கற்றொறுந்தான் கல்லாத வாறு - பழமொழி நானூறு 332

இன்னிசை வெண்பா

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு. 332

- பழமொழி நானூறு

பொருளுரை:

கற்றார் முன்பு ஒன்றைச் சொல்லுந்தோறும் குற்றம் உண்டாதலால் மனத்தளர்வின்றி கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி கல்லா தொழிந்த நாட்களுக்கு வருந்தி, மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து, வருந்தி அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின் பின்னும் நூல்களைக் கற்குந்தோறும் தான் கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவன்.

கருத்து:

படிக்குந்தோறும் அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.

விளக்கம்:

வழியிரங்குதல் - ஓர் இன்பத்தை அடையும் பொழுது அங்ஙனம் அடையாது நின்ற நாளுக்கு வருந்துதல்,

சோம்பலின்றி அறியாதவனாக மதித்து ஆராயவே இந்த அறிவு தோன்றும். அது தோன்றுமாதலால் மேலும் மேலும் கற்றலான ஊக்கம் பிறக்கும். அதனான் மிகுந்த இன்பம் பெறலாம்.

சிறந்த பொருள்களை அறியும் அருமை நோக்கியே ஆசிரியர் 'உற்று ஒன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேல்' என அறியும் அருமைப்பாடு விளக்கினார்.


‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி!.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-23, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே