நல்லாரைச் சார்ந்து நிலைகொள்ளாக் காலர் உலக்கை மேல் காக்கை - பழமொழி நானூறு 328
இன்னிசை வெண்பா
நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்
உலக்கைமேல் காக்கையென் பார். 328
- பழமொழி நானூறு
பொருளுரை:
இவ்வுலகத்தில் வாழ்வதற்கு மிகுதியாகிய பெரிய செல்வத்தை விரும்பி நன்மை மிகுந்த அரசர்களுள் நல்லோர் ஒருவரை அடைந்து, அங்குத் தங்கியிராமல் ஓரிடத்தும் தங்குதலைக் கொள்ளாத கால்களை உடையவர்களை ஆராயுமிடத்து உலக்கை மேலுள்ள காக்கையைப் போல என்று கூறப்படுவார்கள்.
கருத்து:
அறிவிலார் ஒருவரிடத்திலும் ஒரு தொழிலிலும் நிலைபெறாது வருதலால் நன்மையைப் பெற மாட்டார்கள்.
விளக்கம்:
காக்கை உரலில் உள்ள அரிசியை உண்ணாமலும் உலக்கைமேல் உட்காரவும் செய்யாமலும் உரலைச் சுற்றிவருதல் போல, அறிவிலாரும் ஒருவரிடம் நிலைத்து நிற்காது பயனையும் இழந்து சுழன்று வருவர் என்பதாகும்.
'உலக்கை மேல் காக்கை' என்பது பழமொழி.