சூட்டறுத்து வாயில் இடல் - பழமொழி நானூறு 329

நேரிசை வெண்பா

அடைய அடைந்தாரை அல்லவை செய்து
கொடைவேந்தன் கோல்கொடிய னாகிக் - குடிகள்மேல்
கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ
சூட்டறுத்து வாயில் இடல். 329

- பழமொழி நானூறு

பொருளுரை:

கொடையினையுடைய அரசன் தன்னை நெருங்க அடைந்த குடிகளைத் துன்புறுத்தி கொடுங்கோலை உடையவனாகி குடிகளிடத்தில் தாங்கொள்ளும் இறைப்பொருளை மிகுதியாகக் கொண்டு, பின்னர் அவருக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வதாக அன்பு செய்யின் அச்செயல் மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து அதற்குணவாக அதன் வாயில் இடுதலை ஒக்கும்.

கருத்து:

அரசன் இறைப்பொருளைத் துன்புறுத்தி மிகுதியாகக் கொண்டு பின்னர் எத்துணை செய்யினும் குடிகள் மகிழ்ச்சியடையார்.

விளக்கம்:

'மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர்' என உயிராகக் கூறப்படுதல் பற்றி அடைந்தாரையென்றே ஒழியாது 'அடைய அடைந்தாரை' என்றார். 'அல்லவை செய்து' என்றது தான் மிகுதியாக இறைப்பொருளைக் கொள்ளவேண்டி குடிகளைப் பலவழிகளில் துன்புறுத்தல்;
.
'வாயில் இடல்' என்றமையால் பின்னர்ப் பலவழிகளில் வேண்டிய நன்மைகளை இடையீடின்றிச் செய்வார் என்பது பெறப்படும். முன்னர்த் துன்புறுத்திப் பின்னர் எத்துணை நன்மையைச் செய்யினும் குடிகள் மகிழார். அஃதன்றி அதனை யேற்கவும் மாட்டார். இறைப்பொருளை முறையாகக் கொண்டு முறையாக நன்மை செய்க என்பதாம்.

மிகுந்த நன்மை செய்யவேண்டுமென்பது நினைத்துக் குடிகளிடத்தில் பொருள் பெற்றுச் செய்வதால் அவர்கள் துன்பமடைவரேயன்றி இன்பமடையார்; கொண்டையை அறுத்தவுடன் மயில் இறந்துபடுதலின் வாயிலிட்டாலும் அதனால் அதற்கு ஒருபயனும் ஏற்படுவதில்லை.

'சூட்டறுத்து வாயில் இடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-May-23, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே