தலைமைத்துவ பண்பு

"இன்றைய அரசியல் எப்படி உள்ளது?", இன்று நண்பர் ஒருவர் தியாகுவிடம் கேட்டார். தியாகு சொன்னார், "வெறுப்பை விதைக்கிறது அரசியல் என்றானது." என்று. "ஏன் அப்படி சொல்கிறாய்?", என்று நண்பன் கேட்டார். "அறிவும், நற்பண்பும், நற்சிந்தனையும் இல்லாத மனிதர்களே இங்கே அதிகமாக அரசியலில் ஈடுபடுகிறார்கள்.",என்றார் தியாகு.
"அப்படியா சார்? இப்போது அறிவும், நற்பண்பும், நற்சிந்தனையும் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?", என்று கேட்டார் அந்த நண்பர்.

"குற்றமுள்ள எதுவும், சுயநலமிக்க எதுவும் அறிவோடு பொருந்தாது. அறிவோடு பொருந்தி வாழாத எவராலும் நற்பண்பிற்கு உரியவராக இயலாது. நற்பண்பில்லாத எவராலும் நற்சிந்தனையைக் கொண்டிருக்க இயலாது. ஆதலால், இன்றைய உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அதற்குக் காரணமாகிய தலைவர்களுக்கு எல்லாம் அறிவும், நற்பண்பும், நற்சிந்தனையும் இல்லை என்கிறேன்.", என்று தியாகு கூறினார்.

"நீ கூறுவது உண்மை என்றால் அறிவும், நற்பண்பும், நற்சிந்தனையும் இல்லாதவர்களை மக்கள் எப்படித் தேர்ந்தெடுத்து இருப்பார்கள்?", என்று நண்பர் கேட்டார். "மக்கள் அறிவாளிகளாக பகுத்தறிவாளர்களாக இருந்திருந்தால், அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்?", என்றார் தியாகு. "அப்படியானால் மக்களுக்கு அறிவில்லை என்று சொல்கிறாயா?", என்று தியாகுவிடம் நண்பர் கேட்டார்.

"இதற்கான பதிலை ஒரு கதையின் மூலம் கூற விரும்புகிறேன்.", என்று கூறிய தியாகு,
"ஒரு விவசாயியிடம் ஒரு மாந்தோட்டம் இருந்தது. அதன் காவலுக்கு ஐந்து நாய்களை வளர்த்து வந்தார் அந்த விவசாயி. அந்தத் தோட்டத்தில் அது மாங்காய் சீசன் என்பதால் மாமரத்தில் மாங்காய்கள் நன்றாக காய்த்துத் தொங்கின. இதனைக் கண்ட ஆறு கயவர்கள் அந்த தோட்டத்தில் காய்த்திருந்த மாங்காய்களை திருட திட்டம் தீட்டினார்கள்.
அதன்படி நள்ளிரவில் தோட்டத்திற்கு புகுந்து மாங்காய்களை திருடுவது என்பது முடிவானது. காவலுக்கு இருக்கும் நாய்களை என்ன செய்வது என்று யோசித்தவர்கள் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகளை நாய்களுக்கு போட்டு விடலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.

அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அந்த நபர்கள் தோட்டத்திற்கு வந்தனர். யாரோ ஆறு பேர் இரவு நேரம் தோட்டத்திற்கு வருவதை கண்ட நாய்கள் குரைத்தன. அதை கண்டு பயந்த திருடர்கள் கையில் இருந்த பிஸ்கட்டுகளை நாய்களுக்கு விட்டு எறிந்தனர். பிஸ்கட்டுகளை கண்டதும் ஐந்து நாய்களில் நான்கு நாய்கள் குரைப்பதை நிறுத்திவிட்டு பிஸ்கட்டுகளைத் தின்னச் சென்றன.

அதைக் கண்ட மீதமிருந்த ஒரு நாய் மட்டும் தன் சக நண்பர்களை நோக்கி,"அதை தின்னாதீர்கள். இவர்கள் திருடர்கள், காரணம் இல்லாமல் நமக்கு பிஸ்கட்டுகளை போட மாட்டார்கள். அதை தின்னாதீர்கள்.", என்றது. அதைக் கேட்ட மற்ற நாய்கள், "இவன் ஒருத்தன், எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டு கொண்டு இவனும் சாப்பிட மாட்டான்; மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டான்.", என்று பேசிக்கொண்டே பிஸ்கட்டுகளைத் தின்றன. பிஸ்கட்டுகளைத் தின்ற நாய்கள் மயங்கி விழுந்தன. அதைக் கண்டு மகிழ்ந்த திருடர்கள் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். தன் கடமையை உணர்ந்த, பிஸ்கட்டுகளை சாப்பிடாத அந்த ஒரு நாய் மட்டும் அந்த திருடர்களை எதிர்த்து போராட முடிவு செய்து அவர்களை நோக்கி குரைத்து கொண்டே ஓடி வந்தது. திருடர்களும் அதற்கு பிஸ்கட்டுகளை போட்டு பார்த்தார்கள். பிஸ்கட்டுகளை அந்த நாய் மோந்து கூட பார்க்கவில்லை.

அதைக் கண்டு திருடர்கள் மிரண்டு ஓட ஆரம்பித்தார்கள். திருடர்களில் ஒருவன் ஒரு கட்டையை எடுத்து விரட்டி வந்த அந்த நாயைத் தாக்கினார். அடிபட்டு கீழே விழுந்தாலும் நாய் மீண்டும் எழுந்து திருடர்களை விரட்டியது. நாய் விரட்டியதில் சிதறி ஓடிய திருடர்களில் இரண்டு பேர் இருளில் பக்கத்தில் இருந்த பாழும் கிணத்தில் விழுந்தார்கள். மற்றவர்கள் தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டார்கள். மறுநாள் காலை அந்த விவசாயி வந்து தன் தோட்டத்தை பார்க்கும் போது, கிணற்றில் இரண்டு திருடர்கள் பிடிபட்டு இருந்தார்கள். ஒரு நாய் மட்டும் அடிபட்டு நடக்க முடியாமல் படுத்திருந்தது. அதைச் சுற்றி மற்ற நான்கு நாய்களும் கண்ணீர் விட்டபடி நின்றிருந்தன.", என்று கதை கூறி முடித்த தியாகு, மேலும், "எவர் எதை கொடுத்தாலும் அதை நம்பி வாங்கிக் கொள்வதும், யோசனை இன்றி தற்சமயத்திற்கு மட்டும் தன் வயிறு நிறைந்தால் போதும் என்று யோசிப்பதும் அறிவின்மையின் அடையாளமாக இருக்கும். அந்த கதையில் பிஸ்கட்டுகளைத் தின்ற நான்கு நாய்களும் மயங்கி போய்விட்டன. அதனால், தன் கடமையை அவர்களால் ஆற்ற இயலவில்லை. அவர்களை எச்சரித்த நாயோ தன் கடமையைச் செய்வதில் முனைப்பாக செயல்பட்டு ஒற்றையாக அவர்களை விரட்டி அடித்து இருவரை பிடித்தும் கொடுத்து விட்டது. அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அது தன் கடமைகளில் இருந்து தவறவில்லை. அது ஒரு பகுத்தறிவுள்ள ஜீவனுக்குரிய பண்பாகும். தலைவனுக்கு உரிய பண்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும். அதேபோல் மக்களில் பலரும் தற்சமயத்திற்கு வயறு நிறைந்தால் போதும் என்னும் எண்ணத்தோடு தங்கள் வாக்குரிமையை பணத்திற்கு விற்று விடுகிறார்கள். இதனால், தகுதியற்றவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமரும்படியாக அமைகிறது. இதனால் நாடு என்னும் தோட்டமும் சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. மக்களுக்கு பகுத்தறிவு இருந்தால், ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணம் தருகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் எவ்வளவுக் கொள்ளையடிப்பார்கள்? என்று சிந்தித்து அறிந்திருப்பார்கள். இப்போது புரிகிறதா நான் ஏன் மக்களை அறிவில்லாதவர்கள் என்று கூறினேன் என்று?", என்று தியாகு தன் விளக்கத்தை விளக்கினார்.

அதை அந்த நண்பரும் ஒத்துக்கொண்டார்.

கதை உணர்த்தும் நீதி:- "ஓட்டுக்கு நீ வாங்கும் பணம் நாய்க்கு போடப்படும் பிஸ்கட் துண்டை போன்றது. அந்த நேரம் உனது பசியை ஆற்றுவதாக தோன்றலாம். ஆனால், ஐந்து வருடத்திற்கு நீ கேள்வி கேட்கும் உன் அதிகாரத்தை பறிக்கும். கேள்வி கேட்க முடியாத நீ நடை பிணத்திற்கு சமம். சரியான தலைவனை தேர்ந்தெடுக்க ஒரு தலைவனை போல் பகுத்தறிவோடு சிந்தித்து செயல்படுங்கள்.".

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-May-23, 2:19 am)
பார்வை : 181

மேலே