உங்களுக்காக ஒரு கடிதம் - 39

20 / 08 / 2023 .

அன்பு நண்பர்களே,
நீஈஈஈஈ.......ண்ட இடைவெளி வந்து விட்டது. என்ன செய்ய? காலத்தின் ஜாலம். மருத்துவ இளவல்களுக்கு எழுதிக் கொண்டிருந்தேன். ஆம். இன்டெர்ன்ஷிப்பின் மகத்துவத்தை... முக்கியத்துவத்தை பற்றி எழுதியதாய் ஞாபகம். தோழர்களே....வாழ்வில் ஒரேயொரு முறை கிடைக்கும் இந்த அற்புத வாய்ப்பை இழந்து விடாதீர்கள். அனுபவியுங்கள். உபயோகிக்க தவறி விடாதீர்கள். உங்கள் எதிர்காலத்தின்....வாழ்வின் ஆதார சுருதி இந்த ஒரு வருட இன்டெர்ன்ஷிப்.இதை நீங்களே இஷ்டமாய்...வலுவில் வந்து கற்றுக்கொள்ள வேண்டும். இம்போசிஷன் எழுது... பென்ச்சில் மேல் ஏறி நில்லு...காதை பிடித்து தோப்பு கரணம் போடு என்று சொல்வதற்கு......இல்லை கண்டிப்பதற்கு இது ஸ்கூலில்லை. நீங்களும் யூனிபார்ம் போட்ட குழந்தைகளில்லை. நீங்களும் வளர்ந்து சமுதாயத்தின் ஒரு முக்கிய குடிமகன்களாகி விட்டீர்கள். உங்களுக்கு என்று ஒரு ஸ்டேட்டஸ் வந்து விட்டது. உங்களுக்கு என்று ஒரு தனி மரியாதை பிறந்து விட்டது. ஒரு பொறுப்பு வந்து விட்டது. நீங்கள் டாக்டர் ஆகி விட்டீர்கள்.
படிக்கும்போது கஷ்டப்பட்டீர்கள். இனியும் கஷ்டப் படப்போகிறீர்கள். ஒத்துக்கொள்கிறேன். நிலத்தை பண்படுத்தி...உரமிட்டு... நீர்பாய்ச்சி...நல்ல கனிமரத்தை நட்டு வைத்து...வேலியிட்டு பாதுகாத்து, அது பூத்து...காய்த்து...கனி கொடுக்கும் போது நீங்கள் விருப்பமில்லாமல்...மந்தமாய் இருந்துவிட்டால், இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள்...வேதனைகள் எல்லாம் வீணாய் போய்..உங்களுக்கும் ஏன்? வாழும் சமுதாயத்திற்கும் பயன் படாமல் போய்விடுமே! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கடவுள் என்று ஒருவன் இருந்தால்... மற்ற பிள்ளைகளுக்கு கிடைக்காத வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து, இவ்வளவு போட்டிகளுக்கிடையில் உங்களைத் தேர்வு செய்து.... உங்களை டாக்டர் ஆக்கி இருப்பான்?உங்களால் இந்த சமுதாயத்திற்கு பயன் ஏற்படும் என்ற ஒரு நம்பிக்கையில்தானே இதை நடத்திக் கொண்டிருக்கிறான். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்க்கு...உங்களை பெற்றவர்களின் கனவு.... உங்களைத் தேர்வு செய்த அதிகாரிகள்...கல்வி பெருந்தகைகளின் எதிர் பார்ப்பு எல்லாம் ஒன்றுதானே. பிறந்த பிறவிக்கு, பிறந்த சமுதாயத்திற்கு ஏதாவது நாம் செய்து விட வேண்டும் என்றொரு ஆதங்கம்தான்.
ஒன்றுமட்டும் நிச்சயம். நீங்கள் இனி புண்ணியத்தை தேடி அலைய வேண்டாம். தொண்டு செய்ய கஷ்டப் படவேண்டாம். தர்மத்தை தேடி கோயில் கோயிலாய், க்ஷேத்ரம் க்ஷேத்ரமாய் ஓட வேண்டாம். அத்தனையும் உங்கள் வாசற்படியில். உங்கள் கைகளுக்கிடையில். வருத்தப்படுகிறவர்களை தேடி நீங்கள் போக வேண்டாம். "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருவேன்" என்று ஏசு சொன்னது போல்... வருத்தப்படுகிறவர்கள் உங்களைத் தேடி உங்கள் வாசற்படியில். நீங்கள் ஒன்றும் அவர்களைத்தேடி போகப் போவதில்லை. வேதனையோடும்...வருத்தத்தோடும்... சீழோடும் ரத்தக்காயங்களோடும், வாந்தியோடும்...பேதியோடும், மயக்கத்தோடும்... மன உளைச்சலோடும்...நடந்தோ... ஆட்டோவிலோ ..பஸ்ஸிலோ உங்களைத்தேடி வருகிறார்கள். அதுவும் முழு நம்பிக்கையோடு வருகிறார்கள். மதர் தெரஸாக் கூட ஆதரவற்றோரை தேடித்தான் போனார்கள். ஆனால் ஆதரவற்றோர் நம்மைத் தேடி...நம்பிக்கையோடு வருகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யலாமா? எண்ணிப்பாருங்கள்.
சமுதாயம் உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறது? பணத்தையா? மரியாதையா? இல்லையே. உங்கள் அன்பை..அனுசரணையை மட்டும்தான். கவனிப்பை மட்டும்தான். அதை கொடுப்பதற்கு என்ன தயக்கம்? " வாங்கம்மா.எப்படி இருக்கீங்க? ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் இருக்கிறேன்" என்கின்ற ஒரு வாக்கைத்தான். ஒரு ஆதரவைத்தான். அவர்கள் எதிர்பார்ப்பது தங்கள் கதையை...தங்கள் பாடுகளை காது கொடுத்து கேட்கவேண்டும் என்பது மட்டும்தான். அப்படி கேட்க கூட பொறுமை இல்லையென்றால் என்ன செய்வது? நாம் கொடுக்கும் மருந்து உடல் வியாதி தீர்க்கும்தான். உண்மைதான். வியாதிக்கு பல முகங்கள் உண்டு.
உடல் ரீதியான காரணங்கள். மன ரீதியான காரணங்கள். ஆனால் உடல் வியாதியின் மூல காரணம் மனமல்லவா? மருத்துவத்தில் ஒரு கோட்பாடு உண்டு. " ICEBERG PHENOMENON". மேலே தெரியும் நுனியை மட்டும்தான் நாம் கவனித்து, அதற்கு மட்டும்தான் சிகிச்சை தருகிறோம். அதாவது "அறிகுறி சிகிச்சை". அடியில் மறைந்து இருக்கும் ஆழ்கடல் ரகசியத்தை...ஆணிவேரை நாம் கண்டுகொள்வதே இல்லை. மலையை மயிர் கட்டி இழுக்கும் சவால்தான்......! தொடருவோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Aug-23, 5:11 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 100

மேலே