முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்- பழமொழி நானூறு 357

இன்னிசை வெண்பா

செயல்வேண்டா நல்லன செய்விக்கும்; தீய
செயல்வேண்டி நிற்பின் விலக்கும்; இகல்வேந்தன்
தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்
முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்! 357

- பழமொழி நானூறு

பொருளுரை:

அறிவால் மூத்த அமைச்சர்கள் கூறும் சொற்கள் செய்ய முடியாத நல்லனவற்றைச் செய்விக்கும்; அரசன் தீயசெயல்களைச் செய்ய முனைந்து நிற்பின் இடைநின்று தடுத்தலைச் செய்யும்,

மாறுபாடுடைய அரசனை வலியுறுத்தி அவன்றனக்கு உறுதியாயினவற்றைக் கூறுதலால் முன்னே துன்பந் தருவதாக இருக்கும்! (பின்னே மிக்க இன்பத்தை அளிக்கும்)

கருத்து:

அமைச்சர் கூறும் சொற்கள் நல்லன செய்விக்கும் தீயன விலக்கும் என்பதாம்.

விளக்கம்:

அரசனை நலிதலாவது - அவன் தனித்திருந்த விடத்து அது செய்தல் தகாது என்று பன்முறையும் எடுத்துக் கூறுதல்.

அமைச்சர்கள் கூறும்பொழுது சிறிதுகாலம் இன்னாதாய் இருப்பினும் பின்னர் நெடுங்காலம் அடையக்கூடிய இன்பத்தை அஃது அளித்தலின் அரசர்கள் அமைச்சர் சொற் கேட்க என்பதாம்.

'முன் இன்னா மூத்தார்வாய்ச் சொல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-23, 7:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே