கோல்தலையே யாயினும் கொண்டீக காணுங்கால் பால்தலைப் பாலூறல் இல் - பழமொழி நானூறு 333
இன்னிசை வெண்பா
பாற்பட்டு வாழ்ப வெனினும் குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்
கோல்தலையே யாயினும் கொண்டீக காணுங்கால்
பால்தலைப் பாலூறல் இல். 333 - பழமொழி நானூறு
பொருளுரை:
தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றவர்களே ஆயினும், அரசன் தன் குடிமக்ககளிடத்தில் தமக்குச் சேர வேண்டிய மிகுந்த (வரி) இறைப்பொருள்கள் அவர்களிடத்தில் நீண்ட நாட்கள் நிற்றலைச் செய்ய வேண்டாம்.
அரிந்த தாளின் தலையிலுள்ள நெல்லேயாயினும் கொள்ளும் காலமறிந்து உடனே கொள்ள வேண்டும்.
ஆராய்ந்து பார்த்தால், சேரக் கறக்கலாமென்று சிலநாள் விட்டுவைத்தால் பாலுள்ள பசுவின் மடியில் பின்னர்ப் பால் சுரத்தலில்லை என்பது நடைமுறை உண்மை.
கருத்து:
அரசன் இறைப்பொருளைச் சிறிது சிறிதாகக் காலமறிந்து கொள்க என்பதாம்.
விளக்கம்:
'பாற்பட்டு வாழ்ப எனினும்' என்றது சோர்வு கொள்ளாது விட்டுவிடுதல் வேண்டாம் என்பதாம். சிறிது சிறிதாகக் கொள்க என்பார் கோல்தலையைக் கூறினார்.
முன்னர் 'மிக நிற்றல்' என்றமையின் கொள்ளுங் காலமறிந்து என்று கூறப்பட்டது. நெல்லேயாயினும் காலங்கடப்பின் வந்து சேருதல் இல்லையாம். மேற்பட்ட கூட்டிற்கு, கோல்தலையையும் மிக நிற்றலுக்குக் காலமறிந்து கொண்டீக என்பதையும் கொள்க.
ஆவின் பாலைக் கறவாது சிலநாட்கள் நிறுத்தி வைப்பின் பால் வற்றிப் போகும். அரசனும் மிகுந்த இறைப்பொருள்களைக் குடிமக்களிடத்தில் நிறுத்தி வைத்து நீண்ட நாட்கள் சென்ற பின்னர் அவைகளைப் பெற நினைப்பின் அது முடியாதாம். குடிமக்கள் அவற்றைச் செலவு செய்துவிடுவர் என்பதாம்.
பாலைக் காலமறிந்து கறவாதது ஆவின் குற்றமன்றிக் கறவாதவன் குற்றமாதல் போல இதுவும் அரசனது குற்றமேயாம்.
'பால்தலைப் பாலூறல் இல்' என்பது பழமொழி.