ரூபாய் நோட்டும் ராவுத்தர் கடை பிரியாணியும்

ரூபாய் நோட்டும் ராவுத்தர் கடை பிரியாணியும்

வகுப்பில் உட்கார்ந்திருந்த ‘பூவாத்தாளுக்கு’ மனசு முழுக்க மகிழ்ச்சி நிரம்பியிருந்ததால் வாத்தியார் சொல்லிக்கொண்டிருந்தது எதுவும் காதில் ஏறாமல் உட்கார்ந்திருந்தாள்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாசிலாமணி அவளை பென்சில் குச்சியால் குத்தி விளையாண்டது கூட அவளுக்கு உரைக்கவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியில் இருந்தாள். அடிக்கடி தன் பள்ளிக்கூட பையை தன்னுடைய வயிறு பக்கம் வைத்து இறுக்கி கொண்டாள்.
மதிய உணவு நேரத்துக்கு மணி அடிக்க இன்னும் நேரமிருக்கிறது. பசி இப்பொழுதே அவளுக்கு எடுக்க ஆரம்பித்து விட்டது. நம்ம கூட மாசிலாமணிய கூட்டிட்டு போலாமா? அவ காசு ஏதுன்னு கேப்பாளே? சொல்லிடலாமா? ராவுத்தர் தள்ளுவண்டி பிரியாணி இப்பொழுதே அவள் கண் முன் வந்து பசியை அதிகப்படுத்தியது.
தினந்தோறும் பள்ளிக்கூட காம்பவுண்ட் கேட்டுக்கு எதிர்புறமாய் ராவுத்தர் பதினோறு மணிக்கு அவருடைய தள்ளு வண்டியில் கொண்டு வரும் இரண்டு பிரியாணி அண்டாவும், அதன் மூடியை திறந்தவுடன் வெளிவரும், ஆவியும் வரும் மணமும் எதிரில் இருக்கும் இந்த ஆரம்ப பள்ளி முழந்தைகளை ஏங்க வைக்கும். பதினொன்றரை க்கெல்லாம் ஆரம்பிக்கும் பிரியாணி வியாபாரம் மூன்று மணிக்கு முடிந்து, அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுவதை இவள் எத்தனை முறை பள்ளி காம்பவுண்டுக்குள் இருந்து பார்த்திருக்கிறாள்.
இன்று எப்படியும் அந்த பிரியாணியை ருசி பார்த்து விடவேண்டும், மனம் முழுக்க ஆசை நிரம்பி வழிந்தது. அதற்கு பணம்..?
தன்னுடைய புத்தகப்பையை வயிற்றில் இறுக்கி வைத்திருக்கிறதில்தான் மதியம் பிரியாணியை ருசி பார்க்க கொடுக்க போகும் பணம் இருக்கிறது. அதனாலேயே அதனை இறுக்கி அணைத்தபடியே உட்கார்ந்திருந்தாள்.
இண்டர்வெல் மணி அடிக்கும்போது கூட மாசிலாமணி “வாடி ஒண்ணுக்கு போயிட்டு வந்துடலாம்” கூப்பிட்ட போது வேணாம் நீ போயிட்டு வா புத்தகப்பையை அணைத்தபடியேதான் சொன்னாள்.
என்ன இவ..! எனக்கு முன்னாடி இந்நேரத்துக்கு எந்திரிச்சி ஓடிப்போயி எல்லாம் முடிச்சிட்டு வெளியே வேடிக்கை பார்க்க நிக்கறவ, இன்னைக்கு இழுத்து புடிச்சு உக்காந்திருக்காளே.! சந்தேகமாய் அவளை திரும்பி திரும்பி பார்த்துவிட்டு மாசிலாமணி மட்டும் எழுந்து கழிவறைக்கு ஓடிப்போனாள்.
வகுப்பே காலியானதும் பூவாத்தாள் அப்பாடி என்னும் மன நிலையில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் புத்தகப்பைக்குள் கையை விட்டாள். மெல்ல ஒவ்வொரு புத்தகத்தையும் விரலாலே தள்ளியபடி நான்கைந்து புத்தகத்தை தள்ளி விட்டு விரலால் தட்டுப்பட்ட காகிதம் ஒன்றை மெல்ல உருவினாள்.
அந்த காகிதம் சிவப்பு நிறமாய் பழையதாகவும் கசங்கியும் இருபது எண்ணால் நடுவிலும் வலது இடது ஓரத்திலும் போட்டிருந்த ரூபாய் நோட்டை கையில் வைத்து கண்களை விரித்து பார்த்தாள்.
காலையில் முகம் கை கால் கழுவி வீட்டுக்குள் வந்தவளுக்கு அம்மா கஞ்சியை ஒரு அலுமினிய தட்டில் ஊற்றிக்கொடுத்தவுடன் சிணுங்கினாள். “அம்மோவ் இன்னைக்கும் கஞ்சிதானா”?
முறைத்து பார்த்த அம்மா என்னாடி கஞ்சிதானான்னு கேக்கறே? இதுவாச்சும் வடிச்சு கொடுத்தாளேன்னு சந்தோசப்படு, உங்கக்காளுக்கும், எனக்கும் இதுதான் மதியத்துக்கும். உனக்காச்சும் மதியானம் ஸ்கூல்ல சாப்பாடு போடுவாங்க, அதை சாப்பிட்டு படிச்சு வூட்டுக்கு வர்றதை பாரு.
அம்மா இப்படித்தான் சளாரென்று முகத்தில் அறைந்து சொல்லி விடுவாள். அம்மாவும் என்னதான் பண்ணமுடியும்? அம்மாளுக்கும், அக்காளுக்கும் பீடி சுத்துன பணம் வாரம் கடைசி நாளு கொடுப்பாக, அன்னைக்கு சோறு பொங்கி கவுச்சி வாங்கி வைக்கும். அப்பன் இருக்கறப்ப அடிக்கடி கவுச்சு எடுத்து செய்யும், அப்பன் செத்துட்ட பின்னால அம்மா ரொம்பத்தான் எது கேட்டாலும் “சள்ளு புள்ளுன்னு” விழுது.
கஞ்சியை குடித்து அலுமினிய வட்டலை கழுவி வைத்து விட்டு அம்மோவ் ஸ்கோலுக்கி போய்ட்டு வாறேன். புத்தகப்பையை தோளில் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வேகமாக ஓடினாள்.
கூட்டாளிகள் அடுத்த தெருவுக்குள்தான் இருக்கிறரகள், அந்த தெருவுக்கு போக இவளது தெருவிலிருந்து குறுக்கு சந்து ஒன்று போகும், அது வழியாக மூக்கை பிடித்தபடி ஓடினாள். “அந்த சந்து” குடியிருந்து கொண்டிருக்கும் குடித்தனக்காரர்கள் இயற்கை உபாதையை கழித்து அசுத்தபட்டிருக்கும் இடம்
எப்படியோ மூக்கை பொத்தி மூச்சை அடைத்து அடுத்த தெருவுக்குள் காலடி வைக்க போகும் போது அது என்ன சிவப்பாய்.? குனிந்து அதை எடுத்து கையில் வைத்து பார்த்தவளுக்கு மனசு பளீரென சந்தோசத்தில் மலர்ந்தது.
ரூபாய் நோட்டு..! கசங்கி நிலையில் அழுக்காய் இருந்த நோட்டு நான்காக மடிக்கப்பட்டு இருந்தது. அதை விரித்து நீவியவாறு பார்த்தாள். இருபது என்று போட்டிருந்தது. அஞ்சாவது வகுப்பில் நூறு வரைக்கும் எழுதி பழக்கி இருந்ததால் அது இருபதுதான் என்பதை மனசுக்குள் பதித்து கொண்டவள், புத்தகப்பையை விரித்து நான்கு புத்தகங்கள் நடுவே வைத்து சட்டென புத்தகப்பையை தோளில் போட்டவாறு ஒன்றுமே தெரியாதவாறு கூட்டாளிகளை பார்க்க போனாள். மனம் முழுக்க பரவசமாய்.
பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து மாசிலாமணி அருகில் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தாலும், தன் புத்தகப்பையை எப்பொழுதும் காலுக்கு கீழே வைத்து விட்டு உட்காருபவள், அன்று தன் வயிற்றுபகுதிக்குள் அப்படியே ஒட்டியபடியே வைத்துக்கொண்டாள்.
திடீரென யாரோ உள்ளே வரும் அரவம் கேட்க சட்டென பணத்தை புத்தப்பைக்குள் திணித்தவள் ஒன்றும் தெரியாதவள் போல் உட்கார்ந்து கொண்டாள். வந்தவள் மாசிலாமணிதான்.
இண்டர்வெல் முடிந்து எல்லோரும் வந்து உட்கார்ந்த பின் டீச்சர் வந்து பாடம் எடுத்தது எதுவுமே பூவாத்தாளுக்கு நினைவில்லை. என்ன செய்யலாம் இந்த பணத்தை? இப்படி யோசித்து யோசித்து சட்டென நினைவுக்கு வந்தது ராவுத்தர் கடை பிரியாணியும் அதன் மணமும்.
அதுவும் பனிரெண்டு மணிக்கு அக்கம் பக்கம் இருக்கும் தொழிலாளர்கள் வரிசையாய் நின்று அரை பிளேட் ஒரு பிளேட் என்று கேட்டு வாங்கி தள்ளி சென்று நின்றபடியே சாப்பிடுவதை இவளும் மாசிலாமணியும் பல முறை பார்த்திருக்கிறார்கள். மதியம் இவர்களின் பொழுது போக்கே சீக்கிரமாய் காம்பவுண்ட் கேட் பக்கத்தில் வந்து இதை வேடிக்கை பார்த்தபடி நிற்பதுதான்.
ஆனால் இன்றைக்கு..! பூவாத்தாளும் அந்த வரிசையில் நிற்கப்போகிறாள், கூட மாசிலாமணியை சேர்த்துக்கொள்ளலாமா? வேண்டாமா? இதுதான் இப்பொழுது பூவாத்தாளின் பிரச்சினை. எதுவானாலும் காக்காய் கடி கொடுத்தே சாப்பிடும் மாசிலாமணியை விட்டு விட்டு தான் மட்டும் அங்கு போய் நின்றால் நன்றாக இருக்குமா?
மதியம் மணி ஓசை கணகணவென்று ஒலித்தது. அவ்வளவுதான் எல்லா மாணவ மானவிகளும் சிட்டாக எழுந்து பறந்து கொண்டிருக்க, பூவாத்தாள் திகைப்பாய் உட்கார்ந்திருந்தாள். என்ன செய்யலாம்? மனசுக்குள் கேள்வியுடன்.
“வாடி சாப்பாடு போட்டுவாங்க” அழைத்த மாசிலாமணியிடம் இல்லை நான் வல்ல, சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்த மாசிலாமணி சரி எனக்கு பசிக்குது, நான் கிளம்பறேன், கிளம்பினாள்.
மாசிலாமணி இல்லாமல் தான் மட்டும் எப்படி வெளியே போவது? சட்டென மாசிலாமணியின் கையை பிடித்தவள் “கொஞ்சம் நில்லுடி” வேறு வழியின்றி காலையில் அவளுக்கு கிடைத்த புதையலை சொல்லி விட்டாள். ராவுத்தர் கடை பிரியாணியை இன்று ருசி பார்த்து விடுவது என்னும் திட்டத்தையும் சொன்னாள்.
மாசிலாமணிக்கு இவள் சொன்னது நிசமா.! என்று சந்தேகம் வந்து விட்டது. நான் நம்ப மாட்டேன், வா சீக்கிரம் சாப்பாடு தீர்ந்துடும், அவளையும் கிளப்ப எத்தனித்தாள்.
இந்தா பாரு நான் சொல்றது நிசமுன்னு, புத்தகப்பையிலிருந்த அந்த நோட்டை வெளியில் எடுத்து காட்டினாள்.
கொண்டா வாங்கி பார்த்தவள் ஆமா ரூபா நோட்டு, “இப்பொழுது இவள் கண்ணிலும் ராவுத்தர் கடை பிரியாணி” தெரிந்தது. புத்தகப்பையை வைத்து விட்டு இருவரும் பள்ளிக்கூட காம்பவுண்ட் கேட்டருகே வந்தனர். மதியம் வெளியே சென்று சாப்பிட்டு வருபவர்களுக்காக காம்பவுண்ட் கேட் மதியம் வகுப்பு தொடங்கும் வரை திறந்திருக்கும். இருவரும் திரும்பி திரும்பி பார்த்து சட்டென வெளியே வந்தவர்கள் மதிய நேர பரபரப்பாய் இருந்த அந்த சாலையை கடந்து ராவுத்தர் கடை பிரியாணியை வாங்க நின்று கொண்டிருக்கும் ஆட்களின் வரிசையில் போய் நின்று கொண்டார்கள்.
இருவர் மனசிலும் “திக் திக்கென” அடித்து கொண்டது. வாத்தியாரு, டீச்சர் பார்த்துடுவாங்களோ? வகுப்பு பசங்க யாரவது பார்த்துட்டு போய் டீச்சர் கிட்ட சொல்லிட்டா? இப்படி பல பல குழப்பங்களும் பயங்களுமாய் கூட்ட வரிசை கரைய கரைய இவர்களும் முன்னேறியபடியே சென்றார்கள்.
வந்து கொண்டிருந்த ஆட்களின் உயரமான தலைகள் திடீரென தரை மட்டத்திற்கு போனதால் வியப்பாய் பிளேட்டில் பிரியாணியை நிரப்பியபடி கொடுத்து கொண்டிருந்த ராவுத்தர் நிமிர்ந்து பின் குனிந்து பூவாத்தாளையும், மாசிலாமணியையும் பார்க்க பூவாத்தாள் பயந்தபடியே கசங்கிய தாளை எடுத்து அவரிடம் நீட்டி எங்க இரண்டு பேருக்கும்”.
பணத்தை வாங்கி மேலும் கீழுமாய் பார்த்தவர் “பாப்பா இந்த நோட்டு செல்லாத நோட்டு” பாப்பா’ இங்க பாரு நடுவுல கோடு இல்லை பார்த்தீங்களா? யாரோ விளையாட்டுக்கு அச்சடிச்ச நோட்டு. சிரித்துக்கொண்டே, நோட்டை அவளிடம் திருப்பி கொடுத்தவர், அவர்களுக்கு பின்னால் நின்றிருந்தவர்களுக்கு பணத்தை வாங்கி போட்டு பிரியாணியை பிளேட்டில் நிரப்பி கொடுக்க ஆரம்பித்தார்.
பணம் செல்லாத பணமா..! அதிர்ச்சியாய் நின்ற பூவாத்தாளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, அதை பார்த்த மாசிலாமணியும் அழ ஆரம்பித்தாள்.
வகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி கிணி கிணியென்று அடிக்க இவர்கள் இருவரும் அழுதபடியே குடுகுடுவென பாதையை கடந்து பள்ளிக்குள் ஓடினர். கேட்டை மூடிவிடுவார்களே என்னும் பயத்தில்.
மதியம் பள்ளிக்கூட உணவும் போய், ராவுத்தர் பிரியாணியும் போய், பள்ளி மதிய உணவை சாப்பிட போன மாசிலாமணியையும் நிறுத்தி பிரியாணி சாப்பிட கூட்டி போய், நினைக்க நினைக்க பூவாத்தாளுக்கு அழுகை அழுகையாக வந்தது. பசியால் அவ்வப் பொழுது மாசிலாமணியும் இவளையே திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தாள்.
நாலு மணிக்கு பள்ளி மணி அடிக்கும் போது இருவரும் பசியின் மயக்கத்திற்கு போயிருந்தனர். தடுமாறிக்கொண்டே பள்ளி காம்பவுண்ட் கேட்டை தாண்டி வெளியில் வந்து வீட்டுக்கு போகும் பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
“பாப்பா” குரல் கேட்டவர்கள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர். ராவுத்தர் நின்று கொண்டிருந்தார். பெரிய பொட்டலங்கள் இரண்டை கையில் பிடித்தபடி.
இந்தாங்க பிரியாணி இதை வூட்டுல போயி சாப்பிடுங்க. எப்பவும் கடைசி பிரியாணிய யாருக்காவது கொடுப்பேன். நீங்க இரண்டு பேரும் அழுதுட்டு நின்னது என் கண்ணுக்குளயே இருக்கு, இந்தாங்க.
மகிழ்ச்சியும் ஆச்சர்யமுமாக இருவரும் அதை வாங்கி பைக்குள் வைக்க சிரமப்பட ராவுத்தரே வாங்கி பைக்குள் வைத்து கொடுத்தார்.
வீட்டில் அம்மாவும், அக்காவும் சந்தோசமாய் இவளுடன் பிரியாணியை பங்கு போட்டு சாப்பிட்டு கொண்டிருக்க, பூவாத்தாளுக்கு மனசுக்குள் இப்படி தோன்றியது, நல்ல வேளை கடவுள் என்னைய மட்டும் சாப்பிட வைக்கலை, இந்நேரம் மாசிலாமணி வூட்டுல கூட அவங்கம்மா, அப்பா எல்லாரும் சந்தோசமா சாப்பிட்டுகிட்டிருப் பாங்கல்ல..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Aug-23, 2:31 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 112

மேலே