திக்கெட்டும் கொலைகள்

வருவோர்க்கு அள்ளிக் கொடுத்துக்
கொடைவள்ளல் தானென்று
மனப் பள்ளங்களை நிறைக்கிறான்
ஆற்றுமணற் கொள்ளையன்

சுட்டெரிக்கும் வெயிலில்
நடை தளர்ந்து விழுந்தவரிடம்
கையில் குடையை நீட்டுகிறான்
பசும் மரங்களை வெட்டியவன்

பறவையொடும் விலங்கொடும்
செயற்கை நீரூற்றைக் கட்டுகிறான்
நாள்தோறும் பாரவுந்துகளில்
பெரும் மலைகளைக் கடத்தியவன்

நாவறண்டு அலைவோரின்
நீர்வேட்கையைத் தணிக்கிறான்
ஆழ்துளைக் குழாய்களால்
நிலத்தடி நீரையுறிஞ்சி விற்றவன்

தேங்கிய நீரை வெளியேற்ற
நீரிறைப்பியைக் கொடுக்கிறான்
அடுக்ககங்கள் கட்டுவதற்கு
ஏரி குளங்களைத் தூர்த்தவன்

இடரனைத்தும் தந்தவனைக்
கருணையின் வடிவென்று
இன்னும் புகழ்பாடி அலைகிறது
ஊருக்குள் ஒரு கூட்டம்

அடுத்து என்னென்ன நடக்குமோ?
உடற்சோர்ந்த நரம்புகளெங்கும்
ஊக்கம் பெற்று விரைகிறான்
இயற்கையைக் கொலை செய்தவன்.

(கச/சா/உ0ருச)

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (15-Jun-23, 5:11 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : thikkettum kolagal
பார்வை : 143

மேலே