திடீர் மரணம்

திடீர் மரணம்

அமிர்தலிங்கத்திற்கு இன்று காலை விடியல் மன குழப்பத்தில் ஆரம்பித்து விட்டிருந்தது.
நல்ல கனவொன்றில் ஆழ்ந்திருந்த அமிர்தலிங்கத்தை அவன் மனைவி தட்டி எழுப்பிய போதே ஏழு மணியை தொட்டிருந்தது. ஏங்க எந்திரிங்க, ஞாயித்து கிழமைன்னா இந்நேரம் வரைக்குமா தூங்குவீங்க?
அவள் தன்னை தட்டியதும் சட்டென்று விழிப்பு வந்து விட்டாலும், கண்ணை விழித்து பார்க்க முடியவில்லை. எரிந்தது. நேற்று இரவு ஒரு மணி வரையிலும் அடுப்பு தீயின் அருகே நின்று கொண்டிருந்தது, இப்பொழுது விழித்ததும் கண்ணை பொங்க செய்கிறது.
ஒருவாறு சமாளித்து கண்ணை சிரமப்பட்டு திறந்து ஏம்ப்பா இன்னைக்கு ஒரு நாளுதான் ஓய்வா இருக்க முடியுது, அதுக்கும் இடைஞ்சல் பண்ணறே, கொஞ்ச நேரம்தாம் விடேன்,
அவளுக்கும் தெரிந்துதான் இருந்தது. பாவம் பெரிய ஓட்டலில் குக் வேலை, நிறைய நேரம் அடுப்புக்கருகிலேயே நின்று கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் சர்வீசான ஆள் என்று இவருக்கு ஞாயிற்று கிழமை ஓய்வு கொடுக்கிறார்கள். இல்லையென்றால் வாரம் முழுக்க “ஷிப்ட்” காலையும் இரவும் மாறி மாறி வரும்.
ஏங்க நான் என்ன வேணுமின்னா உங்களிய எழுப்பறேன், உங்க பிரண்டு சொலையண்ணன் காலையில இறந்துட்டாராம், இப்பத்தான் பக்கத்து வீட்டு அக்கா சொல்லிட்டு அவங்க வூட்டுக்கு கிள்மபி போகுது, என்னிய வாறியான்னு கேட்டுச்சு, நான் நீங்க தூங்கிட்டு இருக்கறதுனால, உங்களுக்கு விவரம் சொல்லிட்டு போகலாமுன்னு நின்னுட்டேன். நீங்க அப்புறமா கிளம்பி வாங்க. பசங்களை எழுப்பாண்டாம், அவங்க தூங்கட்டும், முன் கதவை திறந்து வெளியே சென்றவள் கதவை அப்படியே சாத்திவிட்டு சென்றாள்.
சொலையண்ணன் இறந்துட்டானா? இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரவு அவனுடன் தான் வீட்டுக்கு வந்தோம். நன்றாகத்தானே இருந்தான், என்னைய விட இரண்டு மூணு வயசு சின்னவந்தானே, என்னாச்சு தெரியலையே? மனம் பரபரப்பாய் கேட்டபடி இருந்தாலும் உள் மனசு அவன் வாங்கியிருந்த பத்தாயிரம் ரூபாயை நினைத்து அதிர்ந்து போயிருந்தது.
அமிர்தா நீ கொடுத்து வச்சவண்டா”உனக்கு வாய்ச்ச பொண்டாட்டி” நல்லா குடும்ப செலவை இறுக்கி பிடிச்சு வச்சுக்கறா..சொல்லும்போதே பெருமூச்சு வெளிப்படும்.
ஏன் உன் சம்சாரத்துக்கு என்ன குறை? இருபது வருசமா நல்லாத்தானே நடத்திகிட்டு இருக்குது?
எங்க..இழுத்தவன், அவ சிக்கனம் பேசறது எங்கிட்ட மட்டும்தான், பையன் வந்தானா அவன் எவ்வளவு கேட்டாலும் கையில கொடுத்து விடறா, அதனால அவனுக்கு குடும்ப கஷ்டம் என்னண்ணு புரியமாட்டேங்குது, நான் அடுப்படியில வெந்து வாங்கிட்டு வர்ற சம்பளம் முதலாளி ஏதோ சும்மா நமக்கு கொடுக்கறமாதிரி நினைச்சு செலவு பண்ணறான், அலுத்து கொண்டார்.
சின்ன வயசுல பசங்க அப்படி இப்படித்தான் இருப்பானுங்க, எல்லாம் சரியா போயிடும், சமாதானப்படுத்துவான்
எங்க., இந்த வயசுல எல்லா கெட்ட பழக்கமும் வந்தாச்சு, இனி அடிச்சா திருத்த முடியும்., அவங்கம்மாகிட்ட சொன்னோமுன்னா பையன கரிச்சு கொட்டாதேங்கறா.
அமிர்தலிங்கத்திற்கும் அவனது நடவடிக்கைகளை பற்றி தெரிந்துதான் இருந்தது, இவனிடம் சொன்னால் வருத்தப்படுவான் என்பதால் அமைதியாக இருந்தான். சொலையண்ணனை விட ஓரிரு வயது கூட இருந்தாலும் சொலையண்ணனுக்குத்தான் முதலில் கல்யாணமானது. அமிர்தலிங்கத்திற்கு தம்பியும் அக்காவும் இருந்ததால் அவர்களுக்கு ஒரு வழி செய்த பின்னே கல்யாணம் செய்ததால் குழந்தைகள் சிறுசுகளாக
இருந்தன.
வேலையில் அமிர்தலிங்கம்தான் சீனியர், சொலையண்ணனை இங்கு அழைத்து சம்பளக்கார ‘குக்காக’ கொண்டு வந்தது எல்லாமே இவன்தான். அதனால் அவ்வப்பொழுது உரிமையுடன் பேசுவதும் உண்டு. அந்த உரிமையின் நம்பிக்கையில் மனைவிக்கு தெரியாமல் சீட்டு போட்டு சேர்த்து வந்த பத்தாயிரத்தை அவனிடம் கொடுத்து அக்கம் பக்கம் கடனை எல்லாம் அடைச்சு, கொஞ்சம் நிம்மதியாய் இரு என்று சொல்லியிருந்தான். ஆனால்..! இப்படி இந்த வயசுல போய் சேருவான் என்று எதிர்பார்க்கவில்லை.
இவன் அங்கு போகும்போது அக்கம் பக்கத்து ஆட்கள் உட்கார்ந்திருந்தனர், இவனை உள்ளே போய் “பாடியை” பார்த்து விட்டு வரும்படி சைகை காட்டினார்கள். சிறிய வாசல் வைத்த ஒண்டு வீடாய் இருந்தது. தலையை குனிந்து உள்ளே போனான். சொலையண்ணன் படுக்க வைக்கப்பட்டிருந்தான். சுற்றிலும் இரண்டு மூன்று பெண்கள் மட்டும் உட்கார்ந்திருந்தனர். அவ்வளவுதான் இடமும் இருந்தது. சொலையண்ணனின் மனைவி அவன் முகத்தை பார்த்து தலை கவிழ்ந்து கொண்டாள்.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை, வெளியே வந்தான். சொலையண்ணனின் பையனை தேடினான், அவன் “எரிக்க” ஏற்பாடு செய்ய சென்றிருப்பதாக உட்கார்ந்திருந்தவர்கள் சொன்னார்கள். காலியாய் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். சற்று தள்ளி உட்கார்ந்திருந்தவர் இவன் அருகில் வந்து உட்கார்ந்தார். சுமார் ஐம்பது வயதிருக்கலாம்.
நீங்க? இவனிடம் பேச்சு கொடுத்தார்.
நாங்க இரண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யறோம், நேத்து இராத்திரி ஒண்ணாத்தான் வீட்டுக்கு வந்தோம். நல்லாத்தான் பேசிட்டு வந்தான். சொல்லும்போதே குரல் இடறியது.
அவர் அவனது முகத்தை உற்று பார்த்தவர் அதுதான் எங்களுக்கு புரியலை, இராத்திரி உங்களோட வந்தவன் காலையில் மாரடிச்சு போயிருக்கான்னா..? அவரின் பேச்சு இவனுக்கு சட்டென்று புரியவில்லை, அவர் முகத்தை உற்று பார்த்தான். அவர் எனக்கு டவுட்டாத்தான் இருக்கு, அவன் கூட ஒண்ணா வேலைய செய்யறவன்னு சொல்றீங்க, வேலைய செய்யற இடத்துல..
அவனுக்கு மெல்ல உரைத்தது, இந்த ஆள் இறப்புக்கு துக்கம் கேட்க வரவில்லை, இதற்கு ஆதாயம் தேட வந்திருப்பவன். கோபம் சுறு சுறுவென ஏறியது, என்றாலும் இழவு வீட்டில் அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாது, பல்லை கடித்தபடி “ஐயா எனக்கு அதெல்லாம் தெரியாது” நான் என்னோட வேலை செஞ்சவன் செத்துட்டான்னு துக்கம் விசாரிக்க வந்துருக்கேன். உங்களுக்கு மேற்கொண்டு ஏதாவது தெரியணும்னா அவன் வேலை செய்யற ஓட்டல்ல போய் கேளுங்க, சொல்லி விட்டு வேகமாக அந்த நாற்காலியை விட்டு எழுந்து நகர்ந்தான்.
இவன் எழுந்து செலவதை பார்த்து கொண்டிருந்தவர், அமைதியாய் அப்படியே உட்கார்ந்திருந்தார். அமிர்தலிங்கம் நகர்ந்து சற்று தள்ளி உட்கார்ந்து கொண்டாலும் ஒரு கண் வைத்து இவரை கண்காணித்து கொண்டிருந்தான். இவர் ஏதோ சிக்கலை உருவாக்க வந்திருக்கிறார் என்பது மட்டும் மனதுக்கு புரிந்தது.
சொலையண்ணனின் பையன் வந்து விட்டான், அவனிடம் சென்று இவன் சம்பிரதயமாக கையை வைத்து கும்பிட்டு வீட்டு மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டான். அமிர்தலிங்கத்திடம் பேச்சு கொடுத்தவர் சொலையண்ணனின் மகனின் அருகில் செல்வதை இங்கிருந்தே கவனித்தான்.
இருவரும் பேசிக்கொள்வதையும் அவ்வப்போது இவனை நோக்கி ஒரு பார்வை பார்ப்பதையும் உணர்ந்தவனுக்கு மனதில் சிறு கோபம் மெல்ல மெல்ல எழுவதை உணர்ந்தான். சொலையண்ணனின் பையன் இவன் அருகில் வந்து அப்பா இறந்ததை உங்க முதலாளிகிட்டே சொல்லிட்டீங்களா?
இல்லை இவன் தலையாட்டிவிட்டு, இந்தா தம்பி மேனேஜரு நம்பரு, முதல்ல நீயே அப்பா இறந்துட்டதை சொல்லு. நம்பரை சொன்னான். சொலையண்ணனின் மகன் அந்த நம்பருக்கு போன் செய்து சற்று தள்ளிப்போய் நின்று பேச ஆரம்பித்தான்.
அரை மணி நேரம் ஆகியிருந்தது, ஒரு டாக்சி வந்து நின்றது, அதிலிருந்து இவர்களது மேனேஜரும் கூட இரண்டு பேரும் வந்திருந்தனர். அவர்களை கண்டதும் இவன் மரியாதையாக எழுந்து அவர்களிடம் சென்று வணக்கம் சொன்னான். அவர்கள் இவனையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
சொலையண்ணனின் மகனை பார்த்து பேசிவிட்டு அவன் கையில் ஒரு கவரை திணித்தனர். முதலாளி உங்க கிட்ட கொடுக்க சொன்னாரு, வேற ஏதாவது உதவி வேணும்னாலும் கேக்க சொன்னாரு, நாங்க வரட்டுமா? அவனிடம் பேசிவிட்டு, இவனை பார்த்து தலையாட்டிவிட்டு வந்த காரிலேயே கிளம்பினர்.
எல்லா காரியங்களும் முடிவதற்கு மணி நான்காகிவிட்டது. அதற்கு பின் வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு அப்படியே களைப்பாய் படுத்தான்.
மறு நாள் ஹோட்டலுக்குள் நுழைந்தவனை முதலாளி அழைப்பதாக சொன்னவுடன் சொலையண்ணனின் மரணம் பற்றித்தான் விசாரிக்க கூப்பிடுகிறார் என்று அவரது அறைக்குள் நுழைந்தான்.
எப்பொழுதும் அவனிடம் சிரித்து எப்படியிருக்கறே? அன்புடன் கேட்பவர் அனறு முகம் மூழுக்க சிந்தனையுடன் அவனை பார்த்தார். முந்தா நாள் எத்தனை மணிக்கு கிளம்புனே?
ஐயா டூட்டி முடிஞ்சு வழக்கம்போல இரண்டு மணி இருக்குமுங்க, கூட செத்து போனவனும் வந்தானா?
ஆமாங்க, தினைக்கும் நாங்க இரண்டு பேரும்தாங்க வூட்டுக்கு போவோம்.
நடந்தா?
ஆமாங்க, அரை மணி நேரம் ஆகும்ங்க. எங்க வூட்டுக்கு முன்னாடியே அவனுடைய வூடு வந்துடும், அவனை விட்டுட்டு நான் வூட்டுக்கு போயிடுவனுங்க.
தினைக்கும் நடக்கறதுதான..?
ஆமாங்க. கூட வரும்போது அவன் குடிச்சிருந்தானா? இல்லை வேற மாதிரியா..?
அப்படியெல்லாம் இல்லீங்க, அவன் இது வரைக்கும் குடிச்சதை பார்த்ததே இல்லீங்க.
நேத்து அவன் பையன் என்னனென்னமோ பேசுனான், இராத்திரி ஓட்டல்ல ஏதோ நடந்திருக்குது, அதனாலதான் எங்கப்பாவுக்கு “ஹார்ட் அட்டாக்” வந்திருக்கு அப்படி இப்படீனு சொல்லிகிட்டிருந்தான்.
அமிர்தலிங்கத்திற்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது, ஐயா எங்கிட்ட கூட கேட்டாங்க, எனக்கு அதை பத்தி ஒண்ணும் தெரியாது, என் கூடதான் ரொம்ப நேரம் இருந்தான், எதுவும் நடக்கலைன்னு சொன்னேன். சொல்வது கூடவே என்றாலும் முதலாளி தன்னை பற்றி தப்பாக நினைத்து விடக்கூடாதே..
ஏதோ கூட போட்டு கொடுக்கலாமுன்னு நினைச்சேன், ஆனா அவன் பேசுன பேச்சுக்கு..முணுமுணுத்தார் முதலாளி.
சரி நீ போ..வேலைய பாரு…
அப்பாடி தப்பித்தோம், மனதுக்குள் நினைத்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தான்.
இரண்டு மூன்று நாட்கள் ஓடியிருந்தன. சொலையண்ணனிடம் கொடுத்த பத்தாயிரம் பணம் அவ்வளவுதான்..! மனம் கேட்க நினைத்தாலும் யாரிடம் கேட்பது? எப்படி கேட்பது?
இதை கேட்டால் நம்பவா போகிறார்கள், இல்லை நீ பணம் கேட்டதாலத்தான் எங்கப்பாவுக்கு இப்படியாச்சு என்று திருப்பிவிட்டால்..!
இரண்டு நாட்கள் கழிந்திருக்கு, வெளியே கிளம்பியவன் முன்னால் சொலையண்ணனின் மகன் வந்து தயங்கி நின்றான். வந்தவனை வரவேற்று பேசவேண்டுமே என்ற மரியாதையில் “வா உள்ள” அழைத்தான்.
மனைவியிடம் வந்தவனுக்கு காப்பி கொடு என்று சொன்னான். காப்பியை குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன், அப்புறம் தம்பி….என்ன சமாச்சாரம் மெல்ல கேட்டான்.
அப்பா உங்களுக்கு ஏதாவது கைமாத்தா பணம் கொடுத்திருக்காரான்னு …? உங்க பேரை எழுதி பத்தாயிரம்னு போட்டிருந்துச்சு அவரு வெச்சிருந்த நோட்டுல..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Apr-23, 10:47 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : thideer maranam
பார்வை : 159

மேலே