வருடம் ஒருமுறை வருவது சுதந்திரதினம், அவ்வளவே

நம் நாடு சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் ஆகிவிட்டன. நம் நாட்டில் பலர் எந்திரம் செய்கிறார்கள், இன்னும் பலர் தந்திரம் புரிகிறார்கள், வேறு சிலரோ மந்திரம் ஓதுகிறார்கள். ஆனால், நாம் பெற்ற சுதந்திரத்தை முறையாக, சரியாக நமது உண்மையான முன்னேற்றத்திற்கு நாம் உபயோகிக்கின்றோமா?

மதம் ஜாதி குலம் இன்னும் இதுபோன்ற மனிதனை மனிதன் தாழ்த்திக்கொள்ளும் அவலமான கலாச்சாரம் நிறைந்த நம் சுதந்திர பூமியில், மனிதாபிமானம் எனும் மணத்தை பரப்பும் மனிதப்பூக்கள் எவ்வளவு பூத்தன, எவ்வளவு பூத்திருக்கிறது? நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். தேசத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பாடுபட்ட மற்றும் பாடுபட்டுவரும் தலைவர்களைத்தான் சொல்கிறேன்.

நம் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள் அன்றாடம் பசியால் வாடுகின்றன. லட்சக்கணக்கான வறுமையால் வாடும் பிச்சைக்கார்கள் நாடெங்கும் நிறைந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்து காப்பாற்றும் நாள்தான் நாம் உண்மையில் சுதந்திரம் அடைந்த நாளாகும். அரசாங்கம் மட்டும் இதற்கு பொறுப்பல்ல ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் இதற்கு தார்மீக பொறுப்பேற்று நிதி மற்றும் மதியின் உதவி கொண்டு இந்த கொடிய பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும். ஒரு தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் பிறகு எதற்கு இந்த உலகம் என்று வேதனையுடன் கர்ஜித்த மகாகவி பாரதியாரின் கூற்று தவறா என்று நீங்களே மனதை தொட்டு சொல்லுங்கள்.

பலகோடி மக்கள், குறிப்பாக கிராமப்புறத்தில் இருப்பவர்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள். பள்ளி என்றால் என்ன என்று அறியாத வறுமையில் வாடும் மக்கள் லட்சோப லட்சம். நாம் படித்து மேற்படிப்பிற்கு வெளிநாடுகள் செல்கிறோம். நம் நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாவது வகுப்பு வரை படிக்கக்கூட நாம் முயற்சி எடுப்பதில்லையே? கேரளா, பஞ்சாப் போன்று மற்ற மாநிலங்களும் நூறு விழுக்காடு மக்கள் அடிப்படை கல்வி அறிவு கொண்டவர்களாக ஆவது எப்போது? உண்மையிலேயே நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கூறமுடியுமா?

'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்னும் வரிகள் பாடலில் மட்டும்தானே இருக்கிறது. மாசு மருவு இல்லாத குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகையில் சில கொடும்பாவிகள் இந்த பாடல் வரிகளை மறந்துவிடுகின்றனர். லட்சக்கணக்கான சிறுவர்களும் சிறுமிகளும் குழந்தை தொழிலாளிகளாக நடத்தப்படும் அநியாயத்தை எங்கு சென்று முறையிட? இது குழந்தைகளின் சுதந்திரத்தை பறித்துவிட்டதாக அன்றோ அர்த்தமாகும்? அப்படியெனில் நாம் உண்மையில் சுதந்திரம் அடைந்துவிட்டோமா?

பெண்களின் உரிமை, மானம் மரியாதை என்று ஒருபுறம் முழங்குகிறோம் .வருடத்தில் ஒரு நாள் மட்டும் மகளிர் புகழ் பாடுகிறோம். மற்ற நாட்களில் ஆண்களாகிய நாம் அவர்களை ஆள்கிறோம். நம் நாட்டில் எவ்வளவு பெண்களுக்கு உண்மையிலேயே உரிமையுடன் பேசவும் செயலாற்றவும் முடிகிறது? பெண்களை நம் கண்போல் பாதுகாக்கவேண்டும் என்று பொய் சொல்லிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலம் நாம் இருக்கப்போகிறோம்?

ஒரு இளம்பெண் வெளியே இரவில் தனியாக நடந்து செல்ல முடியுமா? பெண்களின் மானம் பற்றி பேசும் நாம் அவர்களை எவ்வளவு கேவலமாகவும் ஆபாசமாகவும் திரைப்படங்களில் சித்தரிக்கிறோம்? தன் உணவுப்பசியை போக்கவும், குடும்பத்தின் உணவு பசியை போக்கவும் வேறு வழியின்றி விலைமாதர்களாக மாறும் பெண்கள் எத்தனை பேர்? நாம் பிறப்பதற்கே காரணமாக இருக்கும் பெண்களின் மானம் எப்போதெல்லாம் போகிறதோ அப்போதெல்லாம் நாம் உண்மையில் சுதந்திரம் பெறவில்லை என்பதை நம் முகத்தில் அடித்துக்காட்டும் செய்தியாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்?

ஒரு புறம் படித்து பட்டம் பெறுபவர்கள் பெருகிக்கொண்டே போகின்றனர். இன்னொரு பக்கம் வேலையில்லாத்திண்டாட்டம் கூடிக்கொண்டே போகிறது. வேலையில்லாத்திண்டாட்டம் என்பது பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டது. ஒரு பட்டதாரி பட்டம்பெற்றபின் இரண்டு மூன்று வருடங்கள் வேலை கிடைக்காமல் சும்மா இருப்பின், அது அவனுடைய மனநிலையை மட்டுமின்றி அவனது குடும்ப பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. அதே நேரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்கு இது ஒரு வேகத்தடையாக இருக்கிறது. தொழில்கள் பல எந்திரமயமாக்கப்படுவதும் இதற்கு ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் மிகவும் அறிவும் திறமையும் வாய்ந்த சில படித்த இளைஞர்களின் முயற்சியால், சராசரி அறிவும் திறமையும் கொண்ட பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர். படித்தவர்களுக்கே இந்த கதி என்றால் படிக்காத இளைஞர்களைப்பற்றி என்ன சொல்வது? படித்துவிட்டு வேலைகிடைக்காமல் இருப்பதுதானா இவர்களது சுதந்திரம்?

அன்பு அமைதி என்கிற இனிய சொற்களை விட, நாம் அதிகம் காதில் கேட்பது லஞ்சம் ஊழல் என்கிற சொற்கள்தான். அரசாங்க அலுவலகம், குறிப்பாக மாநில அரசாங்க அலுவலகம் செல்லவேண்டும் என்றாலே, கையிலும் பையிலும் காசு இருந்தால்தான் வேலை நடக்கும் என்கிற அவலமான நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இப்போதெல்லாம் லஞ்சம் வாங்குபவர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு இடையில் பல தரகர்கள் வந்துவிட்டார்கள். லஞ்சம் வாங்குபவர்கள் கூச்சமும் பயமும் இன்றி லஞ்ச பணத்தை பெறுவதற்கு இந்த தரகர்கள் ஏதுவாக இருக்கிறார்கள். பல நடுத்தறவர்கத்தினர் அவர்களது நியாயமான தேவைகளுக்குக்கூட லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கிறது. என்னுடைய கார் ஒன்றை வேறு மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு எடுத்துவந்து, அந்த காரின் பதிவு எண்ணை மாற்றுவதற்கு நான் தரகர் மூலம் சென்றபோது, இருபதாயிரம் ரூபாய் வரை கொடுத்தேன். அந்த தரகர் சொன்னது "இதில் பதினைந்தாயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுப்பதற்காகவே". நீங்கள் கேட்கலாம் "நீங்கள் ஏன் தரகர் மூலம் போனீர்கள், நேரடியாக RTO அலுவலகத்திற்கு சென்று உங்கள் தேவையை செய்து முடித்திருக்கலாமே" என்று. நான் ஏற்கெனவே என் சில தேவைகளுக்காக மாநில அரசாங்க அலுவலகங்கள் சென்று பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. லஞ்சம் கொடுக்காமல் எனது வேலைகளை நான் முடிக்கவேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டு அதனால் பல மனஉளைச்சல்களை நான் அனுபவித்தேன். மீண்டும் இப்படிப்பட்ட கஷ்டங்களை பட என் மனமும் உடல் வலிமையும் தயாராக இல்லை. தூரம் மற்றும் என் உடல் மற்றும் மனஉபாதைகள் காரணமாக நான் தரகர் மூலம் மேற்கூறிய காரியத்தை செய்தேன்.
என்னிடம் பணம் இருந்ததால் கொடுக்கமுடிந்தது. முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களது நியாயமான காரியங்கள் மாநில அரசாங்க அலுவலகங்களின் மூலம் நிறைவேற எத்தனை நாட்கள் ஆகும்? தருமம் நீதி நியாயம் என்று ஒரு பக்கம் பொய் வேஷம், அநியாயம், அநீதி, லஞ்சம் ஊழல் என்று திரையின் பின் கள்ளம் கபடம் கலந்த நாடகம். இதற்காகவா நாம் சுதந்திரம் பெற்றோம்? லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் இல்லை, நாம் ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய அவமானத்திற்குரிய செயல் இது. சுதந்திரம் பெற்று 76 வருடங்களுக்கு பிறகு நாடு இருக்கும் லட்சணம் இதுதானா?

இன்று மக்களை கெடுக்கும் இரு பழக்கங்கள் மது மற்றும் போதை பொருட்கள். ஏழைகளின் வாழ்வில் குடி குடியை கெடுக்கிறது. பணக்கார புள்ளிகளின் வாழ்வில் குடி அந்தஸ்தை கூட்டுகிறது. குறைந்த விலை குடி குடும்பத்தையே அழிக்கிறது. விலை உயர்வான குடி, வாழ்க்கையின் அந்தஸ்தினை உயர்த்துகிறது. பிரவுன் சுகர், கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு பல இளைஞர்கள் பழக்கமாகி, பின்னர் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். எப்படிப்பட்ட ஒரு கொடுமை! குடியும் போதைப்பொருளும் தானா நாம் சுதந்திரத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடம்?

இவையெல்லாம் போதாது என்று மதங்கள், ஜாதிகள், குலங்கள் என்னும் கேடுகெட்ட பாகுபாடுகளால் சமுதாயம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு பதிலாக சீர்கேடு நிறைந்த போற்றுதற்கு தகுதியில்லாத சமுதாயமாக உருமாறி இருக்கிறது. மதங்கள் எல்லாமுமே அன்பினையே போதிக்கிறது என்பது உண்மையாக இருந்தால், இன்று நாட்டிலும் உலகமெங்கிலும் மதச் சண்டைகள், கலவரங்கள், பயங்கரவாத செயல்கள் எல்லாம் எப்படி சாத்தியமாகும். அன்புடன் ஒரு மதத்தினர் வாழ்ந்திடில் பின் எப்படி மற்ற மதத்தவர்களை வெறுக்கமுடியும் அல்லது ஒதுக்கமுடியும். மத வெறி பிடித்துவிட்டால் ஒருவன் மதம் பிடித்த யானையைவிட மோசமாகவும் அபாயமாகவும் செயல்படுகிறான். மதம் என்பது நாட்டின் தலைநகர் என்றால், ஜாதி மாநிலத்தின் தலைநகர் போன்றது. உயர்வு தாழ்வு என்பதை பணம் மட்டுமின்றி வேறு ஒரு வழியிலும் காட்டுவதுதான் ஜாதி எனும் அசுர லட்சணம்.

இன்னமும் நம் நாட்டில், ஒரே ஜாதி, ஒரே குலத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதுகொள்வதுதான் நாகரீகமாகவும் பண்பாடாகவும் கருதப்படுகிறது. 'ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே' என்பது வெறும் பாட்டு அளவிலும் ஏட்டு அளவிலும்தான் இருக்கிறது. மதமும் ஜாதியும்தானா சுதந்திரம் நமக்கு தந்த பொக்கிஷங்கள்?

ஜாதிக்குள்ளாகவே குலம் என்ற ஒன்று மனிதனை மனிதனிடமிருந்து பிரித்துவைக்கும் கேவலமான பிரிவினை. இதையெல்லாம் அமைத்துவைத்தவர்கள் வருங்காலத்தை பற்றியே நினைக்காத, மனித குலத்தின் உண்மையான நலனை கருத்தில் கொள்ளாத குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்றால், இப்போதிருக்கும் நாம் அவர்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லை. அப்படித்தானே நம் சிந்தனையும் செயல்களும் இருக்கிறது. எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் அவரது குலத்து ஆணையோ பெண்ணையோ தான் திருமணம் செய்வேன் என்பவர்கள் ஏராளம் ஏராளம். ஆக, சுதந்தரத்திற்கு பின் நாம் இன்னமும் மதம் ஜாதி மற்றும் குலம் என்னும் குறுகிய மனிதாபிமானமற்ற சங்கிலியால்தான் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

பாரதம் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்டது, பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக, நாகரீகரீதியாக. ஆனால் இவை யாவுமே மிகப் பெரிய அளவில் இல்லை. இந்நிலையை மாற்றியமைக்க, இப்போதிருக்கும் இளைஞர்களால் மட்டுமே முடியும். அதற்கு சிறந்த வழி அன்பு ஒன்றுதான் என்பது எனது தாழ்மையான, ஆனால் மிகவும் உறுதியான கருத்து.

எந்தவித பாரபட்சமும் இன்றி ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நோக்கும் மற்றும் அணுகும் முறையே உண்மையான அன்பாகும். இன்னொரு மனிதனுக்கு துயரம் என்றால், அவனுக்கு உடனடியாக தன்னால் ஆன உதவியைச்செய்வதுதான் அன்பில் சுரக்கும் கருணை எனும் தேன் ஆகும்.
அப்படி அன்புடன் கலந்த கருணை மழையை ஒருவர் பொழியவேண்டும் என்றால், பிற உயிர்களிடம், கருணை மற்றும் இரக்கம் காட்டவேண்டும். பறவைகளையும் விலங்குகளையும் உணவிற்காக கொல்வது அவைகளிடம் அன்பு செலுத்தும் செயலா என்று உங்களை கேட்டால் உங்கள் பதில் என்ன? மனசாட்சி உள்ள நீங்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவீர்கள். ஆயினும், வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் மீன், கோழிக்குஞ்சு, கோழி, சேவல், ஆடு போன்ற அப்பாவி உயிர்களை உணவாக கொள்வதுதான் நமது தொன்று தொட்டுவரும் பண்பாடு, நமது பழமையான நாகரீகம், மற்றும் உயர்ந்த மனித தர்மம். ஏன் நமக்கு மட்டும் தானா வாழ்வதற்கு சுதந்திரம், பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இல்லையா? இது என்ன அநீதி அக்கிரமம்?

சுதந்திரம் பெற்றோம், எளிதாக அல்ல, நம் முன்னோர்கள் வேர்வை மட்டுமின்றி ரத்தமும் சிந்தினர், பலர் குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்தனர், சொல்லொணா இன்னல்களுக்கு ஆளாயினர். அப்படி அரும்பாடு பட்டு அவர்கள் வாங்கிக்கொடுத்துவிட்டுச் சென்ற சுதந்திரம், நமக்கு உண்மையான சுதந்திரத்தை கொடுக்கவில்லை என்பதை பார்க்கையில், மனம் வேதனையும் வெறுப்பும் மட்டும் இல்லை மனம் துடிக்குது, ரத்தம் கொதிக்குது.

இளைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! நமக்கும் நம் நாட்டிற்கும் எப்போது உண்மையான சுதந்திரம் வரப்போகுது. கொஞ்சம் உங்களின் உறவினர், நண்பர்கள் மற்றும் அண்டைவீட்டார்களுடன் கலந்து உரையாடிவிட்டு, இந்த கேள்விக்கு தயவு செய்து தக்க பதில் சொல்லுங்களேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-Aug-23, 8:31 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 71

மேலே