நாவடங்கக் கல்வி அளவிறந்து மிக்கார் அறிவெள்ளிக் கூறல் - பழமொழி நானூறு 326

நேரிசை வெண்பா

அல்லவையுள் தோன்றி அலஅலைத்து வாழ்பவர்
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் - கல்வி
அளவிறந்து மிக்கார் அறிவெள்ளிக் கூறல்
மிளகுளு உண்பான் புகல். 326

- பழமொழி நானூறு

பொருளுரை:

கல்வியறிவு இல்லாதார் அவையுள் முற்பட்டு (நல்லன) அல்லவற்றைக் கூறி (புல்லரை) வென்று வாழ்பவர், கல்வியறிவு உடையார் அவையுள் தானே புகுந்து, பிறர் நாவடங்கும்படி கல்வியில் எல்லையின்றி அறிந்த அறிவுடையோர் அறிவினை இகழ்ந்து கூறுதல் (சிறந்த உணவுகள் இருக்க) மிளகின் உளுவை உண்ணப் புகுவதனோடு ஒக்கும்.

கருத்து:

கல்லார் கற்றாரை இகழ்ந்து கூறின் தீமையை அடைவர்.

விளக்கம்:

அல்லவையை அலைத்து வாழ்ந்த அத்துணிபு கொண்டு, நல்லவையையும் அலைத்து வாழ எண்ணுவராயின் மிளகின் உளுவை உண்டவன் அடையும் பயனை அடைவர். மிளகு, சாதிக்காய், ஏலக்காய் முதலியவற்றில் உள்ள உளுவை உண்டவர் பிழைத்தல் அரிதென்பர்.

'மிளகு உளு உண்பான் புகல்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-May-23, 7:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே