வாழ்வின் வசந்தம்

கத்தார் முத்தமிழ் மன்றம் ,கத்தார் புனே பல்கலைக்கழக அரங்கில் கடந்த வெள்ளி மாலை நடத்திய கவியரங்கில் எனக்கு வழங்க்கப்பட்ட "வாழ்வில் வசந்தம் உன்பிறப்புக்களே" என்ற தலைப்பிலான கவிதை இது. .
*
வாழ்வின் வசந்தம் உடன்பிறப்புகளே
**********************
*
கூடப் பிறந்தவங்க கூட இருந்தாலே
கூடாத கூட்டெல்லாம் கூடாம போகுமுங்க
கூடப் பிறந்ததெல்லாம்
கூடவே கூடாதுன்னு
கூடவாழ வந்தவளும் கூடக்கூடச் சொன்னாலும்
கூடப் பொறந்தவங்க கூடி இருக்கையிலே
கூடாத பேரின்பம் கூடித்தான் போகுதுங்க
கூடப் பிறப்பமையக் கொடுப்புனைகள் வேணுமுங்க
கூடிப் பிறந்தவங்க கொடுத்துவச்ச சென்மமுங்க
*
பக்கவாதம் வந்ததுபோல் பாதிப் பாசம்
பரிகாச மாய்க்காட்டும் பாரில், சொந்த
அக்காமார் பாசத்திற் களவே இல்லை
அன்பென்னும் பூங்காவின் வசந்த முல்லை
துக்கங்கள் வந்துநின்று துரத்தும் காலம்
தூரத்திற் கோட்டிவைக்கும் தூய பாசம்
விக்கலுக்கு நீராகி வேகம் மாற்றும்
விலையில்லா ரத்தினத்தின் வேர்தா னன்றோ
*
அண்ணனுடன் தம்பியுடன் அன்று ஒன்றாய்
அன்பொழுக வாழ்ந்திருந்த ஆதி வாழ்வே
கண்களுக்குள் மின்னுகின்ற கன்னல் வாழ்வாம்
காலத்தால் அழியாத கவிதை போலாம்
தண்ணிலவு தேனிரைத்துத் தந்து நெஞ்சத்
தாகமெலாம் தீர்த்துவைத்த தங்கக் காலம்
எண்ணுகின்ற போதினிலே இன்ப வெள்ளம்
இதயத்தில் பாய்கிறதே இந்த நேரம்..
**
ஏழெட்டுப் பேர்களுடன் ஏழ்மை சூழ்ந்த
இன்னலுடன் போராட ஏர்பி டிப்போம்
கூழில்லைக் கஞ்சியெனக் குடித்து வாழ்ந்தும்
குளிர்காலப் பூக்களென கோடை வென்றோம்
காலில்லை என்றாலும் கால்க ளாக
கைக்கொடுத்த அண்ணாமார் கருணை கண்டோம்
நூலின்றி வாசிக்கும் நூதன மாக
நூறாண்டு நிலைத்திருக்க நேசம் கொண்டோம்
*
அடிதடியும் சண்டைகளும் அங்கே உண்டு
அடுத்தநொடி கூடிவிடும் அன்பும் உண்டு
இடித்துரைக்கும் புத்திமதி எல்லாம் உண்டு
ஏற்றுக்கொளும் பக்குவத்தில் இதயம் உண்டு
அடிப்படையில் பாசமொன்றே அறமாய் உண்டு
அணைப்பதற்கே கரங்களென்று ஆறுத லுண்டு
விடியல்தரும் சூரியனின் வேதம் உண்டு
விழிகசிந்தால் துடைத்துவிட விரல்கள் உண்டு
*
வாழ்ந்ததற்கு ஆதாரம் வேண்டு மென்றே
வாரிசுகள் பெற்றெடுக்கும் பெற்றோர் தங்கள்
ஆழ்ந்திருந்தச் சிற்றின்ப ஆசை யாலே
ஆள்கணக்கைக் கூட்டிவைக்க ஆண்டுக் கொன்றாய்
சூழ்ந்திருந்த இன்பமிங்கே செழுமை தானோ?
சூதாட்டம் போலிதுவோர் சொர்க்க மாமோ?
தாழ்ந்துவிட்டச் சமூகத்தில் தாங்கு தற்கோர்
தருவெனவே கிளைபடர்த்தும் உடன்பி றப்பே
*
தன்னலத்தைப் பூச்சரமாய்த் தலையிற் சூடி
தாரமென வந்துவிடும் தாழம் பூவோ
தன்குடும்பத் துறவெல்லாம் தங்கம் என்றும்
தன்கணவர் குடும்பத்தார் தகரம் என்றும்
தன்கண்ணால் வெவ்வேறு தரமாய் பார்க்கும்
தரங்கெட்டப் பார்வையினால் தானே இன்னும்
ஒன்றான உறவுக்கே உலையை வைத்து
ஒண்டிக்கு டித்தனங்கள் ஓடு திங்கே
*
பின்னாளில் பார்க்குமெனப் பேணி வளர்க்கப்
பெற்றெடுத்தப் பிள்ளைகளும் பிரியத் தோடே
தன்னாலே ஆனதென்று தமது பங்காய்
தலைவலியைத் தீர்த்திடவே தங்கள் கண்ணால்
முன்னாலே கண்டுவைக்கும் முதியோர் இல்ல
முனைப்பனைத்தும் பார்க்கின்றோம் முன்னே நின்று
அன்னவரைத் தாங்குதற்கே அவர்கள் வார்க்கும்
அவமானம் வசந்தமென வாகு மாமோ
*
தோள்கொடுக்கும் தோழமைகள் தங்கள் வாழ்க்கைத்
தோணியேறிச் செல்லுமட்டும் தோதாய்த் தோன்றும்
நாள்கடந்து போனபின்னே நாறிப் போகும்
நாற்றமெல்லாம் காணலாமே நாட்டில் இன்றும்
தேள்கொடுக்காய் காத்திருந்து தீண்டு கின்ற
தேவையுள்ள சமூகத்தின் தேவை தீர்க்க
ஆள்கணக்குக் காகமட்டும் ஆட்கள் தேடி
அலைகின்ற சமூகத்தால் செழுமை எங்கே?
*
மரமாக உயர்கின்ற மனித வாழ்வில்
மகிழ்வான கிளைதானே கூடப் பிறப்பு
தரமாக அதில்வந்து தங்கிச் செல்லத்
தானதிலே பறவைகளாய்த் தோழர் கூட்டம்
வரமென்றே கூடுகட்டி வாழ்த்தும் கூறி
வலைபின்னும் பூச்சியென வாழும் தாரம்
நிறம்மாறும் பச்சோந்தி நிலையில் அதிலே
நினைத்ததுமே கல்லெறியும் நீசச் சமூகம்
*
உரமான கனிக்காக ஊட்டி வளர்க்கும்
உள்மனத்துச் சுயநலமே பெற்றோ ராகும்
சிரம்தாழ்த்திப் பூச்சொரியும் சிந்தை கொண்டு
சேர்ந்திருக்கும் உடன்பிறப்பின் சீவன் மட்டும்
கரங்கூப்பி வணங்குகின்ற கடவுள் போலே
காலமெலாம் வசந்தமாகும் கருணை யன்றோ
*
கட்டியவள் காட்டுகின்ற அன்பில் ஏதோ
காரணங்க ளிருப்பதாகக் காட்டிக் கொள்வாள்
பெற்றெடுத்துப் வளர்த்ததற்காய் பெற்றோர் தானும்
பெருந்துன்பப் பட்தாகப் பேசிக் கொள்வர்
உற்றதோழன் கூடவோர்நாள் உண்மை தெனக்கு
ஒட்டுறவு இல்லையென ஒதுங்கிக் கொள்வான்
சட்டமிட்டுப் பிரித்தாலும் சதையு மாடுஞ்
சகோதர உறவுமட்டும் சதிக்கா தன்றோ
*
பட்டதுமே அனுபவிக்கும் பாடத் திற்குப்
பள்ளிக்கூ டந்தானிப் பாழ்ச மூகம்
வெட்டொன்று துண்டிரண்டாய் வேறுபட்ட டுத்தி
விடுவதிலே முன்நிற்கும் வெட்டிச் சமூகம்
துட்டததைத் தொலையவைத்துத் துன்பம் நீக்கத்
துடிப்பதுவே உடன்பிறப்பின் தூய அன்பு
பட்டமர மாய்நிற்கப் பார்த்து விட்டால்
பச்சைக்கொடி யாய்படர்ந்து பசுமை யூட்டுமே!
*
மெய்யன் நடராஜ்
05 05 2023

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-May-23, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 137

மேலே