காலம் மாறுவதில்லை

காலம் மாறுவதில்லை


காலம் மாறுவதில்லை - அவன்
கடமையை கண்ணும் கருத்துமாக
நிறைவேற்றி நீதி வழுவாது
நிறைந்து நிற்கும் நீதிமான்....

பஞ்ச பூதங்கள் இடமிருந்து
இருகரம்விரித்து இலகுவாய் - நாம்
பெறும் பலன்களுக்கு மாற்றாக
நாம் அளித்தது என்ன?

மனிதனின் அடிப்படை குணம்
நன்றிக்கடன், தற்கால நிலையில்
நன்றியை நலுங்காமல் உதிர்த்து
சுயநலம் ஓங்கித் திகழ்கிறோம்....

பொருள் ஈட்டினோம், அன்றாடம்
தின்றோம் கழித்தோம் என்ற
வாழ்க்கை முறையில் நமக்கும்
ஐந்தறிவுக்கும் இடையிலென்ன வேறுபாடு?

ஆறறிவு பெற்ற மனிதனே
ஆறாம் அறிவின் மமதையில்
வரையறை யற்ற மாற்றத்தில்
காலத்தை கலங்க வைக்கின்றான்....

இயந்திரங்களுடன் இயங்கி இயங்கி
இதயமே இயந்திரமாகிப் போன
இன்றைய மனிதன் மறந்துவிட்டான்
இறுதியில் இயந்திரமில்லை அவனென்று....

ஒருநாள் ஓங்கி அழுவான்
கடந்ததை நினைத்து, மூச்சுக்காற்று
முழுதாய் கிட்டாது தவித்து
மறுகுவான் ஆனால் மாற்றம்
இயலாது போகும் இறுதியில்....

இழந்தது மீளாது, மீண்டும்
செப்பனிட இயலாத தவற்றை
தாராளமாக செய்யும் நாம்
சந்ததியும் சாய்ந்திட செயலற்று
காணும்நிலை வலியின் உச்சம்....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (23-Aug-23, 2:49 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 190

மேலே