பழந்தமிழ் நாடு
பழந்தமிழ்நாடென்னும் போதினிலே
பல எண்ணங்கள் தோன்றுது நெஞ்சினிலே...
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே இங்கு
முன்தோன்றி தேன்தமிழ் தித்திக்குதே
மொழியினை காத்திட தொல்காப்பியம்
பல இலக்கண வரம்புகள் படைத்ததுவே.
சங்கப் பலகையில் வைத்தே நித்தம்
தங்கத் தமிழினைக் காத்ததுவே.
இரண்டடி வள்ளுவம் கூறியதை அன்று
நாலடியும் போற்றி வாழ்ந்ததுவே.
அகமும் புறமும் பிரித்தே தமிழும்
வாழ்வின் சூத்திரம் பகர்ந்ததுவே
வந்தாரை மனம் வாடாமல் வாழ
மனித நேயம் அன்பாய் வளர்த்ததுவே
புதியது எதுவான போதிலும் தன்னுள்
ஏற்று வைரமாய் மின்னியதே..
எதுவந்து கலந்து போனாலும் தமிழ்
தன்னிலை மாறாமல் தழைத்ததுவே
மூவேந்தர் தலை கொண்டே அன்று
முத்தமிழும் ஓங்கி வளர்ந்ததுவே.
கற்றாலும் காதில் கேட்டாலும்
கன்னித்தமிழ் இங்கு கரும்பாய் இனித்திடுதே
பொற்காலம் அது பொற்காலம் என்றே
பார்முழுதும் பறை கொட்டிடுதே
சிங்கப்பூர் பொழில் பண்பலையில்
ஒலிபரப்பான கவிதை