ஈயாதான் செல்வம் அழகொடு கண்ணின் இழவு - பழமொழி நானூறு 343
இன்னிசை வெண்பா
முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்
இழவென் றொருபொருள் ஈயாதான் செல்வம்
அழகொடு கண்ணின் இழவு. 343
- பழமொழி நானூறு
பொருளுரை:
முழவு போன்றொலிக்கும் கடலாற் சூழப்பட்ட உலகமுழுதையும் ஆண்ட அரசர்கள் திருவிழா நடந்த ஊரில் ஆடிய கூத்தைப் போலப் பொலிவின்றி செல்வம் கெட்டொழிவதைப் பார்த்திருந்தும் நாமும் ஒருநாளில் இப்பொருளை இழந்து நிற்போம் என்று நினைத்து, இரந்தவர்க்கு ஒருபொருளையும் கொடாதவனது செல்வம் வடிவும் அழகும் உடையான் ஒருவன் கண்ணிழந்து நிற்றலை யொக்கும்.
கருத்து:
செல்வம் ஈகையின்றி விளங்குதலில்லை.
விளக்கம்:
'முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் வீழ்ந்தவிதல் கண்டும்,' என அரசனது செல்வ நிலையாமையை உணர்த்தியவாறு. இது கண்டாவது ஈதல் வேண்டும் எனக் கண்கூடாக ஒன்று காட்டியவாறு.
ஒருவன் வடிவும் அழகும் பெற்றிருப்பினும் கண்களைப் பெறாவிடின் அவை பொலிவுறாவாறு போலச் செல்வம் ஈகையின்றிப் பொலிவுறுதல் இல்லை,
'அழகொடு கண்ணின் இழவு' என்பது பழமொழி.