ஃபாதர் மரிய சிகாமணி

ஃபாதர் மரிய சிகாமணி
இவர் மறைந்தது அறிந்து
வருந்தும் மாணவர்களின்
நினைவுத் தொகுப்புகள்
பார்த்து பார்ப்பவர் கண்களிலும்
கண்ணீர் வருகிறது..
கேட்பவர் நெஞ்சங்களை
கசக்கிப் பிழிகிறது...

எத்தனை கோடி ஆண்டுகள்
நமக்கு முன்னே
இன்னும் எத்தனை கோடி
ஆண்டுகள் நமக்குப் பின்னே
இருந்தும் ஒரு
எண்பத்து மூன்று ஆண்டுகள்
வாழ்ந்து மறைந்த
ஃபாதர் சிகாமணி தன்
செயல்களின் வண்ணங்களால்
நெஞ்சங்களை ஆள்கிறார்..
சகாப்தம் ஆகிறார்...

திறமையும் அன்பும் கனிவும்
பிறரின்பால் அக்கறையும்
நேர்த்தியான உழைப்பும்
சேரும்போது ஒரு பிறவி
ஒரு அவதாரமாகிறது...
ஃபாதர் மரிய சிகாமணி
அவர்களின் வாழ்வு இதற்கு
நல்ல உதாரணமாகிறது...

ஃபாதர் மரிய சிகாமணி
ஆங்கிலப் பாடம் எடுக்கும்
விதம்... ஷேக்ஸ்பியரைக்
கொண்டாடும் பதம்..
மாணவர்கள் இடையே
உரையாட வைத்து பாடங்களைக்
கொண்டு செல்லும் நயம்..
நண்பர்கள் சொல்லக் கேட்டு
சொக்க வைக்கிறது...
இன்னொரு முறை
பள்ளிக்குச் சென்று
படிக்க ஆசை வருகிறது...

அரசாங்கமே ஆவன செய்..
எந்த வயதிலும்
நினைத்த நேரம் பள்ளிகளுக்குச்
சென்று படித்து வர...

ஷேக்ஸ்பியரின் நாடகம்
ஃபாதர் மரிய சிகாமணி
பாடம் எடுக்கும் அழகை
பள்ளிகளில் ஒரு பாடமாக
வைக்கலாம்.. ஆங்கிலம்
கற்பிக்க கற்க
அனைவரையும் ஈர்க்கலாம்..

சென்ட் சேவியர்ஸ்
சென்ட் மேரிஸ்... கார்மல்
பள்ளிகள் எல்லாம்
இந்தியாவில் இருந்தும்
ஏதோ வெளிநாட்டில் இருந்த
பள்ளிகளாய் பிரமிப்பை
உருவாக்கிய பள்ளிகள்..
இங்கு படிக்கவில்லையே
என்று ஏங்க வைக்கும் பள்ளிகள்..

அங்கெல்லாம் பணிபுரிந்த
ஃபாதர் மரிய சிகாமணி
ஒரு வீர சிகாமணி
விவேக சிகாமணி...
இவரை வைத்துப் பாடலாம்
இன்னொரு சீவக சிந்தாமணி..

வாழும்போதே இறைவனுக்கு
பிடித்த மாதிரி வாழ்ந்த
இவர் இறந்த பிறகு
இறைவனோடு இருப்பார்..
நம்மை ஆசீர்வதிப்பார்...

இவரது சுயவிவரங்களை
கைபேசியில் பதிவிறக்கம்
செய்து கொள்கிறேன்...
கைபேசியின் மதிப்பைக்
கூட்டிக் கொள்கிறேன்...

ஃபாதர் மரிய சிகாமணி...
ஆன்மா அமைதி கொள்ள
வீரசிகாமணி சுந்தரராஜனின்
இதய அஞ்சலி...

💐🌺🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Jul-23, 7:19 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 41

மேலே