பயிற்சிக் கல்லூரியில் முயற்சி

நானே எந்த ஒரு பாடத்தையும் விஷயத்தையும் தெளிவான முறையில் கற்காதபோது, நான் எப்படி ஒரு பயிற்சிக்கல்லூரியில் பயிற்சியாளராகவோ அல்லது ஆசிரியராகவோ இருக்கமுடியும்?
மிகவும் சரியான கேள்விதான். இருப்பினும், நான் இங்கே உண்மையைச் சொல்லுகிறேன். எந்த ஒரு பாடத்தையும் ஆழமான அளவில் படிக்காமல் இருந்தபோதும், நானே சரியான வகையில் பல பயிற்சிகளை அறியாதபோதும், நான் என் நிறுவனத்தின் பயிற்சி வளாகத்தில் ஒரு தற்காலிக ஆசிரியராகவும், பயிற்சியாளராகவும் இருந்தேன், அதுவும் ஓரளவுக்கு மெச்சப்படும் வகையில்.
நான் எப்படி ஒரு ஆசிரியனாகப், பிறகு ஒரு பயிற்சியாளனாக ஆனேன் என்பதைப் பற்றி இப்போது கூறுகிறேன். நான் ஒரு ஆசிரியரின் மகனாக இருந்தாலும், எனக்கு கூச்சமும் வெட்கமும் அதிகமாக இருந்ததால், பள்ளியிலும் கல்லூரியிலும் ஒரு சராசரியான மாணவனாகக்கூட நான் இருக்கவில்லை. வகுப்பிற்குச்சென்றால் நான் பக்கத்தில் உள்ள மாணவர்களிடம் கூட அதிகமாக பேசமாட்டேன். வகுப்பினுள் வாத்தியார் வந்துவிட்டால், நான் மௌனமாகிவிடுவேன். பாடம் நடத்தையில் ஆசிரியர் பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகள் மாணவர்களிடம் கேட்டால், நான் பயந்துவிடுவேன், எங்கே என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்பரோ என்று. ஆனால் பூகோளம் மற்றும் ஆங்கிலப்படம் நடக்கும்போது நான் மிகவும் ஆர்வத்துடன் கேட்பேன்.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் எனக்கு அமைந்த ஆங்கிலம் மற்றும் சரித்திர மற்றும் பூகோள ஆசிரியர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆங்கில ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுக்கயில், ஒரு தியான வகுப்பு நடப்பதுபோலதான் இருக்கும். அவர் குரல் மிகவும் மென்மையானது, பணிவு நிறைந்தது, அடுத்தவர்களைபுண்படுத்தாத ஒரு குரல். என் வாழ்க்கையில் இதுவரை நான் மிகவும் விரும்பி மதித்த ஆசிரியர் ஒருவர் உண்டு என்றால், அது இந்த ஆங்கில ஆசிரியர்தான். நான் அவ்வப்போது நினைப்பேன் "இப்படி ஒரு நளினமான மென்மையான குரலுடன் இருப்பவர் எப்படி ஒரு ஆசிரியராக ஆனார் என்று? அவரிடம் நான் தனிமையில் சென்று சிறிது அளவளாவ வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொள்வேன்.
ஒரு முறை ஆசிரியர்கள் அறைக்குச்சென்று அவரிடம் இரண்டு மூன்று நிமிடங்கள் பேசினேன். "சார், நீங்கள் பாடம் நடத்தும் விதம் மிகவும் அருமை. நான் இதுவரையில் ரசித்து கேட்ட ஆசிரியர்கள் வரிசையில் உங்களுக்குத்தான் முதலிடம்" என்று கூறினேன். அவர் புன்முறுவல் பூத்தார். "நான் ஒரு பொறியாளராகவேண்டும் என்றுதான் கனவு கண்டேன். ஆனால் எனது விதி அதற்கு அனுமதிக்கவில்லை. என் அப்பாவின் ஆசை நான் ஒரு ஆசிரியராக ஆகவேண்டும் என்று. அதை நிறைவேற்றவே, எம்எஸ்சி முடித்தவுடன், நான் ஆசிரியர் பணிக்குத் தேவையான B Ed (Bachelor of education) படிப்பை தேர்ந்தெடுத்து, ஆசிரியர் பயிற்சியும் பெற்று கடந்த பதினைந்து வருடங்களாக ஆசிரியராக இருக்கிறேன். ஆசிரியர் பயிற்சியின் ஒரு கட்டமாக, ஆசிரியர்களைப் பாடம் நடத்தச்சொல்லி கேட்பார்கள். அப்போது நான் பாடம் எடுக்கும் போது " உங்கள் குரல் இவ்வளவு மென்மையாக இருக்கிறதே, உங்களால் வகுப்புகளில் இறைந்து பேசி பாடம் எடுக்கமுடிடியுமா?" என்று பல உயர்நிலை ஆதிகாரிகள் என்னிடம் கேட்பார்கள். நான் "நான் பாடம் கற்றுத்தருகையில் மாணவர்கள் சத்தமின்றி என் பாடத்தை கேட்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்பேன்.
அவர் நினைத்ததுபோலவே, இவர் வகுப்பில் பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டால், மாணவர்கள் அனைவரும் மௌனமாகி விடுவார்கள். இவர் பொதுவாக மாணவர்களை அதட்டியே பேசமாட்டார். ஒருவேளை அவ்வாறு யாரையேனும் கடிந்துகொண்டாலும் அவர் அப்படி கடிந்துகொள்வதுகூட ஒரு மாணவனுக்கு கடுமையாகவே தெரியாது. அப்படிப்பட்ட இனிய பணிவான குரல் அவரது.

ஆங்கில ஆசிரியருடன் பேசி அவரைப்பற்றிய மேலேகுறிப்பிட்ட விவரங்களை அறிந்துகொண்டது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இவரைபோன்றவர்களிடம் நான் வாழ்நாள் முழுவதும் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொள்வேன். ஆனால் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் இந்தமாதிரியான நினைப்புகளும் போய்விட்டது.
அடுத்தது, எனது ஒன்பதாவது வகுப்பில் எனக்கு சரித்திரம் மற்றும் பூகோளப் பாடங்கள் எடுத்த ஆசிரியர். இவருடைய குரலும் சற்றே மென்மையாகத்தான் இருக்கும். ஆனால் ஆங்கில ஆசிரியரின் குரலுடன் ஒப்பிடுகையில் இவர் குரல் கணீரென்று இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக இவர் பூகோள பாடம் நடத்தினால் நான் மிகவும் லயித்து ரசித்து கேட்பேன். ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றைப்பற்றி விவரிக்கையில் ஒவ்வொரு நாட்டின் தலைநகர், அந்த நாட்டின் முக்கிய தொழில்கள், அங்குள்ள பெரிய நகரங்கள், துறைமுகம், அந்நாட்டின் சிறப்புவாய்ந்த இடங்கள் இவற்றையெல்லாம் மிகவும் அனுபவித்துக் கூறுவார். இவர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றைப்பற்று விவரித்து கூறுவதை கேட்கும்போது "நாமும் இந்த நாடுகளுக்குச்செல்ல வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் " என்று நினைத்துக்கொள்வேன். இன்றுவரை அந்தக் கனவு எனக்கு நெனவாகவில்லை.
படிப்பை முடித்துவிட்டு சிலவருடங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிசெய்தபின்னர் என் கடைசி நிர்வாகமாக, ஒரு மத்திய அரசு போது நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். சுமார் எட்டு வருடப் பணிக்குப்பிறகு எனக்கு "நாமும் ஏன் ஒரு தற்காலிக ஆசிரியராக இருக்கக்கூடாது" என்கிற விபரீத எண்ணம் எழுந்தது. அடுத்த வருடம், எங்களது நிர்வாகத்தின் பயிற்சி மையத்தில் தற்காலிக ஆசிரியராக சேவை செய்ய விழைபவர்களுக்கென்று, மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்பட்டது. நான் அந்த பயிற்சி வகுப்புக்குச் சென்று வந்தேன். அதற்குப் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர், எங்கள் அனைவருக்கும் 'எப்படி ஒரு பார்வையாளர்கள் அல்லது பயிற்சிபெறுபவர்கள் முன்னிலையில் பேசவேண்டும் ' என்று இரண்டு நாட்கள் பயிற்சிகளும் டிப்ஸும் கொடுத்தார். நிறைவு நாளில் எங்கள் ஒவ்வொருவரையும் ஐந்து நிமிடங்கள் வகுப்பிற்கு முன் நின்று பேசச்சொன்னார். நானும் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஐந்து நிமிடங்கள் பேசினேன். அதை ஆய்வு செய்துவிட்டு பயிற்சியளர் " உங்களுக்கு ஒரு பயிற்சியாளராகவும் ஆசிரயராகவும் இருக்க சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளது." என்று கூறியது எனக்கு மேலும் ஊக்கத்தைக்கொடுத்தது.
அதன் பிறகு நான், எங்கள் நிர்வாகத்தின் பயிற்சி பள்ளிக்குச் சென்று, நான் பணிசெய்து வந்த நிதித்துறை துறை சம்பந்தப்பட்ட சில தலைப்புகளில் நிதித்துறை அல்லாத ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாடம் எடுக்கத்துவங்கினேன். அடுத்த ஒரு வருடத்தில் நான்கு ஐந்து முறை பயிற்சி மையத்தில் நிர்வாக ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நிதித்துறை தழுவிய சில தலைப்புகளை எடுத்துக்கூறினேன். நான் ஒருபோதும் சிக்கலான தலைப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
நான் பாடம் எடுத்த தலைப்புகள் பிறர்க்கு புரியவைக்கும் வைக்கும் வகையில் ஓரளவுக்கு சுலபமாகத்தான் இருந்தது. என்னிடம் இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதால், பயிற்சியாளர்களை ஓரளவுக்கு உற்சாகத்துடன் வைக்கமுடிந்தது. நான் பாடம் எடுக்கையில் பயிற்சிபெறும் ஊழியர்களை ஏதேனும் ஒரு வழியில் ஊக்குவித்துக்கொண்டிருப்பேன். நல்ல கருத்து அல்லது ஆலோசனை ஒன்றை அவர்களில் யாரேனும் கூறினாலும் நானே கைகளைத்தட்டி மற்றவரையும் கைதட்ட வைப்பேன்.
இவை போதாதென்று, வகுப்பு இடைவெளியில் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து தேநீர் குடிப்பேன். நானும் அவர்களில் ஒன்று என்பதை என் நடவடிக்கைகள் மற்றும் பேச்சின் மூலம் தெரியப்படுத்துவேன். தேநீர் இடைவேளை முடிந்தவுடன், ஏதாவது திரைப்படப்பாடல் ஒன்றைச் சிறிது பாடுவேன். இதையும் பயிற்சிபெற்ற வந்தவர்கள் விரும்பினார்கள்.
சில வருடங்கள் கழித்து, நான் டெல்லியில் உள்ள எங்களது நிர்வாகத்தின் மத்திய பயிற்சி மையத்திற்கு சென்று ' வின்னிங் டுகெதர் ' (winning together) என்னும் பத்து நாட்கள் பயிற்சியைப்பெற்று வந்தேன். அங்கே கற்ற முறைகளின்படி என் அலுவலகத்தில் பணிபுரிந்த பல ஊழியர்களுக்கு நான் மேற்கூறிய பயிற்சியை கற்றுக்கொடுத்தேன். எங்கள் நிர்வாகத்தில் ஓரளவுக்கு நல்ல பயிற்சியாளர் எனும் பெயரையும் பெற்றுக்கொண்டேன்.
இதனிடையில் என் பயிற்சி வழங்கும் முறைகளை கவனித்து, எங்கள் நிர்வாகத்தின் 'லஞ்ச ஒழிப்புத்துறை' (vigilance) மேலதிகாரி என்னை அழைத்து, அவர்கள் துறையில் நடக்கவிருக்கும் வருடாந்திர ' ஊழல் தடுப்பு விழிப்புணர்வு' வாரம் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 'வினாடி வினா' வுக்கு மாஸ்டராக (quiz Master) இருக்க அழைப்பு விடுத்தார். அந்த நிகழ்ச்சியினை, நான் வழங்கிய விதத்தைப் பலர் பாராட்டினார்கள். அதன் விளைவு, அடுத்த நான்கு வருடங்கள் தொடர்ந்து நான்தான் இந்த வினாடி வினா நிகழ்ச்சியை வழங்கினேன்.
இந்த விவரங்களை இந்தக்கட்டுரையில் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் எல்லாவற்றிற்கும் நேரம் அமையவேண்டும். அப்படி அமைந்துவிட்டால் நாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமலேயே நமக்கு சாதகமாக பல விஷயங்கள் அமையும். ஒரு நிதித்துறை அதிகாரியாக நான் ஒன்றும் சாதிக்கவில்லை. ஆயினும் எங்கள் நிர்வாகத்தில் எனக்கென்று ஒரு பெயர் இருந்தது. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று, நான் பணிபுரிந்த பிரிவுகளில் மிகவும் நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்துவந்தேன். இரண்டாவது நான் நிர்வாத்தின் ஒரு மெச்சப்பட்ட பயிற்சியாளராக இருந்தது.
இந்த அனுபவங்கள் கண்டபின்னர்தான் நான் உணர்ந்துகொண்டேன் ' ஒவ்வொருவருக்கும் ஏதோ சில கலைகள், வித்தைகள், திறமைகள் இருக்கிறது. அவைகளை கூர்ந்து கவனித்தால்தான், அவை என்ன என்பதை நாம் அறியமுடியும். எல்லோருக்கும் இளமை காலத்தில் அவர்களது கலைகளையோ திறமைகளையோ வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமைவதில்லை. ஆனால் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வந்தால் என்றாவது ஒருவரின் திறமைகள் மற்றும் கலைகள் வெளிப்பட, நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆயினும் ஒன்று மட்டும் உறுதி. ஒருவருக்கு எப்படி வாழ்க்கை அமைகிறது, அவர் எப்படி வாழ்வார், அவரது கல்வி மற்றும் பொருளாதாரம், அவரது கலைத்திறமைகளை வெளிக்கொணரல் இவை யாவும் அவரது அதிருஷ்டத்தைப்பொறுத்தே அமைகிறது. அதிருஷ்டம் என்றால் என்ன என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-May-23, 5:50 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே