வேர்க்கடலை உண்ணும் நிலா
வேர்க்கடலை உண்ணும் நிலா
*********************************
தண்ணொளிக் காம்பினில் தாமரைப் பூவாய்
தண்டலை வான்வெளி தானெழில் பூக்க
ஒண்டொடி வெண்ணிலா ஊர்வல மாக
ஒவ்வொரு நாளிலும் ஊர்வரு வாளே
கண்ணுறங் காதவள் காண்தக வண்ணம்
கங்குலை நீக்கிடும் காரணத் தாலே
பண்தனி லன்னவள் பாங்குடன் நிற்கப்
பாவல ராயிரம் பாப்புனை வாரே
*
வெண்முகில் தோழியர் வீடுகள் சென்று
வேண்டிய மின்மினி வேர்க்கட லைக்காய்
பண்பொடு நின்றுடன் பார்வையில் வாங்கி
பக்குவ மாயவள் பற்களில் வைத்து
உண்பதி லேற்படும் உன்னத எச்சில்
ஒவ்வொரு பூவிலும் ஒட்டிய தான
தண்பனி யென்பதை தாரணி வந்து
தன்பணி செய்யுமா தவனறி வானே!
*
மெய்யன் நடராஜ்