காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 14

14. கிரஹப்பிரவேசம்


ஒரு வழியா அவர்கள் வந்த கார் திலோத்தமா வீட்டு வாசலில் ஒரு பெருமூச்சுடன் நின்றது.


வீடு வந்து சேர்ந்துவிட்ட விதிர்ப்பும், மேற்கொண்டு பிரச்சினையை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பயமும் இவர்களைப் போல் அதற்கும் இருந்ததோ?


கமிஷனர் வினோத் எப்படியும் நண்பனை எதிர் கொண்டு தான் ஆகவேண்டும் என்ற நினைப்போடு வீட்டை நோக்கி முன்னேறத் தொடங்கினார்.


வாசல் வரை சென்று திரும்பி திலோத்தமா வை பார்த்து, திலோ சீக்கிரம் வா என்று கை அசைத்தார்.


ஓடுவது அல்லாது நடப்பது என்பது திலோ அறியாத ஒன்று. துள்ளித் திரிந்தபடி என்நேரமும் வீட்டிற்குள் கலகலப்பாக வளைய வரும் திலோத்தமா இன்று அதே வீட்டு வாசல் அருகில் வர பயந்து கால்கள் பின்ன தயங்கி தயங்கி அடி மேல் அடி வைத்து நடந்தாள்.


அவள் மனநிலையை வினோத் நன்றாகவே புரிந்து கொண்டார்.


திலோவின் இதயம் அதிவேகமாக துடிக்க தொடங்க அந்த லப் டப், லப் டப் என்ற இரைச்சல் அவளின் பயத்தை அதிகப் படுத்தியது.


அப்பாவை எப்படி சமாளிப்பது என்று தான் அதிக கவலையாக இருந்தது. திலோத்தமா நன்றாக அறிந்து இருந்தாள், அனைவரும் சுலபமாக இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று.


கொஞ்சம் அதிகம் போராட வேண்டும் ஆனால் எப்படியும் ஒத்துக் கொள்ள வைத்து விட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள்.


இவ்வாறு மனதில் நினைத்தவாறு போர்டிகோ படி ஏறிக் கொண்டு இருந்தாள்.


கடைசி படியில் கால் பதிக்கும் வேளையில் சரியாக கமிஷனர் வினோத் காலிங் பெல் மேல் கை வைக்கும் நேரம் சரியாக கதவு தானாகவே திறந்தது.


பெல் அடிக்கும் முன்பே கதவு திறக்கவும் அதிர்ந்து ஓர் அடி பின்வாங்கினார் வினோத்.


கதவைத் திறந்தபடி வெளிவந்த தந்தையைக் கண்டு திலோத்தமாவுக்கு பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு வார்த்தைகள் வெளிவர மறுத்தது.


கதவைத் திறந்து வெளியே வரும்போதே கோபாலகிருஷ்ணன் கோபத்தில் மூச்சு வாங்க,


டேய் வினோத் பத்து நிமிஷத்தில் திலோவ கூட்டி வர்றேன்னு சொல்லிட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு வர, என்று மூச்சு விடாமல் படபடப்பாக கேட்டார்.


ஒகே... ஒகே... கோபால் கூல் டவுன் டென்ஷன் ஆகாதா கொஞ்சம் ஹாஸ்பிடல் வரை போகவேண்டி வந்தது அதான் லேட்,


ஹாஸ்பிடல் என்றதும் பாசம் மிகு தந்தையின் நெஞ்சம் தன் அருமை மகளுக்கு தான் என்னவோ என்றெண்ணி பதைதைப்புடன் தன் மகளைத் திரும்பி பார்த்தார்.


அப்பொழுதுதான் அவள் கைகளில் தூக்கி அனைத்துக் கொண்டிருந்த குழந்தையை நன்றாக கூர்ந்தார்.


நல்ல கருமையான நிறத்தில் தலையில் சுருள் சுருளாக முடி தலையோடு ஒட்டிக்கொண்டு இருக்க சட்டை கூட அணியாமல் மூக்கில் நீர் வடிய வாயில் விரல் வைத்து சப்பியபடி திலோவின் தோலில் உரிமையுடன் சாய்ந்திருந்த குழந்தையைக் கண்டவுடன் அவரையும் அறியாமல் திலோவின் சுத்தம் மனதில் தோன்றியது.


காலை எழுந்து பல் விளக்கும் போதே குளித்து சாமி கும்பிட்டு விட்டு தான் தன் அறையை விட்டு வெளியே வருவாள்.


திருநீறு பூசிய நெற்றியில் சந்தனம் குழைத்து இட்டு அதன்மேல் சிறிது குங்குமம் வைத்தபடி தான் எந்நேரமும் இருப்பாள்.


அவள் தந்த நிறத்தில் அந்த சந்தனமும் குங்குமமும் காண்பவர் கண்ணை கவர்வதாக இருக்கும்.


அப்படிப்பட்ட திலோவின் கைகளில் அந்த அழுக்கு குழந்தையை பார்த்த உடன் அதுவும் அவள் இருக்கும் நிறத்திற்கு குழந்தை இன்னும் அதிகம் கருப்பாக தெரிந்தது.


திலோவிற்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.


அவர் மகளுக்கு அமைத்துக் கொடுக்க விரும்பும் வாழ்க்கை என்ன, அவள் அதை கெடுத்துக் கொள்ள செய்து வைத்திருக்கும் காரியம் என்ன என்று மனதில் நினைத்து... எழுந்த பெருமூச்சை முகம் மாறாமல் அப்படியே அடக்கிக் கொண்டார்.


அவர் மகளின் பிடிவாதம் பற்றி நன்கு அறிந்தவர் ஆகையால் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் மேலுக்கு சிரித்தபடி வாங்க வாங்க எல்லோரும் உள்ள வாங்க என்றார்.


திகைத்து நின்ற திலோவின் கை பிடித்து வாடாம்மா என்ன அப்படி பார்க்குற என்றவாறு உள்ளே அழைத்துச் சென்றார்.


தந்தையின் இந்த நடவடிக்கை பார்த்து திலோவின் பயம் அதிகரிக்கவே செய்தது.
அவளுக்கு இது ஏதோ புயலுக்கு முன் வரும் மரண அமைதி போல் தென்பட்டது.


பயம் வயிற்றில் புளியை கரைத்தது.
ஆனால் திலோத்தமா சாதாரண பெண் இல்லையே, அந்த தந்தையின் பெண் அல்லவா இவளும் அமைதியாக அவரையே பின் பற்றினாள்.


தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபித்து கொண்டிருந்தாள் திலோத்தமா.


அமைதியாக தன் தந்தையை பின் தொடர்ந்து "கண்ணன்" உடன் வீட்டிற்குள் நுழைந்தாள் திலோத்தமா.



சந்திப்போம்.....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (20-Aug-23, 8:37 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 68

மேலே