ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு - பழமொழி நானூறு 354

நேரிசை வெண்பா

நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்
மெலிந்தொருவர் வீழாமை கண்டு - மலிந்தடைதல்
பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய்!
ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு. 354

- பழமொழி நானூறு

பொருளுரை:

பூக்கள் என்று பிழையாகக் கருதி வண்டுகள் மருங்கு வந்து அணைந்து ஆடும் கண்களை உடையாய்!

ஒருவர் நாள்தோறும் நலிதலைச் செய்து பகைவரை அடும்பொருட்டுப் புகுந்தால், உயிர்மெலிந்து ஒருவரும் இறந்த வீழாமையைக் கண்டு அச்சம் மிகுந்து அவரை அடைக்கலமாக அடைதல் அம்பினின்றும் பிழைத்துப் புறமுதுகிட்டுத் தன்னைக் காத்துக்கொள்ளுமாற்றை ஒக்கும்.

கருத்து:

போரின்கண் புகுந்த பின்னர்ச் சரணாக அடைதல் இழிவைத் தருவதொன்றாகும்.

விளக்கம்:

மெலிந்து ஒருவரும் என்ற உம்மை விகாரத்தாற் றொக்கது. போரின்கண் ஆராய்ந்தே புகுதல் வேண்டும். புகுந்த பின்னர் அவர் வலிமையைக் கண்டஞ்சிச் சரண்புகுதல் புறமுதுகிட்டு ஓடுதலை யொக்கும்.

'ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-23, 6:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே