சந்திரனில் மூன்காணான் நாயர்

சந்திரயான் -3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மூலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்குவதை உறுதி செய்த இஸ்ரோ, தனது முதல் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பியது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் விண்வெளி வீரர், விண்வெளி நடைப்பயிற்சி மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளுக்குப் பிறகு, நிலாவில் கால் வைக்க நியமிக்கப்பட்டனர். நாம் இப்போது, 2028க்குள் நுழைந்து சென்று, நமது விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் போதும், தரையிறங்கிய பின்னரும் நடந்த நிகழ்வுகளை காண்போம்.

விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்து, விண்வெளி வீரர் சந்திரன், தரையிறக்கியிலிருந்து மெதுவாக சாய்தளத்தில் இறங்கி சந்திரனில் முதல் இந்திய காலடியை பதிக்க ஆயத்தம் ஆனார். பெண் விண்வெளி வீராங்கனையான திருமதி சந்திரகலா (இவர் சந்திரனின் உண்மையான மனைவி) மூன்றாவது அடியை வைக்க அவரை பின்தொடர்ந்தார்.

சந்திரன், சந்திரனின் மேற்பரப்பில் தனது சரியான வலது காலடியை வைத்தார். கவனமாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் தனது இடது காலை நிலவின் மேற்பரப்பில் வைத்தார். ஆனால், அவர் சரியாக இடது அடியை வைக்காத காரணத்தால் அவரால் சரியாக சமனிலைப்படுத்த முடியாமல், கீழே விழும் நிலை ஏற்பட்டது. எச்சரிக்கையாக இருந்த சந்திரகலா சந்திரனை காப்பாற்ற வருவதற்குள், ஏலியன் ஒருவன் சந்திரனை கீழே விழாமல் பத்திரமாக பிடித்துக் கொண்டான்.
(சந்திரனைப் பற்றிக் கொள்வதில் தான் சற்று மெதுவாய் இருந்துவிட்டோம் என்று நினைத்து சந்திரகலா வருந்தினாள். சந்திரனின் காதுகளில் கிசுகிசுக்கினாள் “இதோ பாருங்கள், நாம் ஆர்பிட்டரில் இருந்து இடமாற்றம் செய்யும்போது உங்கள் இடப்பக்கத்தின் லேஸை இறுக்கிக் கட்டிகொள்ளச் சொன்னேன். நீங்கள் அதை செய்தீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது” - இது நிச்சயமாக, சந்திரன் காதில் விழவில்லை)
சந்திரன் (தன்னை தாங்கி பிடித்துக்கொண்ட ஏலியனிடம்) அடடா! மிக்க நன்றி. நீங்கள் யார்? ஒரு வேற்றுக்கிரகவாசி எங்களை கவனித்துக் கொள்வார் என்றும், எங்களை பாதுகாப்புடன் நிலைனிறுத்தி வரவேற்பார் என்றும் நான் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன்.

சந்திரனை தாங்கிப்பிடித்த ஏலியன் போன்றவன்: ஐயா நான் ஏலியன் இல்லை. ஒரு மனிதன். நான் இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சந்திரமுகி கிராமத்தைச் சேர்ந்தவன், என் பெயர் மூன்காணான் நாயர். நான் பூமியில் இருந்தபோது நாற்பது கிலோ எடை என்பதால் எப்படியோ சந்திரயான்-2 விண்கலத்தில் ரகசியமாக நுழைந்துவிட்டேன். ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது என்னுடைய குடல் மற்றும் இதர பகுதிகள் தலைகீழாக மாறிவிட்டன. தரையிறங்கி வாகனம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, நான்ராக்கெட்டில் இருந்து, என் எர்பாகுடன் குதித்து என்னுடைய கடவுள் குருவாயூரப்பனால் தப்பித்தேன்.

சந்திரகலா: இங்கு நாங்கள் காண்பது உண்மை என்பதை எங்கள் கண்களால் நம்ப முடியவில்லை. இந்த அழகான ஸ்பேஸ் சூட் உங்களுக்கு யார் கொடுத்தது? நிச்சயமாக இவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இறுக்காது. அதன் நிறமும், வடிவமைப்பும் அவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது. எங்கிருந்து வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள். நான் மீண்டும் பூமிக்குத் திரும்பிச்செல்கையில் அதை வாங்கி அணிந்து கொள்வேன். நல்ல தள்ளுபடி வாங்கி கொடுத்தால் நான் உங்களுக்கு ஒரு ரிட்டர்ன் பரிசு கொடுப்பேன்.

மூன்காணான் நாயர்: நானே இன்னும் இரண்டு நாட்களில் நல்லதொரு பரிசை எதிர்பார்க்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் நீங்கள் இங்கேயே இருக்க முடியும் என்றால், நீங்கள் கேட்ட ஸ்பேஸ் சூட் வாங்கி கொடுக்கமுடியும்.
சரி, நான் விட்ட இடத்திற்கு வருகிறேன். 2019-ல் நான் ஶ்ரீஹரிகோட்டாவில் விண்கலத்தின் உள்ளே ரகசியமாக நுழைந்தபோது, அது ஏவப்படுவதற்கு சற்று முன்பு, ஒரு விண்வெளி சூட்டுக்கு பதிலாக என்னுடன் ஐந்து லுங்கிகள் மட்டுமே இருந்தன.
ரொக்கெட்டிலிருந்து தப்பிய நான், விண்வெளியில் மிதந்து கொண்டிருந்தபோது, எனக்கு சூடான தேநீர் மிகவும் தேவைப்பட்டது, ஆனால் அடுப்பை எரிக்க எந்த மேஜையோ அல்லது திடமான இடமோ கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் வெற்றிடத்தில் மிதந்த பிறகு, இனி என் உயிர் இருக்காது அதன் உடல்தான மிதக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் குருவாயூரப்பனின் அருளால் விசித்திரமான விண்வெளி வாகனத்தில் வேற்றுகிரகவாசி ஒருவரை கண்டேன். அவரை வணங்கினேன். அவர் என்னிடம் வந்து, என்னைப் பார்த்து, என் ஐந்து லுங்கிகளை கூர்ந்து கவனித்தார். ஒரு பாதுகாப்புக்காக வேண்டி, நான் ஐந்து லுங்கிகளையும் எல்லா லுங்கிகளின் நிறங்களும் தெரியும்படி உடுத்தியிருந்தேன். அவர் கொஞ்சம் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பார்த்தார், பின்னர் நான் எங்கே போக வேண்டும் என்று சைகை மொழியில் கேட்டார். நான் வெற்று இடத்தில் நிலவின் உருவத்தை வரைந்து காட்டினேன். என்னைப் பார்த்து, தன் வாகனத்தை நோக்கி கைகளைக் காட்டினார். உடனே நான் அதில் அமர்ந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் என்னை நிலாவில் இறக்கி விட்டார். நான் மேலேயும் கீழேயும் அல்லாடுவதையும், நிலாவில் நிற்க போராடுவதையும் அவர் கவனித்தார். பின்னர் அவர் எனக்கு இந்த சிறப்பு ஆடையை வழங்கினார், அவர் அதை என் மீது அவரே பொருத்தினார்.

சந்திரன்: நீங்கள் சொல்பவை எல்லாம் கற்பனைக்கும் எட்டாதது. இங்கே நான்கு ஆண்டுகள், அதுவும் தனியாக எப்படி வாழ்கிறீர்கள்?

மூன்காணான் நாயர்: ஏலியன் வெளியேற நினைத்தபோது, அவரது வலது கையை பிடித்து உலுக்கி நன்றி தெரிவித்தேன். ஆனால், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மூவுனோ, மூவுனோ, மூவுனோ, ஹூவோ, காஹூவோம்மா என்று அவர் சத்தம் போட்டார். வேகமாக தன் கையை விலக்கிக்கொண்டார். பின்னர் தான் எனக்கு புரிந்தது, நான் அவர் கையை பிடித்து வேகமாக அசைத்தபோது அவருக்கு வலித்திருக்கும் என்று. நான் பட்டினியுடனும் நடுங்கிக் கொண்டும் கிடந்தேன். எப்படியோ என் ஏர்பேக்கைத் திறந்து டீ பவுடர், சர்க்கரை, பால் பவுடர், சின்ன கெட்டில், பேப்பர் டீ கப்புகள், சோலார் அடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் எடுத்துக் காட்டினேன். அவர் என் லுங்கியை உற்றுப் பார்த்தது போல் நான் காட்டிய பொருட்களை உற்றுப் பார்த்தார்.
நான் என்னுடன் எடுத்துச் சென்ற இருபத்தைந்து லிட்டர் தண்ணீரையும் ராக்கெட்டில் இருக்கும்போதே குடித்துவிட்டேன், மேலும் எனக்கு உட்கார கொஞ்சம் இடம் கிடைக்கும் என்று தண்ணீர் கொள்கலனை வெளியே வீசிவிட்டேன் என்று நான் அவரிடம் அடையாளமாக கூறினேன். சூரிய அடுப்பை எரிக்க வேண்டும் என்று அவருக்கு புரிய வைக்க நான் நிறைய சிரமப்பட்டேன். நான் அவரிடம் கெஞ்சினேன், எனக்கு தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று.

சந்திரகலா: வேற்றுகிரகவாசி எந்த கிரகத்தில் இருந்து வந்தார் தெரியுமா?

மூன்காணான் நாயர்: அவர் சந்திரனில் தான் வாழ்கிறார் என்பதை எப்படியோ தெரியப்படுத்தினார். பின்னர் என்னை காத்திருக்குமாறு கூறிவிட்டு தனது வாகனத்தில் புறப்பட்டார். அடுத்த அரை மணி நேரத்தில் சில பொருட்களுடன் திரும்பி வந்து, எனக்காக இந்த கூடார வீட்டை ஏற்பாடு செய்தார். அவர் தண்ணீர் போன்ற திரவம் மற்றும் ஸ்டவ் போன்ற கேட்ஜெட்டை கொண்டு வந்தார். அவர் தண்ணீர் போன்ற திரவத்தை கொண்டுவந்த கொள்கலனை பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது, நான் காலி செய்தபின் வீசி எறிந்த பிசிலேரி மினரல் வாட்டர் கொள்கலன்.

சந்திரகலா: பிசிலரி கொள்கலனுக்கு உத்திரவாத பணம் கொஞ்சம் நீங்கள் ஏலியனிடம் கேட்டிருக்கலாமே?

மூன்காணான் நாயர்: ஆமாம், நிச்சயம் கேட்டிருப்பேன், நாங்கள் இருவரும் பூமியில் இருந்திருந்தால். என்ன வேணும்னாலும் கெட்டிலில் ஊற்று என்று சைகை காட்டி விட்டு, தன் அடுப்பில் கெட்டிலை வைத்தார் ஏலியன். பின்னர் ஏதோ உடல்மொழியை உருவாக்கி, உரத்த குரலில் கைகளைத் தட்டி, 'தீயா.... தீயா..... தீயா..... நீயா..... போயா. .. வாயா. .. 'என்று சில வார்த்தைகளை உச்சரித்தார். இந்த நடவடிக்கைகளால், கெட்டில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு இறுதி முறை 'ஐயாயாயாயா' என்று கத்தினார். பின்னர் நான், சூடான தேநீர் போன்ற ஒன்றை தயாரித்து ஒரு கோப்பையில் அவருக்கு வழங்கினேன். அதை குடித்துவிட்டு, மகிழ்ச்சியுடன், மேலும் குடிக்கவேண்டும் என்று கேட்டார். தேநீர் தடிமனான பாயாசம் (பொதுவாக அரைத்த இனிப்பு) போல இருந்தது. அவருக்கு இன்னொரு கப் டீ பாயசம் கொடுத்துவிட்டு நானும் நாலு கப் பாயசம் குடித்தேன். என் உடலை தொடாமல் என்னை அணைத்துக் கொண்டார்.

சந்திரகலா: உன்னைத் தொடாமல் அவனால் எப்படி உன்னைக் கட்டிப்பிடிக்க முடிந்தது?

மூன்காணான் நாயர்: ஏனெனில், இருவரும் ஸ்பேஸ் சூட் அணிந்திருந்தோம். பின்னாளில் நான் கொண்டு வந்த தேயிலை தீர்ந்து போகவே, என் நண்பர் தேநீர் இலை போன்ற ஒன்றை ஏற்பாடு செய்தார். இன்னும் விசித்திரமான தோற்றமுடைய நீல நிற இலையுடன், நான் எனக்காகவும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காகவும் தினசரி டீ தயாரிக்கிறேன். ஆனால் நம் இந்திய தேநீர் போல இல்லை. ஆனால் நான் அவர்களின் நீலகண்ட நாயராக (blue -eyed boy) மாறியதில் மகிழ்ச்சி.
சந்திரன்: நாம் இப்போது ஏலியனை சந்திக்கமுடியுமா?

மூன்காணான் நாயர்: அவர் ஒரு முக்கியமான வேலைக்காக சிறிது நேரத்துக்கு முன்புதான் கிளம்பினார்.

சந்திரகலா: இப்போது நான்கு ஆண்டுகளாக நீங்கள் இங்கு இருப்பதால், அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டீர்களா?

மூன்காணான் நாயர்: ஆம், ஓரளவு. ஆச்சி பாச்சி இச்சி ஈஎச்சி உச்சி ஊஊசி ஆஆ ஆஆஆ அச்ச்ச்ச்சி

சந்திரகலா: இவை நீங்கள் இங்கே போடும் பஜ்ஜி மற்றும் பகோடா வகைகளா?

மூன்காணான் நாயர்: இல்லை, நான் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட உள்ளூர் மொழி இது. நான் இப்போது என்ன சொன்னேன் என்றால் "நிலவில் இப்போது மகிழ்ச்சியாக வாழும் ஒரு நபரை நீங்கள் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? கடைசி சத்தமான ' அச்ச்ச்ச்சி’... மொழியல்ல. லேசான ஜலதோஷம் காரணமாக, நான் இருமினேன்.

சந்திரகலா: அய்யோ... ரொம்ப வருத்தமா இருக்கு.

மூன்காணான் நாயர்: குருவாயூரப்பனின் அருளால் விரைவில் குணமடைவேன்.

சந்திரகலா: நான் அதை சொல்லவில்லை. இன்னும் மூன்று மணி நேரத்தில் சந்திரனை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் எங்களுடன் இந்தியாவுக்கு வர விரும்புகிறீர்களா?

மூன்காணான் நாயர்: இல்லை, நன்றி. குருவாயூரப்பன் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். என் மனைவி மூன்மூன் சன்னும் நான் சந்திரனுக்குச் செல்லும் ரகசிய திட்டத்தை அறிவாள். நான் அவள் என்னுடன் வரவேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் அவள் 'நீங்கள் நாற்பது கிலோ, நான் எண்பது கிலோ. எனவே, முதலில் நீங்கள் நிலவுக்குச் சென்று, உங்களை நிலைநிறுத்திக்கொண்டு, டீக்கடை அமைத்துக் கொள்ளுங்கள். வியாபாரம் சூடுபிடித்து பிறகு விடுமுறையில் ஒரு மாதம் பூமிக்கு வாருங்கள். எல்லாம் சரியாக இருந்தால் அடுத்த பயணத்தில் நானும் உங்களுடன் இணைவேன்" என்று சொல்லிவிட்டாள்.

சந்திரன்: அப்படியென்றால் இப்போது, ஏன் எங்களுடன் பூமிக்கு வரக்கூடாது? ஶ்ரீஹரிகோட்டாவில் பத்திரமாக இறக்கி விடுகிறோம். அங்கிருந்து கேரளாவிற்கு நிறைய பேருந்துகள் இருக்கும்.

மூன்காணான் நாயர்: உங்கள் அன்பான அழைப்பிற்கு நன்றி. ஆனால், இப்போது, சந்திரனின் தட்பவெப்ப நிலைக்கு பழக்கப்பட்டுவிட்டேன். எனக்குத் தெரியும் சமையலை இங்குள்ளவர்களுக்கு செய்து கொடுக்கிறேன். இங்கு மீனோ கோழியோ கிடைக்காததால் இவர்கள் தூய சைவ உணவு உண்பவர்கள். நானும் நான்கு ஆண்டுகளாக சைவ உணவாளராகவும் இருக்கிறேன். இனிமேலும் நான் ஒரு சைவ உணவு உண்பவனாகத்தான் இருப்பேன். என் சமையல் சேவைக்காக கைமாறாக, நான் ஓரளவுக்கு பிரச்சினை இன்றி வாழும் தினசரி பொருட்கள் பலவற்றை அவர்கள் எனக்கு தருகிறார்கள். நான் இந்தியாவுக்கு வந்தால், ஒருவேளை நான் அங்கே வாழ லாயக்கு இல்லாதவனாக இருக்கலாம். அது மட்டுமின்றி, உளவு பார்த்ததற்காக அரசு என்னை கைது செய்ய வாய்ப்பும் இருக்கிறது.

சந்திரகலா: உங்கள் மனைவியை விட்டுவிட்டு இங்கு வந்தது குற்றமாகத் தெரியவில்லையா?

மூன்காணான் நாயர்: உங்களுக்கு இப்போது ஒரு விஷயத்தை சொல்கிறேன். என் மனைவி தற்சமயம் சந்திரனுக்கு வந்துகொண்டிருக்கிறாள். அப்பு குட்டன் என்று நான் அழைக்கும் என் நிலா நண்பர், என் மனைவியை கேரளாவிலிருந்து அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார். இதைத்தான் நான் உங்களிடம் சொன்னபோது அவர் ஒரு முக்கியமான பணிக்கு சென்றிருக்கிறார் என்று குறிப்பிட்டேன்.

சந்திரகலா: சந்திரன், நாம் உடனடியாக பூமிக்கு திரும்பி செல்லவேண்டும், யாராவது நமது விண்கலத்தை திருடக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நம் விண்கலம் களவாடப்பட்டுவிட்டால், விண்கலத்தின் தற்போதைய மதிப்பு நமது சம்பளத்திலிருந்து வசூலிக்கப்படும்.

சந்திரன்: நீ சொல்வது சரிதான். ஆனால் நாம் புறப்படுவதற்கு முன்பு சில சோதனைகளை நடத்த வேண்டும்.

சந்திரகலா: ஏற்கனவே கடந்த இரண்டு மணி நேரத்தில் நாயர் மூலம் மிகவும் சுவாரசியமான கம்பெனியில் நமக்கு நல்ல அனுபவம். மீதமுள்ள ஒரு மணி நேரத்தில் நாம் என்ன பெரிய சோதனையை நடத்த முடியும்? நாயரிடம் 'ஏலியன் டீ' தயார் செய்யச்சொல்லி குடித்துவிட்டு புறப்பட ஒரு மணி நேரம் ஆகிவிடும்.

சந்திரன்: நீ சொன்னதும் சரிதான் சந்திரகலா. மிஸ்டர் நாயர், தயவு செய்து 'விஞ்ஞான்' எனும் பெயர் கொண்ட இந்த சிறிய வாகனம் போன்ற கருவியை ஒன்றும் செய்துவிடாதீர்கள். குறிப்பாக, அதை டீ தயார் செய்யும் மேஜையாக மாற்ற வேண்டாம். அது உங்களுக்கு எந்த தீங்கும் செய்யாது. இந்த மேற்பரப்பில் சில நாட்கள் அல்லது வாரங்கள் சுற்றி விளையாடும். இரவு நேரம் என்றால் 'விஞ்ஞான்' தானாக தூங்கி விடும்.

மூன்காணான் நாயர் (சிரித்துக்கொண்டே): கவலை வேண்டாம். நான் அவரை எதுவும் செய்ய மாட்டேன். நானும் மாதம் பதினான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்கிறேன், ஏனெனில் மற்ற பதினான்கு நாட்கள் இங்கே இரவு. அந்த நேரம் தான், நான் சந்திரனில் ரகசியமாக வாக்கிங் செல்வதும், இரவு நேரங்களை ரசிப்பதும். சரி, இப்போது உங்களுக்கு நீல தேநீர் இல்லை டீ தயாரித்து தருகிறேன்.
சந்திரகலா: நன்றி நாயர். சர்க்கரை கொஞ்சம் தூக்கலாக போடுங்கள்.

மூன்காணான் நாயர்: அம்மணி, இங்கே சர்க்கரை எல்லாம் கிடையாது. ஆனால் கொஞ்சம் அச்சிப்பிச்சி இனிப்பு பொடி இங்கே கிடைக்கிறது. அதைத்தான் சர்க்கரையாக நான் பயன்படுத்துகிறேன்.

சந்திரன்: ஆமாம் நாயர் நண்பரே, நீங்க இங்கே பொழுதை எப்படி கழிக்கிறீர்கள்?

மூன்காணான் நாயர்: பூமியை பார்ப்பது (earth watching) மற்றும் விண் கலன்கள் பார்ப்பது. அப்புக்குட்டன் ஒரு முறை சொன்னார் "பூமியைத்தவிர வேறு சில கிரகங்களிலிருந்தும் இங்கே விண்கலங்கள் வந்து செல்கிறது. ஆகவே கொஞ்சம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்".

சிறிது நேரத்தில் நாயர் டீ தயார் செய்து இருவருக்கும் கொடுத்தார்.

சந்திரன்: பாயசம் சூடாக நன்றாக இருக்கிறது.

சந்திரகலா: எனக்கு தூக்கலாக இனிப்பு வேண்டும் என்று கேட்டதால் பாயசம் ஒரேடியாக திகட்டுகிறது.

சந்திரன்: இந்த பாயசத்தை குடிப்பதால் உடல் பிரச்சினை ஒன்றும் இருக்காதே?

மூன்காணான் நாயர்: உடல் பிரச்சினை இருக்காது. ஆனால் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து மனசு ரொம்ப லேசாகிவிடும். பிறகு மூன்று நாட்களில் சரியாகி விடும்.

சந்திரகலா: அய்யோ, அப்படியானால் நாம் விண்கலத்தை எப்படி சரிவர ஓட்டிச்செல்ல இயலும். எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது.

சந்திரன்: தலைக்கு மேலே வெள்ளம் போனா, சாண் என்ன முழம் என்ன? 95 சதவிகிதம் நேரம் கணினிதான் விண்கலத்தை இயக்குகிறது. ஒருவேளை இஸ்ரோவில் யாரவது கேட்டால் ' இது சந்திரனில் மூன்று மணிநேரம் இருந்ததன் விளைவு' என்று சொல்லிவிடலாம்.

சந்திரகலா: ஆஹா, ரொம்ப நல்ல திட்டம். நாயர், நீங்கள் கொடுத்த டீக்கு, இல்லை, பாயாசத்திற்கு நாங்கள் எவ்வளவு பணம் தரவேண்டும்?

மூன்காணான் நாயர்: பணம் ஒன்றும் தேவையில்லை. இங்கு அது செல்லாது. வெறுமனே மிதந்துகொண்டிருக்கும். அதற்கு பதில், நீங்கள் இந்தியாவிற்கு சென்றவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில் " நான்தான் சந்திரனில் கால் பதித்த முதல் இந்தியன் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கெனவே கேரளா மாநிலத்து மூன்காணான் நாயர் அங்கே அவரது கால்களை மட்டும் அல்லாமல், ஒரு தேநீர் கடையையும் வைத்துவிட்டார்' என்று அறிவித்தால் அதுவே போதும்.

சந்திரன்: அப்படி செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் இஸ்ரோவில் எல்லோரும் கோபித்துக்கொள்வார்கள். பத்திரிகையாளர்களிடம் ' நிலாவில் நாங்கள் இருக்கும்போது நம் கேரள மாநிலத்து நாயர் போல தோற்றம் கொண்ட ஒருவர், எங்களை வேகமாக கடந்து சென்றார்' என்று பட்டும் படாமலும் சொல்லிவிடுகிறோம். சரி, நாயர். உங்களது சேவைகளுக்கு மிக்க நன்றி. நாங்கள் இப்போது விடை பெறுகிறோம்.

சந்திரனும், சந்திரகலாவும் விண்கலத்தில் அமர்ந்து புறப்பட தயாரானபோது, சந்திரனில் விண்கலம் போன்ற வாகனம் ஒன்று இறங்குவதைக் கண்டனர். அதிலிருந்து இரண்டு நபர்கள் இறங்கினர். அதில் ஒருவர் இந்திய கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்தார். சந்திரனில் நின்றுகொண்டிருந்த உள்ளூர் நபர் ஒருவர் அவர்கள் இருவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார்.

இங்கே, கேரளாவின் சந்திரமுகி கிராமத்தில், மூன்காணான் நாயரின் மனைவியான 'மூன் மூன் சன்' திடீரென காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியும் கவலையும் அடைந்த நிலையில் இருந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ள ஒருவர் அவர் வீட்டு பலா மரத்திலிருந்து பத்து பழங்களை எவரோ இரவில் பறித்துச்சென்றுவிட்டார்கள் என்று புகார் செய்தார். இன்னொருவர், தன் வாழை மரங்களிலிருந்து இருபது நேந்திரம் பழக்குலைகள் இரவில் மாயமாக மறைந்துவிட்டன என்பதை துக்கம் அவர் தொண்டையை அடைக்க சொல்லிக்கொண்டிருந்தார்.
-நிறைவு-

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Aug-23, 10:26 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 97

சிறந்த நகைச்சுவைகள்

மேலே