யார் பெரியவன்-அத்தியாயம் இரண்டு

அத்தனை ஜீவன்களுக்கும்
அடிப்படை ஆதாரம் நான் தானே !
◆ ◆ ◆
என்னை காட்டிலுமா
நீங்கள் உயந்தவர்கள்?
சொல்லுங்கள்!!
◆ ◆ ◆
மாந்தர் அணிகலன்
முத்திரை பொன்னும்
மானம் காக்கும்
முழுநீள ஆடையும்
மண்ணில் இல்லா(து)
விண்ணிலா வந்தது?
◆ ◆ ◆
பிஞ்சு மழலை
பாதம் எடுத்து
கொஞ்சி விளையாடுவது
என்னுடன் அன்றி யாருடன்?
◆ ◆ ◆
இளந்தளிர் முட்டி
இரவல் வெளிச்சம் ஒட்டி
இலை விரித்து நிற்பது
இப்புவனத்தின் மீது இல்லா(ம)ல் எங்கு?
◆ ◆ ◆
குவலயத்தின் கேள்விகளால்
கு த்தி
குலை நடுக்கம் வந்தது நால்வருக்கும்.
◆ ◆ ◆
அகலிடம் இன்றி -உயிர்களுக்கு
புகலிடம் ஏது?
◆ ◆ ◆
கரும்பாறை மலைகளும்
கடல் கொண்ட அலைகளும்
கவிபாடி மகிழ்வது என்னுடன் தான்
கண்டதில்லையோ நீங்கள்?
◆ ◆ ◆
பாலைவன மணலும்
சோலைவன குயிலும்
சொந்தம் கொண்டு ஆடுவது
மேதினி மேல் தான் - என்பதை
மேலும் சொல்லவோ?
◆ ◆ ◆
அண்டத்தின் வாதமானது
கண்டம் தாண்டியும் சென்றது.
◆ ◆ ◆
அந்தரத்தில் தொங்கும்
அடிமை வாழ்விலும்
அன்னை மடி விரித்து
அரவணைப்பது யார்?
◆ ◆ ◆
தரணி
பரணி
பாடியது.
◆ ◆ ◆
பொழில் பொழிந்த
வார்த்தைகளால்
எழில் குன்றி நின்ற நீர்
வார்த்தை போர் புரிய வசப்பட்டது
தன்னிலை மறந்து
தலைகனம் கொண்டீரே! மூடரே!!
◆ ◆ ◆
தண்ணீர் இல்லாமல் போனால்
தரணி எது?
அது பாடும் பரணி எது?
◆ ◆ ◆
நின்று விழுந்தால் அருவி!
நீட்டி படுத்தால் ஆறு!
சென்று சேருகையில் நதி!
சேர்வேன் கடலில் - அதுவே என் விதி!
◆ ◆ ◆
எந்நிலை கொண்டபோதும்
நன்னிலை செய்வதே என் பணி!
◆ ◆ ◆
என்னை விடவா
நீங்கள் உயர்ந்தவர்கள்?
சொல்லுங்கள்.
துளி துளியாய்
கண்ணீர் விட்டும்
துவளாத வாதம்
எடுத்தது நீர்.
◆ ◆ ◆
உலகின் முக்காலும் நானே!
உதிரத்தின் முக்காலும் நானே!
◆ ◆ ◆
உயிர்களின் முதல் உணவும் நானே!
உயிர்மையின் முதல் வரவும் நானே!!
◆ ◆ ◆
தர்க்கத்தில் - வீழ்ச்சி காணாது
எழுச்சி கொண்டது நீர்!
◆ ◆ ◆
பேதமை மறுப்பவன் நான்!
பெய்யும் மழை துளியும் நான்!!
◆ ◆ ◆
என் ஓட்டம் நின்றால்
உங்களின் ஆட்டம் எது?
அறல் தன் வாதத்தை
அறமுடனே தைத்தது
◆ ◆ ◆
விசும்பில்
விஷம் கலப்பதென்பது எது?
◆ ◆ ◆
அமிர்தம் நான்
பொழிய மறுத்தால்
அகிலத்தின் ஜீவராசிகளுக்கு
அடைக்கலம் எது?
◆ ◆ ◆
நீர் ஆறாய் கரை தொட்டு நின்றது!
◆ ◆ ◆
புனல் மொழிந்த மொழியால்
தணல் பற்றி எரிந்தது
◆ ◆ ◆
தன் தரப்பு வாதம் வைக்க
இறுதியாய் வந்தது
(இரு) (தீயாய்) வந்தது!
◆ ◆ ◆
மதி குன்றி போனதோ?
மயக்கம் ஏதும் சேர்த்ததோ?
◆ ◆ ◆
மழலை போல்
உணர்வு கொண்டு
தணல்(ஐ ) ஏன்
மறந்து போனீர்?
◆ ◆ ◆
ஆதவன் என்பது
ஆரம்ப நெருப்பு
அகிலம் என்பது(ம்)
ஆறிய நெருப்பு
◆ ◆ ◆
ஆகும் என்னால் என்பது
ஆணவ நெருப்பு
அடிவயிற்றிலும் கழன்று
எறிவது நெருப்பு
◆ ◆ ◆
எங்கும் உள்ளது
எந்தன் இருப்பு
ஏனோ இறுமாப்புடன்
கொண்டீர் சிரிப்பு!
◆ ◆ ◆
அமிலம் உமிழும் வண்ணம்
அக்கினி வார்த்தையால் சுட்டது!
◆ ◆ ◆
சுவாச காற்றிலும்
உள்ளது நெருப்பு
சுடர் விடும் ஒளியிலும்
மிளிர்வது நெருப்பு
◆ ◆ ◆
ஆரல் வார்த்தைகளால்
ஆர்ப்பரித்து நின்றது!
◆ ◆ ◆
பந்தம் வெறுத்த (தீ)
தீப் (பந்தம்) தூக்கி நின்றது!
◆ ◆ ◆
அஞ்சும் போரிட்டது
அஞ்சாமல் போரிட்டது!
இன்னும் வ(ள)ரும்.

எழுதியவர் : நா தியாகராஜன் (1-Jul-23, 11:57 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 54

மேலே