுறை !
முந்துங்கள் திரும்பிட நீங்களும்
உந்துதல் தேவை உங்களுக்கும் !
வாதாட வரவில்லை உங்களுடன்
போதாத காலமென நினையாதீர் !
தாயகத்தை மறவாதீர் ஒருபோதும்
மனிதனாக்கிய மண்ணே நிரந்தரம் !
பழனி குமார்
26.04.2023