அஃதன்றோ பூவொடு நாரியைக்கு மாறு - பழமொழி நானூறு 356
நேரிசை வெண்பா
(லொ வொ இடையின எதுகை)
பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
பூவொடு நாரியைக்கு மாறு. 356
- பழமொழி நானூறு
பொருளுரை:
ஒளி வீசுகின்ற இலைவடிவாகச் செய்யப்பட்ட வேலொடு நேராக ஒத்த கண்ணையுடையாய்!
உயர்ந்த குடியிற் பிறந்தவர்களும் கீழ்மக்களைத் தமக்கு இனமாகக் கொண்டொழுகுதல் ஆகிய அச்செய்கை பூவோடு நாரைச் சேர்க்கும் நெறியல்லவா?
கருத்து:
பெரியார் சிறியாரோடு ஒழுகுதல் பூமாலையைப் போல் அழகினைத் தருவதாம்.
விளக்கம்:
பூவினால் நாரும் மணம் பெறுதல் போல, பெரியோரால் சிறியோரும் நற்குணம் பெறுவர். சிறியார் இனமாய்.ஒழுகுதல் அவர்களை நன்னெறியில் நிறுத்தற் பொருட்டேயாகும்.
'பூவொடு நார் இயைக்குமாறு' என்பது பழமொழி.