எனது ஆலயம்
எனது ஆலயம் :- பாகம் 5
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
புனிதர் குழந்தை தெரேச வாழ்க்கை வரலாறு :
"இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்"
- புனிதர் குழந்தை தெரேசா
படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார். தெரேசாவின் சகோதரி செலின் கொண்டுவந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார். அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது.
“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது”
என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.
அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது. இதோ அப்பகுதி:
“ஆண்டவர் கூறுவது இதுவே; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்”
கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார். தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார். எனவே, உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.
இதையே அவர் "சிறு வழி" (little way; பிரஞ்சு மூலத்தில் petite voie) என்று அழைத்தார். 1895 பெப்ருவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" (toute petite) என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.
தொடரும்....
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்