தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை கவிஞர் இரா இரவி

தெரிந்தும் தெரியாமலும்
நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

*****

இளவல் கவிஞர் செல்வக்குமார் அவர்களின் இரண்டாவது நூல் இது. முதல் நூலை, உலகத் தமிழ்ச் சங்கம் அரங்கேற்றம் செய்தபோது, அந்நூலுக்கு மதிப்புரை வழங்கினேன். அன்று தான் சந்தித்தோம். இரண்டாம் நூலுக்கு அணிந்துரை வேண்டினார். இது முழுவதும் ஹைக்கூ கவிதைகள் என்பதால் மகிழ்ச்சியோடு சம்மதித்து எழுதி உள்ளேன்.

மூன்று வரி முத்தாய்ப்பு ஹைக்கூ. அளவில் சிறிய அணுகுண்டு ஹைக்கூ. படிப்பாளியையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் மிக்கது ஹைக்கூ. மகாகவி பாரதியார் அவர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்து எழுதினார்.

இயந்தியரமயமான உலகில் நீண்ட நெடிய கவிதைகள் படிக்க நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. ஹைக்கூ கவிதையை எல்லோரும் விரும்பிப் படிக்கிறார்கள். காரணம் மூன்றே வரிகளில் சுருக்கமாக இருப்பதால். இளவல் கவிஞர் செல்வக்குமார், ஹைக்கூ கவிதையின் யுத்தியை உணர்ந்து பல்வேறு கோணங்களில் படைத்துள்ளார். பாராட்டுகள், வாழ்த்துகள்.

என்னுடன் நீ இருந்தால்
இயலாதது எதுவுமில்லை
முயற்சி!

இளைஞர் என்பதால் மூன்றாவது வரியில் ‘காதலி’ என்று எழுதி இருப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் முயற்சி என்று எழுதி, முயன்றால் முடியாது எதுவுமில்லை என்பதை சிறப்பாக எழுதி உள்ளார். ‘முயற்சி திருவினையாக்கும்’. திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து உள்ளார்.

கேள்விகள்
பிறந்தன
கதவுகள் திறந்தன!

இந்த ஹைக்கூ படித்தவுடன் என் நினைவிற்கு வந்தது தந்தை பெரியார் தான். அவர் தான் எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என கேள்விகள் கேட்கச் சொன்னவர். அப்படி அவர் கேள்விகள் கேட்டதால் தான் நமக்கு பல கதவுகள் திறந்தன. சமூக நீதி பிறந்தது.

உடைக்கப்பட்ட கண்ணாடியின்
வலியை கல் அறியாது
வார்த்தைகள்!

கல்லால் கண்ணாடி உடைவது போல வன்சொல்லால் மனித மனம் உடையும் என்பதை நுட்பமாக எழுதி உள்ளார். இன்சொல் இருக்க வன்சொல் எதற்கு? இதைத்தான் திருவள்ளுவர் ‘கனிஇருக்க காய் கவர்ந்தற்று’ என்று வலியுறுத்தினார்.

அடிவயிற்றில்
பட்டாம்பூச்சி
அவள் ஓரவிழி பார்வை!

காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை. இவரும் காதல் ஹைக்கூ சில எழுதி உள்ளார். ரசிக்கும்படி உள்ளன. பாராட்டுகள்.

எந்த பூவில் இருந்து
வந்தது இந்த தேன் துளிகள்
இயற்கையின் வரம்!

நூற்றுக்கணக்கான மலர்களிலிருந்து மகரந்தம் தேடி, தேனீ தேனை சேமிக்கின்றது. தேன் எந்த மலரிலிருந்து வந்தது என்பதை அறிய முடியாது. தேனீயின் கடின உழைப்பின் விளைவே தேன்.

இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்!

என்ற புகழ்பெற்ற ஹைக்கூவை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது.

அமர்க்களமான கல்யாணம்
ஆறு பைசா வட்டிக்கு
கடன் வாங்கி!

நாட்டு நடப்பை படம்பிடித்துக் காட்டி உள்ளார். வட்டிக்கு வாங்கி ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் நடத்துவது நல்லதல்ல. திருமணங்கள் எளிமையாக நடப்பதே இனிமை என உணர்த்திய ஹைக்கூ நன்று.

என்னாவாயினும்
பிறர் வாழ்வில்
ஒளி ஏற்றும் தீக்குச்சி!

விளக்கை ஏற்றிவிட்டு தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் தீக்குச்சி பொதுநலமாக வாழ்வதை தன்னல மனிதர்களுக்கு உணர்த்தும் விதமாக எழுதியது சிறப்பு.

நம்பு
பிறரை அல்ல
உன்னை மட்டும் முழுமையாக!

இன்றைக்கு பல இளைஞர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் மனச்சோர்வுடன் வாழ்கின்றனர். ‘உன்னை நீ முழுதாய் நம்பு’ என தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார்.

கோபம் ஒரு காட்டுத்தீ
அது எல்லாவற்றையும்
அழிக்கக் கூடும்!

‘கோபத்துடன் எழுந்தவுடன் நட்டத்துடன் அமர்வான்’ என்ற பொன்மொழி போல சினம் நம்மை சிதைத்து விடும். எனவே கோபம் தவிர்ப்பீர் என வலியுறுத்தியது நன்று.

நிலாவும் சில நேரம்
சுடுகிறது
அவள் பார்வை!

காதலி ஊடலில் இருக்கும்போது வீசும் கோபப் பார்வை சுடும் என்பதை வித்தியாசமாக உணர்த்தி உள்ளார்.

வெடிச் சத்தம் கேட்டு
நாய்க்குட்டியின் காதுகளை மூடிய
குழந்தை!

குழந்தைகள் நாயை மிகவும் நேசிக்கும். மனிதாபிமானம் போல விலங்காபிமானமும் குழந்தைகளுக்கு உண்டு. வெடிசத்தம் கேட்டு நாய் மிரண்டு விடக்கூடாது என்று காதை மூடியதை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.

சாதனைகள் புரிபவன்
ஜாதகங்கள்
பார்ப்பதில்லை!

சாதிக்க வேண்டுமென்றால் மூட நம்பிக்கைகளை விடுத்து பகுத்தறிவுப் பாதையை கைக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் வடித்த ஹைக்கூ நன்று.

பல்வேறு விதங்களில் சிந்தித்து நல்ல பல ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள இளவல் கவிஞர் செல்வக்குமாருக்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். இனி எழுதும் ஹைக்கூ கவிதைகளில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்து எழுதுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கிறேன்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (11-May-23, 6:11 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 35

மேலே