அஃதன்றோ யானைபோய் வால்போகா வாறு - பழமொழி நானூறு 342
நேரிசை வெண்பா
சிறந்ததம் மக்களும் செய்பொருளும் நீக்கித்
துறந்தார் தொடர்ப்பா(டு) எவன்கொல் - கறங்கருவி
ஏனல்வாய் வீழும் மலைநாட! அஃதன்றோ
யானைபோய் வால்போகா வாறு. 342
- பழமொழி நானூறு
பொருளுரை:
ஒலித்து வரும் அருவிகள் தினைப்புனத்தின்கண் வீழும் மலைநாடனே!
சிறப்புடைத்தாய தம்முடைய மக்களையும் தாம் ஈட்டிய பொருளையும் பற்று விட்டுத் துறந்தவர்கள் தமது உடம்பின்மீது பற்றுக் கொண்டு ஒழுகுதல் எது கருதி? ஒரு வாயிலின்கண் யானை போய் அதன் வால் போகாவாற்றை அஃதொக்குமன்றோ.
கருத்து:
துறவறநெறி நின்றார் அகப்பற்றினை முற்ற நீக்குக என்றது இது.
விளக்கம்:
உடம்பின்மீது சிறிது பற்றுக்கொள்ளின், அது காரணமாக ஒழிந்த பற்றுக்களெல்லாம் வந்து சேருமாதலின், அதனை முற்ற அறுத்தல் வேண்டும்.அது யானை போயும் வால் போகாதவாற்றை யொக்கும்.
'யானை போய் வால் போகா வாறு' என்பது பழமொழி.