இனிய பொழுதுகள்

காலைபொழுதில் தோளில் துண்டோடு
வாயில் வேப்பங்குச்சியுமாய்
கொல்லைபுற வாசல்வழி
வயல்வெளி ஒத்தையடி பாதையில்
எட்டி நிற்கும் குட்டி முட்களை மிதித்துகொண்டே
ஆற்றங்கரை பாதையோர
கருவைமர கிளைகளின் கீரல்களோடு
குறுக்கே வந்தவரையும்
சிலநேரம் குப்புற தள்ளிவிட்டு குளிக்க ஓடிய
மின்னல்நேர தருணங்களும்...

சீரும் ஆற்றின் படித்துறை ஓரமாய்
பாய்ந்துகுதித்து கீறும் மணலிடையே
பாதங்கள் படியநின்று மூச்சை இடைநிறுத்தி
பலமணிநேரம் மூழ்கி கிடந்து
நெஞ்சளவு நீரினுள் நீச்சலோடு நிலைத்து
லயித்து கிடந்ததும்...
வற்றிய ஆற்றில் இடுப்பளவு நீரினுள்ளே
கருத்த கிடந்த பல ஒருரூபாய் நாணயங்களை
கண்டெடுத்து களிப்புற்றதும்...
பாசி படிந்த படிகளை எண்ணி
என் பெயரையும் எழுதி பார்த்து மகிழ்ந்ததும்...
கிளிஞ்சல் எடுத்து நீரை கீறி தட்டுகல்விட்டு
தம்பட்டம் அடித்து சிரித்ததும்...
துண்டினாலே வலைவீசி துள்ளிக்குதித்த
சின்னஞ்சிறு மீன்களையெல்லாம்
அள்ளியெடுத்த அந்த காலை பொழுதுகளும்...

ஒய்யாரமாய் ஊர்சுற்றி
பனை இலந்தை ஈச்ச மரம் தேடியலைந்த
அந்த மதியநேர பொழுதுகளும்...
ஆத்தங்கரையோர ஆலமர நிழலில்
பாலத்து மதில்மேல பலமணிநேரம் அமர்ந்து
ஊர்கதை பேசி திரிந்த அந்த மாலை பொழுதுகளும்...
இதுபோல் இன்னும்பல இனியபொழுதுகள்
இனிவொரு நாளும் திரும்பவும் வந்துவிடுமா...?

எழுதியவர் : இமலாதித்தன் (9-Aug-10, 1:08 pm)
சேர்த்தது : emalathithan
பார்வை : 500

மேலே