பொய்ப்பல் பாதி நிஜப்பல் மீதி

பல் டாக்டர் என் இரு பற்களை ஒரு கருவி கொண்டு, சாணை பிடிப்பது போல தேய்த்தார். 'ஆ அம்மா வலிக்குது ' என்று கத்தவேண்டும்போல இருந்தது. ஆனால் டாக்டர் தப்பாக நினைக்கக்கூடாது என்று நான் என் பல்வலியைப் பொறுத்துக்கொண்டேன். இந்த மாதிரி ஒருமுறை இல்லை பலமுறை, பல் டாக்டர்களிடம் வலியுடன் பட்ட கூசும் பல் அனுபவங்கள் பல எனக்கு உண்டு.
சிறு பிராயத்திலேயே என்னுடைய பல்சுவை பல்வலி தொடங்கியது. பள்ளிப்பருவத்தில் இரண்டு முறை பற்களை பிடுங்கிவந்தேன். அதற்குப்பதில் அவர் என் தந்தையிடமிருந்து பயணத்தை பிடுங்கிக்கொண்டார். எப்படித் தலைவலி அதை அனுபவிப்பவர்க்கு மட்டுமே தெரியுமோ அதைப்போலத்தான் இந்த பல்வலியும். அந்த வலி வந்து அவதிப்படுபவருக்குத்தான் அதன் கடுமையும் கொடுமையும் புரியும். நான் இவ்வித வலிகளைச் சிறுவயதிலிருந்தே அனுபவிக்கத்தொடங்கிவிட்டேன்.
பல் டாக்டர் சொல்வார் "நீ அதிகம் இனிப்பு சாப்பிடுவதால்தான் உன் பற்கள் சீக்கிரமாகவே சொத்தை ஆகி விழுந்துவிடுகிறது. இனிப்பை குறைத்து சாப்பிடு. இரவில் படுப்பதற்கு முன், தவறாமல் பல் தேய்த்துவிட்டு உறங்கச்செல்". இந்த அறிவுரை எல்லாம் இரண்டு மூன்று நாட்கள் வரை தான் கடைபிடிக்கப்படும். அதன் பின் வழக்கம்போல, கண்டதை கண்டநேரத்தில் தின்னுவது, உடனுக்குடன் வாய் கொப்பளிக்காமல் இருப்பது, இரவில் படுக்கும்முன்பு இனிப்பு தின்றுவிட்டு, பல்விளக்கமல் படுத்துதூங்காவது இப்படித்தான் இருந்தேன்.

எனக்கு பெரிய அளவில் பல்லில் பிரச்சினை ஏற்பட்டது என்னுடைய முப்பதாவது வயதில். என்னுடைய மேல் முன்பற்கள் இரண்டு மிகவும் பழதடைந்துவிட்டது. இதைப் பரிசோதித்த டாக்டர் "இந்த இரண்டு பற்களையும் இப்படியே விட்டால், அவைகளை பிடுங்கவேண்டியிருக்கும். இந்த இரண்டு பல்லுமே மிகவும் முக்கியமான பற்கள், உங்கள் வாயின் முன்பகுதியில் இருப்பவை. எனவே இந்த பற்களை எடுத்துவிட்டால், நீங்கள் வாயைத்திறந்தாலே, இரண்டு பற்கள் இடைவெளிகாரணமாக, அதிகம் வயதானவர்போல தென்படுவீர்கள். எனவே இந்த பற்களை பிடுங்கவேண்டாம். அதற்குப்பதில் அந்த பற்களில் பல்லுட்புற சிகிச்சை RCT (root canal treatment) செய்துகொள்ளுங்கள்" என்று அறிவுரை சொன்னபோது நான் சரி என்று சொல்லிவிட்டேன். பின்னே சாரி என்று எப்படிச்சொல்வது?
அப்போதுதான் பல்லுட்புற சிகிச்சை என்ன என்று நான் அவதியுடன் அனுபவித்து உணர்ந்தேன். இந்த சிகிச்சைக்காக நான் மூன்று முறை பல் டாக்டரிடம் சென்று வந்தேன். இதன்மூலம் என் பர்ஸ் உட்புறம் மிகவும் தேய்ந்துவிட்டது (காசு எல்லாம் தீர்ந்துபோய்). முப்பத்திஐந்து வருடங்களுக்கு முன்பே இந்த சிகிச்சைக்காக நான் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் செலவுசெய்தேன். சிகிச்சை செய்த பற்களின் அளவு மிகவும் சிறிதாகிவிட்டதால், அதன் மேல் ஒரு பல் தொப்பி வைக்கப்பட்டது. வெள்ளையான தொப்பிக்குக்கீழே கறுத்துப்போன பற்கள்.

அதன் பிறகு எட்டு வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு முறை இந்த பல்லுட்புற சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அல்லது ஏற்படுத்தப்பட்டது. எப்படியாயினும் விளைவுகள் ஒன்றுதான். மூன்று முறை பல் டாக்டரிடம் சென்று வருதல், மயக்கமருந்து கொடுக்கப்பட்டாலும் பற்கூசலுடன் பல்வலியை பலவித கோணங்களில் எதிர்கொள்ளுதல், இடையிடையில் வாய் கொப்பளித்து கொப்பளித்து வாய் கொப்புளித்துப்போகுதல், எல்லாவற்றிக்கும் மேலாக பாங்கிலிருந்து உள்ள மற்றும் இல்லாத பணத்தை சுரண்டுதல். பின்ன என்ன, பல் சுரண்டுவது அவ்வளவு எளிய காரியம் என்று நினைத்தீர்களா?
இதுவரை சுமார் இருபது தடவையாவது நான் பல் மருத்துவர்களிடம் சென்று வந்திருப்பேன். எனக்கு அங்கங்கே இரண்டு மூன்று பற்கள் உறுதியின்றி இருந்ததால், அந்தப் பற்களை தேய்த்து, உராசி, அவற்றை ஓட்டை செய்வதுபோல குத்திவிட்டு, பின்னர் அந்த பற்களை இணைத்து பற்களுக்கு பாலம் அமைக்கப்பட்டது. இப்படி என் வாயினுள் அமைக்கப்பட்ட பற்ப்பாலங்கள் நான்கு. முதலில் கட்டிய பாலத்தின் பெயர் 'அண்ணா மேம்பாலம்", இரண்டாவது " தம்பி மேம்பாலம்', இன்னொன்று ' அக்கா மேம்பாலம்', நாலாவது ' சின்னா மேம்பாலம்". இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் "இந்த பாலங்களைத் திறந்து வைக்க ஒரு முக்கிய புள்ளியும் வரவில்லை. அதற்குப்பதில், பல் டாக்டர் பாலத்தை கட்டியபிறகு, நானே வீட்டிற்கு சென்று இல்லத்தரசிக்கு வாயைத்திறந்து காட்டுகையில் அதனுடன் வாய்ப்பாலமும் திறந்துவைக்கப்பட்டது." பாலத்தைத் திறந்து வைத்த சாக்கில், நான் கொஞ்சம் இனிப்புகளை வாயில் போட்டுக்கொள்வேன். அதை என் இல்லத்தரசி அதிகம் காதில் போட்டுக்கொள்ளமாட்டாள்.

பற்கள் அமைவதும் ஒருவரின் அதிருஷ்டத்தைப் பொறுத்துதான் இருக்கிறது. சிலருக்கு பற்கள் வரிசையாக, அளவுடன் அழகாக இருக்கும். (அந்தக்கால நடிகை கே.ஆர். விஜயாவின் பற்கள் போல). சிலருக்கு ஒவ்வொரு பல்லும் ஒரு வடிவத்தில் இருக்கும். சிலருக்கு கரடுமுரடாக இருக்கும். சிலருக்கு முன்பற்கள் வாயின் வெளியிலியே வந்து நிற்கும் (என் பள்ளி நாட்களில் இப்படி முன் துருத்திக்கொண்டு இருக்கும் பற்கள் உள்ளவர்களை ' பல்லாண்டி' என்று செல்லமாக அழைப்பார்கள்). இப்படி பற்கள் கொண்டவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்கள் வாயிலிருந்து வெளியே வருவது அவர்களது சொற்கள் அல்ல பற்கள்.

என் பற்களுக்கிடையில் நிறைய இடுக்குகள் இருக்கின்றன. அதனால் திரவகம் தவிர எதைச் சாப்பிட்டாலும், நன்கு வாய் கொப்பளித்த பின்னும், நாம் சாப்பிடுபவை கொஞ்சம் கொஞ்சம் இந்த இடுக்குகளில் மாட்டிக்கொள்கிறது. இதுவும் ஒரு பெரிய தொல்லை. நான் இரவு நேரங்களில் பல் விளக்க இதுவும் ஒரு காரணம்.
பற்கள் பல இழந்து சொற்களில் கொஞ்சம் உறுதி போன பின்னர்தான் தியானம் உதித்தது, பற்களை நான் இன்னமும் கவனத்துடன் பாதுகாக்கவேண்டும் என்று. அதன் பிறகே நான் ஒவ்வொரு இரவும் உறங்கப்போகும் முன்னர் பல்லை விளக்குகிறேன். இது மட்டும் இந்நாள்வரை நடந்துகொண்டு இருக்கிறது.

அடுத்த நடவடிக்கையாக இனிப்புகளை ரசித்து ருசித்து மிகவும் அதிக அளவில் உண்டு மகிழும் நான், இனிப்புகள் உண்பதை சுமார் 10% குறைத்தேன். எனது பற்கள் அவ்வளவு உறுதி வாய்ந்தது இல்லை என்பதால், இனிப்பு உண்டபின்னர் உடனுக்குடன் நன்கு கொப்பளித்துவிடுகிறேன். இப்படிச் செய்வதால், பற்களுக்கிடையில் இனிப்பின் தூள்கள் மாட்டிக்கொண்டு அதன்மூலமாக பற்கள் சொத்தை ஆவதும், ஆடுவதும், சேதமாவதும் குறிப்பிடும் வகையில் தவிர்க்கப்படுகிறது. இந்த விஷயங்களை நான் ஒரு பல் மருத்துவர் போலகூறவில்லை. நாற்பது வருடங்கள் பற்களுடன் நான் அனுபவித்து வரும் ஒரு வலி (மை) யான உணர்ந்த அனுபவங்களால் கூறுகிறேன்.

ஒருமுறை பல் மருத்துவரிடம் கேட்டேன் "டாக்டர், என்னக்கு எவ்வளவு உண்மையான பற்கள் எவ்வளவு பொய்ப்பற்கள்? அவர் சிரித்துகொன்டே கையை இப்படி அப்படி அசைத்து ஜாடை காட்டினார். நான் கேட்டேன் ' பாதி பாதியா" என்று. அவர் சிரித்தபடி கூறினார் "ஆமாம் பிப்டி பிப்டி ".

இன்று அறுப்பதைத்தாண்டி வாழ்க்கை வண்டி விரைந்து ஓடுகையில், என் பற்களைப் பற்றிய பற்பல அனுபவங்கள் நினைவிற்கு வந்து அவை ஒருவித பல்சுவையாக என் மனதில் மலர்கின்றன. கூடியமான வரையில் நான் பற்களுக்கு அதிக வேலை தரும் கடினமான தின்பண்டங்களை உண்பதில்லை. ஹோட்டல் போன்ற இடங்களில், கல் கூழாங்கல் இவை வாயில் அகப்பட்டால், உடனடியாக அவற்றை நாடு கடத்திவிடுகிறேன்.

நல்ல நெய் அல்லது எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான முறுக்கு, சீடை, தட்டை போன்றவற்றைத்தான் எப்போதாவது கொரிப்பேன். அப்படி இல்லை என்றால் கொக்கரிப்பேன்.
இதைப்படிக்கும் உங்களுக்கும் என் பணிவான பல்மொழி, இல்லை, சொல்மொழி இதுதான் "மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகளை தயவுசெய்து பின்பற்றுங்கள். பல்லை எடுத்துதான் ஆகவேண்டும் என்றால், பிடுங்கிவிட்டு நல்ல உறுதியான பொய்ப்பற்களை (ஆங்கிலத்தில் கிரௌன்) பொருத்திக்கொள்ளவேண்டும். இதில் பிளாஸ்டிக், போர்சலின், செராமிக் மற்றும் அக்ரிலிக் பொய்ப்பற்கள் வகைகள் அடங்கும்.

ஆபத்துக் காலத்தில் திடீரென்று பணம் புரட்டவேண்டிய அவசியம் இருக்கும் என்று எண்ணுபவர்கள் அல்லது நம்புபவர்கள் தங்கப்பற்கள் கூட கட்டிக்கொள்ளலாம். அந்தாஅவசரம், பணம் தேவை எனும்போது, அருகில் உள்ள பல் டாக்டரிடம் சென்று வாயைப்பிளந்தால், அடுத்த பத்து நிமிடங்களில் தங்கப்பல்லை தட்டி எடுத்துக் கொடுத்துவிடுவார். எடுத்த தங்கப்பல்லைதான் டாக்டர் உங்களிடம் தருகிறார் என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளுங்கள். (நீங்கள் பொருத்திக்கொள்ளும் தங்கப்பல்லில் உங்களின் QR கோடினை பதித்துவிட்டால் இன்னமும் பாதுகாப்பு) ஆரோக்கியமான பற்கள் அமைவது கொடுப்பினை. அறுபது வயதிலும் முப்பது பற்கள் (சொந்த) வலுவுடன் இருப்பது இன்னும் பெரிய கொடுப்பினை. பல் டாக்டருக்கு மொய் எழுதாமல் இருப்பின், அதைவிடச் சிறந்த கொடுப்பினை வேறு இருக்கமுடியாது. பற்கள் போனால் சொற்களும் போய்விடும். பற்கள் இருந்தால் தானே, வெந்த முருங்கைக்காயை நன்றாக கடிக்கமுடியும், அப்போதானே பொங்கல் அன்றும் கரும்பை கடித்து ருசிபார்க்க முடியும், அவ்வப்போது முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகள் கொரிக்கமுடியும். நல்ல சொற்கள் இருந்தால் தான் நம்மிடம் நாலு பேர்கள் வருவார்கள்.

எனவே நம் வாயிலிலுள்ள பற்களையும், வாயிலிருந்து வரும் சொற்களையும் கவனமுடன் கவனிப்போம். பல்சுவையுடன் இனியவாழ்வு வாழ்ந்திடுவோம்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-May-23, 3:36 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 45

மேலே