காப்பி தா மரிக்கொழுந்தே
தாத்தா: ஏம்மா மரிக்கொழுந்து, இன்னும் ஏன் எனக்கு காப்பியே தரல?
பாட்டி: உங்களுக்குமட்டுமா, எனக்கும் இப்போ வரைக்கும் காப்பி கிடைக்கல
தாத்தா: ஏன் காப்பி பொடி இல்லையா?
பாட்டி: காப்பி போடி தீர்ந்து போச்சு.
தாத்தா: நேத்திக்கே சொல்லியிருந்தா வாங்கி வந்திருப்பேனே?
பாட்டி: நேத்திக்கு எப்படி சொல்ல முடியும் சொல்லுங்க? இன்னிக்கு காலைலதான் பார்த்தேன்.
தாத்தா: அடியே கொழுந்து, நேத்திக்கு பார்த்திருந்தீயானா, நேத்திக்கே சொல்லியிருக்கலாமில்ல
பாட்டி: என்ன சொல்றீங்க, நேத்திக்கும் தான் பார்த்தேன். காப்பி பொடி இல்லை.
தாத்தா: அப்போ நேத்திக்கே சொல்லியிருக்கலாமே கொழுப்பு கொழுந்தி
பாட்டி: நேத்து சொல்லியிருந்தா நீங்க நிச்சயமா வாங்கிவந்திருப்பீங்கன்னு என்ன நிச்சயம்?
தாத்தா: இதுவரை நீ சொல்லி நான் எப்போது காப்பி பொடி வாங்கி வராமல் இருந்திருக்கேன்?
பாட்டி: அறுபது வருஷத்திற்கு முன்பு ஒரு தடவை உங்களிடம், காப்பி பொடி வாங்கி வாங்கன்னு சொன்னபோது நீங்க என்ன பண்ணீங்க தெரியுமா?
தாத்தா: அறுபது வருஷத்திற்கு முன்பு நான் உயிரோடு இருந்தேனா இல்லையான்னு கூட எனக்கு தெரியாது.
பாட்டி: இந்த பழைய வசனம் எல்லாம் வேண்டாம். நீங்க காப்பி பொடிக்கு பதில் பல்பொடி வாங்கி வந்தீங்க. அதிலிருந்து இன்னிவரைக்கும் நான் தான் காப்பி பொடி வாங்கறேன். இப்போ தெரியுதா?
தாத்தா: ஆமாம், பழுத்த மரிக்கொழுந்தி, லேசா ஞாபகம் வருது. இப்போ எல்லா பல்லும் விழுந்துபோயிடுச்சு. இப்போ பல்பொடி தேவையில்லைன்னுட்டுதான் நீ கொடுக்குற காபியிலேயே கொஞ்சம் வாய் கொப்பளிச்சுகிறேன்.
பாட்டி: அதனால்தான் காலைல உங்களுக்கு, காபிக்கு பதில் வெறும் வெந்நீர் தரேன் தெரியுமா?
தாத்தா: நீ போடுற காபியும் அப்படித்தானே இருக்கும். சரி, நீ போய் காப்பி பொடி வாங்கி வா. கொஞ்சம் வெந்நீர் கொடுத்துட்டுப் போ, ஒரு கூஜா நிறைய. கொஞ்சம் கொப்பளிக்க கொஞ்சம் குடிக்க.
பாட்டி: காப்பி குடிச்சிட்டு அரை மணி கழித்து போகிறேன். இவ்வளவு சீக்கிரம் எவனும் கடைய திறக்கமாட்டான்.
தாத்தா: இப்போதாண்டி சொன்னே, சரமாரி கொழுந்து, காப்பி பொடி இல்லைனு. பின்னே உனக்கு மட்டும் எப்படி காப்பி குடிக்கமுடியும்?
பாட்டி: நான் சாதாரண மரிக்கொழுந்து இல்லங்கண்ணா. மதுரை மரிக்கொழுந்து. இன்னிக்கு காலைல காப்பி பொடி இருக்காதுன்னுட்டுதான் நேத்திக்கு சாயங்காலமே உங்களிடம் சொல்லி, காப்பி டிகாக்ஷன் போட்டு வச்சுட்டேன்.
தாத்தா: அப்போ ஏண்டி மதுரை மாரி மருக்கொழுந்து, என்கிட்டே காப்பி இல்லைனு சொன்னே?
பாட்டி: நான் காப்பி இல்லைனு சொல்லலையே, காப்பி பொடிதான் இல்லைனு சொன்னேன்.
தாத்தா: அப்போ ஒரு கூஜாவில் காப்பியே கொடு, கொஞ்சம் கொப்பளிக்க கொஞ்சம் குடிக்க.
பாட்டி: என்பது வயசுல உங்களுக்கு இவ்வளவு கொழுப்பு இருந்தா, இந்த எழுப்பதினாலு வயசு கொழுந்திக்கு எவ்வளவு திமிரு இருக்கும்?
தாத்தா: என்னுடைய கொழுப்புக்கு காரணமே உன் காப்பிதான். சரி, சும்மா எதுக்கு பேச்சை வளர்க்கணும். போய் சோபாவில் உட்காரு. நான் போய் காப்பி போட்டு கொண்டு வாரேன்.
பாட்டி: அப்பாடி, இப்போதான் உங்க தூக்க கலக்கம் தீர்ந்தது.
('ஆமாம் தூக்க கலக்கம் போயிருச்சு, ஆனால் முப்பது வருஷமா எனக்கு நீ காப்பி கலக்கத்தை கொடுத்துட்டியேடி மண்ணடி மப்பு சரமாரி கொழுத்த மாரி கொழுந்தே' என்று முனுமுனுத்துக்கொன்டே தாத்தா காப்பி போட சமயலறைக்கு செல்கிறார்)