தாயின்றி உலகம் இல்லை
அதிகப்பிள்ளைகளைப்பெற்றது, அந்தகாலத்துப்பெற்றோர்களுக்கு வேடிக்கை, கேளிக்கை போன்றவை கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். எனவே மனரீதியாக ஒருவரை ஒருவர் திருப்தி செய்வதற்கும், ஒருவிதமான கேளிக்கையை இருவர் அனுபவிக்கவும், அதிக அளவில் மின்சார விளக்கும் இல்லையென்பதால் சீக்கிரமே உறங்கச்சென்றதாலும், ஒரு தம்பதியினர் உடலுறவு கொள்வதை ஒரு முக்கியமான பொழுதுபோக்காகவே கொண்டிருந்தனர் என்றால் அது மிகையாகாது. அப்போதைய காலத்தில் ஜனத்தொகை ஓரளவுக்கு குறைவாகவும் இருந்ததாலும், குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு பொதுவாக மக்களிடம் இல்லாமலிருந்ததாலும், அடிக்கடி உடலுறவு கொள்வதை அக்காலத்து மக்கள் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
என் தந்தைக்கு முதல் மனைவிமூலம் மூன்று பிள்ளைகள். முதல் மனைவி தவறிவிட்டதால் என் தாயை அவர் இரண்டாம் தாரமாக திருமணமுடித்தார். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே வயது வித்தியாசம் பதினேழு.
என்னையும் சேர்த்து என் தாய்க்கு ஆறு பிள்ளைகள், நான்கு மகன்கள் இரு மகள்கள். என் தந்தை ஆங்கிலத்தில் பட்டதாரி மட்டும் அல்ல, ஒரு பள்ளி ஆசிரியர் கூட. ஆயினும் அவர் என் தாயை அவரது உடல்தாகத்தை தணிக்கும் ஒரு ம் இயந்திரமாகத்தான் பார்த்தார் என்பது என் கணிப்பு. அதாவது இரவு நேரத்தில்மட்டும்தான் என் தாய் அவருக்கு அதிக அளவில் தேவைப்பட்டாள். மற்ற நேரத்தில் அவருக்காகவும் ஒன்பது பிள்ளைகளுக்காக உழைக்கும் எந்திரமாகவே என் தாய் இருந்தாள். ஒரு தாய் என்பவள் எப்படிப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகிறாள் என்பதை இந்த உதாரணத்தின் மூலம் இங்கே பகிர்ந்துகொண்டேன்.
தாயின் இடத்திற்கு இணை வேறு எதுவுமே இல்லை. கருவிலிருந்து உருவாகி அவள் குழந்தை பிறக்கின்ற வரையில் அவள்படும் துன்பங்களையும் கவலைகளையும் ஒரு தாய்தான் அறியமுடியும். பொருளாதார சூழ்நிலை வசதியாகவோ அல்லது ஓரளவுக்கு சுமாராகவோ இருப்பின், ஒரு தாயின் இன்னல்கள் மற்றும் உபாதைகள் அந்த அளவுக்குக் குறைவாக இருக்கும். மற்றப்படி, ஒவ்வொரு தாயும் ஒரு குழந்தையை பெறுவதற்கு விதவிதமான கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள். ஒரு பெண்ணின் உடலமைப்பு, அவளின் தேக ஆரோக்கியம், அவளது முன்னோர்களின் மருத்துவ பிரச்சினைகள், இதுபோன்ற காரணிகள் (factors) அவள் வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சியையும், வளரும் சிசுவின் உடல்நலனையும் நிர்ணயிக்கிறது. இறுதிக்கட்டத்தில் குழந்தை பெறும் நேரத்தில் வரக்கூடிய ஒரு பெண்ணின் உடல்நிலை சம்பந்தப்பட்ட நெருக்கடிகள், மற்றும் வயிற்றில் வளர்ந்த சிசு வெளிவருகையில் அதன் தலை கால் அமைப்பு, போன்ற விஷயங்களும் பிறக்கும் குழந்தையையோ அவளது தாயையோ பாதிக்கலாம்.
பிள்ளை பெரும் பெண் ஏழ்மையானவள் என்றாலோ அவள் படும் துயர்களைக் கேட்கவே வேண்டாம். ஊட்டச்சத்து குறைவான ஆகாரம் உண்பதாலும், அவள் சிலநேரங்களில் உணவின்றி பட்டினியும் இருக்கும் சூழ்நிலையும் அமைவதாலும், அவள் வயிற்றில் வளருகின்ற குழந்தைக்குத் சத்தான ஆகாரம் கிடைக்காததால் அந்தக்குழந்தை சரியாக வளரமுடியாமல் போகும் வாய்ப்பும், மிகவும் எடை குறைந்து வலுவிழந்து பிறக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஆக, ஒரு சிசு அவள் உடலில் வளர ஆரம்பிக்கையிலிருந்தே ஒரு பெண்ணின் தாய்மைப்பணிகள் தொடங்கிவிடுகிறது. ஒன்பது மாதங்கள், வெளியில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருப்பினும், அவள் தன் வயிற்றில் வளரும் சேயை மிகவும் கவனத்துடனும் பாதுகாப்புடனும் காக்கிறாள்.
இந்நாளில் சாதாரண பிரசவம் ஆவதும் கணிசமாகக்குறைந்துவிட்டது. பலவித காரணங்களால், சாதாரண பிரசவம் ஆகாமல் ஆபரேஷன் ( caesarian ) மூலம்தான் குழந்தைகள் பிறக்கின்றனர். என் மனைவிக்கு இரண்டு குழந்தையுமே ஆபரேஷன் மூலமாகத்தான் பிறந்தார்கள். இதனால் அவளுக்கு அதிக அளவில் உடல் பிரச்சினைகள் ஏற்பட்டது.
இவற்றையெல்லாம் பார்க்கையில், ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு துன்பங்களை சந்திக்கிறாள் என்பதை நம்மால் யூகிக்கமுடியும். குழந்தையைப் பெற்றுப்போட்டுவிட்டால் ஒரு பெண்ணின் கடமை முடிந்துவிடுமா? இல்லை, அங்கிருந்துதான் அவளுடைய புதிய கடமைகளும் தியாகங்களும் தொடங்குகின்றன. அவை என்னென்ன என்று நான் கூறுபோட்டுக்கூறவேண்டிய அவசியமே இல்லை. சொல்லப்போனால் ஒரு குழந்தையைப்பெற்றெடுத்து, பாலுட்டி, சோறூட்டி, வளர்த்துப் படிக்கவைத்து, பெரியவனாக/ பெரியவளாக ஆனபின் அவர்களுக்குத் திருமணத்தைச்செய்து, அந்தப்புதுத்தம்பதிகள் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது, அந்தக்குழந்தையை கவனமுடன் பாதுகாப்பாக வளர்வதற்கும் ஒரு தாயான பெண் காரணமாக இருக்கிறாள்.
இதற்கிடையில் ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட கணவன் வாய்க்கிறான் என்பதும் முக்கியம். கோபக்காரக் கணவனாக இருப்பின் அவளுக்கு ஒருவிதமான பிரச்சினை. குடிகாரகணவனாக இருப்பின் அது ஒரு பிரச்சினை. அவளைப்புரிந்துகொள்ளாத கணவனாக இருப்பின் ஒரு பிரச்சினை. தாம்பத்திய உறவில் அவளுக்குத் திருப்தி தராத கணவனாக அமைந்தால் அது ஒரு வாழ்க்கைப் பிரச்சினை.
இந்த காலத்தில் குறைந்தது தொண்ணூறு சதவிகிதம் பெண்கள் கல்யாணத்திற்குப்பிறகும் வேலைக்குச்செல்கின்றனர். தினசரி பள்ளிக்கோ, வங்கிக்கோ, அலுவலகத்திற்கோ சென்று உழைத்து வரவேண்டும். கணவனுக்கும், வேண்டியதைச்செய்து தரவேண்டும். சில இடங்களில் மாமனார் மாமியாரையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.
தினசரி கூலி வேலை செய்து பிழைக்கும் பெண்களின் நிலை மிகவும் மோசமானதுதான். இப்படிப்பட்ட பெண்களுக்கு வாய்க்கும் கணவர்களும் தினசரி வேலை செய்பவராகவோ அல்லது சிறிய எடுபிடி வேலைகள் செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களில் பாதிக்குமேல் குடிகாரர்கள். இருவரின் வருமானத்தையும் கொண்டு இந்த இருவருமே சரியாக வாழமுடியாத நிலையில், இவர்கள் ஒன்று அல்ல குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். பொதுவாக, பெற்றுக்கொள்வதற்காக என்பதற்குப்பதில் இருவரும் தற்காலிகமாக இரவில் இணைந்து உறவாடுவதற்காக என்றேகூட எடுத்துக்கொள்ளலாம். குடும்பக்கட்டுப்பாட்டு சாதனைகள், வழிமுறைகள், விழிப்புணர்ச்சி இந்நாட்களில் அதிக அளவில் இருப்பினும், கல்வியறிவு பெறாதவர் குடும்பத்தில் குழந்தைகள் அதிகமாகத்தான் பிறக்கின்றன. இதற்குத் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருப்பினும், பெற்ற பிறகு குழந்தையைகாப்பது ஒரு தாயினுடைய தலையாய கடமையாகத்தான் இருக்கிறது. குழந்தைகள் வளர்ப்பதில் ஒரு தகப்பனின் பங்கு, உழைத்து வருமானம் பெற்று அத்தைகுடும்பத்திற்கு என்று கொடுக்கும்வரையில் தான். ஆனால் இத்தகைய தன்னலமற்ற தந்தையர்களையும் நாம் பாராட்டிதான் ஆகவேண்டும். குடி சூது மாது என்று சம்பாதித்த பணத்தை விரயம் செய்யும் ஆண்களும் இருக்கிறார்கள்தானே.
பிறந்த மகனோ மகளோ உடல்நலத்துடன் மனநலத்துடன் இருப்பின் ஒரு தாயின் பாடு ஓரளவுக்கு குறைவே. ஆனால் பிறகும் குழந்தை உடல் ஊனமுற்றோ அல்லது புத்திசுவாதீனம் இல்லாமலோ பிறந்திட்டால், அந்தத்தாயின் இன்னல்களை நாம் நினைத்துப்பார்க்கலாம். எவ்வளவோ பெற்றோர்கள் அவர்களது வயதான காலத்திலும், உடல் அல்லது மனவளம் குன்றிய பிள்ளைகளை அரவணைத்து காப்பாற்றுகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது, இப்படிப்பட்ட பெற்றோர்களை நிச்சயமாக கண்டிருப்போம்.
என்னுடைய பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் ஒரு வயதான தம்பதிகள் அவர்களது திருமணமான ஒரு மகளை தன்னுடன் வைத்து காப்பாற்றிவருகிறார்கள். ஏனெனில் அந்தப்பெண்ணின் கணவன் இறந்துவிட்டான். பெண்ணும் வேறு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் அந்தப்பெண்ணுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.
பல தாய்மார்கள், அவர்களது மகன் மகளுக்காக ஓடாக உழைத்து தேய்ந்துபோன பின்பு, பலவித காரணங்களாலும் சூழ்நிலைகளாலும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுவிடுகின்றனர். இப்படியும் இல்லாமல், நடுத்தெருவில் விடப்படும் தாய்மார்களும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். சில இடங்களில் ஒரு தாய் அவளது மருமகளால் வெறுக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார். அவளது மகனுக்கு இது தெரிந்தும் அவன் கண்டுகொள்ளாமல் விட்டால் என்னதான் செய்வாள் அந்த துர்பாகியசாலித் தாய்.
உலகத்தாய்மார்களின் தினமான இந்த நாளில் தாயக இருக்கும் பெண்களின் தியாகங்களையும் சேவைகளும் அவர்களின் பொறுமையையும் மற்றும் சகிப்புத்தன்மையையும் வெளிக்கொணர நான் ஓரளவுக்கு முயன்றேன்.
தாய் இல்லாவிடில் நாம் இல்லை இதை நாம் நன்கு அறிவோம். தாய்தான் இவ்வுலகில் சூரியனுக்கு அடுத்துக் கண்களுக்குத்தெரிகின்ற நடமாடும் உருவம், இதையும் நாம் நன்கு அறிவோம். நாம் தாய் மட்டுமின்றி, நம்முடன் பிறந்த சகோதரிகூட ஒரு நாள் தாயக மாறுகிறாள். நாம் திருமணம் செய்துகொண்ட பெண்ணும் ஒரு தாயகத்தானே ஆகிறாள். தாய் ஒரு உயர்ந்த ஒப்பற்ற ஏணிபோல. நம்மை நம் வாழ்க்கையின் உயரத்திற்கு ஏற்றிவிடுவது இந்த ஏணிபோன்ற தாயே. ஏணியின் உயரத்திற்குச் சென்றபின், நாம் ஏணிப்படியை அதிகம் கண்டுகொள்வதில்லை. சில ஏணிகள் கீழே சாய்த்துவிடப்படுகின்றன. சில ஏணிகள் பழைய சாமான் கடைகளுக்கு (முதியோர் இல்லம்) அனுப்பப்படுகின்றன. சில ஏணிகள் கேட்பாரற்று உளுத்துப்போய்விடுகிறது.
இப்படியெல்லாம் செய்யாமல், ஒருவரின் தாயைத் தங்க ஏணியாக நினைத்திடுவோம். அந்த ஏணியை நாம், நம் வீட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் போல அமைத்திடுவோம். இந்தப்படிகள் ஏணியின்றி நாம் மாடிக்கு செல்லமுடியாது. மாடியிலிருந்து கீழும் வரமுடியாது. ஒவ்வொரு தாயையும் இதுபோன்ற தங்க ஏணியாக மாற்றுவோம். அவளது கடைசி காலம் வரை அவளை காப்பாற்றி, அவளை முடிந்த அளவு மகிழ்வித்திருப்போம்.
ஆயிரக்கணக்கான லிட்டர் பால்கொடுத்த பின்பு ஒரு பசுவை நாம் விரட்டியடிப்பதில்லை. வயதானபின், அதன் கறவை முடிந்தபின், அதற்குத் தீவனம் மற்றும் மருத்துவம் கொடுத்துக் காப்பாற்றுகிறோம். ஒவ்வொரு தாயும் இப்படிப்பட்ட ஒரு பசுவைபோலத்தான்.