பனைமுதிரின் தாய்தாள்மேல் வீழ்ந்து விடும் - பழமொழி நானூறு 327
இன்னிசை வெண்பா
உவப்ப உடன்படுத்தற் கேய கருமம்
அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தால்
வினைமுதிரின் செய்தான்மே லேறும் பனைமுதிரின்
தாய்தாள்மேல் வீழ்ந்து விடும். 327
- பழமொழி நானூறு
பொருளுரை:
பனையினது பழம் முற்றினால் தாய்ப்பனையினது தாளின் மேலேயே வீழும்;
அதுபோல, அரசன் தான் உவக்கும்படி செய்து முடித்தற்கு ஏவிய செயல்கள் அவ்வச் செயல்களின் அளவாகிய பயனோடு அச்செயல் முடியின் அஃது ஏவியவனை யன்றிச் செய்தவனையே சேரும்.
கருத்து:
அரசன் ஏவிய கருமங்கள் பயன்பட முடிந்தால் அப்புகழ் செய்தவனையே சேரும்.
விளக்கம்:
முற்றிய பனம்பழம், தாய்ப்பனையின் தாளில் வீழ்தல்போல, வினையை முடித்தலான் வரும் புகழ் செய்தவனையே அடையுமென்பதாம்.
சோழன் ஏவிய வினையை மேற்கொண்டு தொண்டைமான் கலிங்கம் எறிந்தானாயினும், அப்புகழ் சோழன்மேற் செல்லாது தொண்டைமான்மேல் சென்றது போன்றதென்றறிக.
'பனைமுதிரின் தாய்தாள்மேல் வீழ்ந்துவிடும்' என்பது பழமொழி.