கணக்குல எழுதிக்குங்க
கணக்குல எழுதிக்குங்க..!
இந்த வார்த்தையை சோமேஸ்வர் மெஸ் முதலாளியிடம் இப்பொழுது எப்படி சொல்வது என்னும் மன குழப்பத்தில் இருக்கிறான் இராமன்.
ஒரு காலத்தில், காலம் என்ன காலம்? கொரோனோவுக்கு முன் என்று சொல்லலாம், மெஸ்சுக்கு வருவான் வேண்டியதை ஆர்டர் செய்வான், தினம் ஒரு அசைவம் தேவைப்படும். குறைந்த பட்சம் “ஆம்லெட்டாவது” வேண்டும். சாப்பிட்டு விட்டு முதலாளி மேசையின் மேல் வைத்திருக்கும் கணக்கு நோட்டில் எழுதி விட்டு கிளம்பி விடுவான். மாசம் பிறந்தால் யார் தவறுகிறார்களோ இல்லையோ இவன் எண்ணி பணத்தை மெஸ் முதலாளி கையில் கொடுத்து விடுவான். இதற்காக “ஸ்பெசல்” ஏதாவது ஒன்றை அவனுக்கு சாப்பிடும்போது கொடுக்கும்படி சர்வரிடம் முதலாளியே சொல்லி விடுவார். அந்தளவுக்கு அவனுக்கு செல்வாக்கு இருந்தது.
கல்யாணமா, காதுகுத்தா? போட்டோ எடுத்தால் இராமன் எடுத்தால்தான் அந்த விழவிற்கே சிறப்பு என்று நினைத்து அவனை மொய்த்து கொள்வார்கள், அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள். எப்பொழுது ‘கொரோனா’ சிக்கல் ஆரம்பித்ததோ இல்லையோ விழாக்கள் எல்லாம் அப்படியே நின்று போய் தடுமாறிப்போனான். பணம் கொழித்து கொண்டிருக்கும் போது தாராளமாய் செலவு செய்து பழகி விட்டவன். அந்த வருடம் முழுக்க இழுத்து பிடித்து செலவு செய்ய அவன் பட்ட கஷ்டங்கள்.
வருமானமே இல்லாத அந்த காலங்களில் அவனுக்கு கை கொடுத்தது சுற்று வட்டம், நண்பர்கள் உறவுகள் எல்லோரிடமும் கடன் வாங்கியதுதான். வருமானம் இல்லாமல் வட்டி மட்டும் குட்டி போட போட, அவனால் கட்ட முடியாமல் விழி பிதுங்கித்தான் போனான்.
அவனுடைய அதிர்ஷ்டம் “சோமேஸ்வர் மெஸ்” முதலாளி ஐந்து மாதங்கள் அவனுக்கு சோறு போட்டார். அவருக்கும் வருமானம் எல்லாம் படுத்து விட்டது, என்றாலும் இவனைப்போல தடுமாறிய இரண்டு மூன்று பேருக்கு விடாமல் சோறு போட்டார். கிடைத்ததை கொடுத்து எப்படியோ தவணைகளை கட்டி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அசைவத்தை எல்லாம் மறந்தே விட்டான். காலையில் இருந்ததை ஆக்கி வைத்து இருப்பார்கள், சாப்பிட்டு விட்டு கணக்கில் எழுதி விடுவார்கள்.
ஒரு வழியாக “கொரோனா” சிக்கல் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக தொழில்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் “விழாக்கள் அது இது” என்று எதுவும் உடனே ஆரம்பிக்கவில்லை. அதற்கு கட்டுப்பாடு இருந்தது. பின் அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய, விழா நடத்துபவர்களும் பாதி பேருக்கு மேல் போட்டோ எடுப்பதை பெரிய செலவாக நினைத்து குறைக்க ஆரம்பித்தார்கள். சிலர் செல்போனிலே எடுத்து கூட நடத்திக்கொண்டார்கள்.
போதாதற்கு இராமன் கடைக்கு நேர் எதிரே வேறொருவன் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை திறந்து விட்டான். அதிலும் இராமனுக்கு அடி. அவனுக்கு வந்த வருமானம் இரண்டாய் பிரிந்து விட்டது.தொழிலை விட்டு போய் விடலாமா? என்று கூட நினைத்தான். எங்கு போவது? ஊருக்கு போனால் அங்கு விவசாயம் மட்டும்தான். அதுவும் வானம் பார்த்த பூமி, அதையே உழுது பயிரிட்டு ஒப்பேற்றி கொண்டிருந்தார்கள் தகப்பனும்,தாயும். போதாதற்கு தங்கச்சியும். இவனும் அங்கு போய் உட்கார்ந்து விட்டால்..!
பல்லை கடித்து நாளை ஓட்டினான். இந்த ஏழு எட்டு மாதமாகத்தான் தொழில் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கிறது. கூட இரண்டு பேரை வைத்து கொள்ளுமளவிற்கு ஓட்டம். ஆனால், வருமானம் வருகிறது என்று தெரிந்தவுடன், கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு வட்டி கட்டியபடி இருந்தாலும் அசல் ஆடாமல் அசையாமல் அவனை நின்றபடி பயமுறுத்தி கொண்டிருந்தது.
சோமேஸ்வர் மெஸ்ஸில் இப்பொழுது சாப்பிடுவதை குறைத்து கொண்டான். அங்கும் கணக்கு தலைக்கு மேல் நின்றது. மாத மாதம் கொஞ்சம் கொஞ்சமாய் கொடுத்து கொண்டுதான் இருக்கிறான். ஆனால் தொடர்ந்து சாப்பிடுவதை குறைத்து கொண்டான். கடன் ஏறிக்கொண்டே போவதை நினைத்துத்தான் இந்த முடிவை எடுத்து இருந்தான்.
முடிந்தவரை “டீ வடையுடன்” காலை உணவை முடிக்கும் அளவுக்கு மன பக்குவம் பெற்று இருந்தான், விழா நாட்களில் அங்கு போய் சாப்பிட்டு விடுவான். ஒரு காலத்தில் விழாவில் சாப்பிடுவதை கெளரவ குறைச்சலாக நினைத்தவன். மெஸ் முதலாளி கூட ஒரு நாள் கேட்டு விட்டார், என்ன இப்ப எல்லாம் இங்க சாப்பிடவே வரதில்லை, வருமானம் அதிகமானதுனால தம்பி எங்க கடைய மறந்துட்டீங்க போல.
“ஐயோ” அப்படி எல்லாம் நினைச்சுக்காதீங்க, இப்ப வண்டி நல்லா ஓடுது, அதனால எங்கயும் நின்ணு சாப்பிட நேரமில்லை, அதுக்காக ஒதுங்குனா நம்ம தொழிலை வேற எவனோ புடிச்சுக்கறான், உங்களுக்கு தெரியாததில்லை, சமாளித்தான்.
அதுவும் சரிதான், தொழிலு நல்லா இருக்கறப்பவே கையில காசு சேத்துக்கணும், தம்பி சேர்த்து வச்சிருக்கீங்களா? சிரித்தவாறே கேட்டார்.
அண்ணே கிண்டல் பண்ணறீங்களா? கடன் வேணா நிறைய சேர்த்து வச்சிருக்கேன், உங்களதையும் சேர்த்துத்தான், சிரித்தான்.
நம்ம கடன் கிடக்குது தம்பி, நீங்க அடிக்கடி வாங்க, எப்ப வேணா சாப்பிட்டு கணக்குல எழுதிட்டு போங்க, இராமனுக்கு அவர் வார்த்தைகள் நிம்மதியை கொடுக்கத்தான் செய்தது.
அவன் கூட வேலை செய்வதற்காக வந்த பையன் இராமனுக்கு ஒரு சாப்பாட்டு கடையை அறிமுகப்படுத்தினான். “அண்ணே” மாசம் மூணாயிரம் கொடுத்திட்டீங்கன்னா போதும் மூணு வேளையும் வேணுங்கறதை வாங்கி சாப்பிட்டுக்கலாம். மாசம் முடிஞ்சா கூட குறைய அதெல்லாம் கணக்கு பார்க்க மாட்டாங்க, அந்த மூணாயிரம் மட்டும்தான்.
“அட இது நல்ல விசயமா இருக்கே..! இராமன் அந்த கடையில் மூணாயிரம் கொடுத்து உறுப்பினராகி விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக “சோமேஸ்வர் மெஸ்” பக்கம் போவதை குறைத்து ஒரு கட்டத்தில் சுத்தமாக நிறுத்தி விட்டான்.
ஆறு மாதங்கள் கடந்திருந்தது, இதற்குள் மூன்று முறை வயிற்று வலியால் மருத்துவம் பார்க்க வேண்டியிருந்தது. இந்த ஆறு மாதத்தில் இரண்டு முறை மாதம் இருனூற்று ஐம்பதாக ஏற்றி இருந்தார்கள். அதை விட “எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்” என்று சொன்னாலும் நாள் முழுக்க இரண்டு வகை சமையல் மட்டுமே செய்து வைத்தார்கள். நொந்து போனான் இராமன். அவனுக்கு இப்பொழுது “சோமேஸ்வர் மெஸ்” தெய்வமாக தெரிந்தது.
பழையபடி “சோமேஸ்வர் மெஸ்’ மட்டுமே போதும் என்று முடிவு செய்தாலும் எப்படி போவது? எந்த முகத்தை வைத்து போவது? போய் சாப்பிட்டவுடன் காலை டிபனுக்கு கெளரவமாய் காசு கொடுத்து விடலாம், ஆனால் இருக்கும் நிலைமையில் மதியம் சாப்பாட்டுக்கு பணம், இராத்திரிக்கு..!
கணக்குல எழுதிக்குங்க என்று எப்படி சொல்வது? அநேகமாக அவன் பெயர் கூட அந்த கணக்கு நோட்டில் இருக்குமா என்பது சந்தேகமே ! இவன் அவர்களுக்கு பாக்கி வைத்திருந்தாலும், அது ‘வரா கடனாகவோ’ அல்லது ‘ஒழிந்து போ’ என்று சொல்லப்பட்ட கணக்காகவோ இருந்து விட்டிருந்தால்…! மீண்டும் எந்த முகத்தில் அங்கு போவது?
இப்படி ஏராளமான மன குழப்பங்களுடன் மெஸ் வாசலில் போய் நின்றான். முன்னால் மேசையில் அமர்ந்திருக்கும் முதலாளியை காணவில்லை வேறு யாரோ கொஞ்சம் வயதான பெண் உட்கார்ந்திருந்தார்கள்.
கொஞ்சம் நிம்மதியாய் உள்ளே போய் மேசையில் உட்கார்ந்தான். இப்பொழுது வேறொரு கவலை வந்திருந்தது. முதலாளி இல்லாததால் காசு கொடுத்துவிட்டு போ என்று சொல்லிவிடுவார்களோ? இந்த பயத்துடன் சமையல் அறை பக்கம் பார்த்தான். அங்கு வருவது யார்? அப்பாடி பழைய சர்வர்தான்.
வாங்க சார், ரொம்ப நாளா காணோம், எங்களை எல்லாம் மறந்துட்டீங்க, இல்லியா?
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, வெளியூர்ல கொஞ்சம் வேலை வந்திரிச்சு, பொய்யை அவிழ்த்தான்.
எனக்கும் அந்த சந்தேகம் இருந்துச்சு, ஏனா உள்ளூருல இருந்திருந்தா முதலாளி இறப்புக்கு வந்திருப்பீங்கல்ல..!
முதலாளி இறந்துட்டாரா? எப்போ? அதிர்ந்து போனான். அவரின் சினேகிதமான முகமும் சிரிப்பும் மனதில் நிழலாட.
அதை ஏன் கேக்கறீங்க? மூணு மாசமாச்சு, திடீருன்னு உட்கார்ந்திருந்தவரு, நெஞ்சை பிடிச்சுகிட்டு சாஞ்சாரு, அவ்வளவுதான், ஆஸ்பத்திரிக்கு கொண்டு போணொம், ஆனா பிரயோசனமில்லை.
அப்ப கல்லாவுல உக்காந்திருக்கறது?
அவரு சம்சாரம், பாவம் தொழிலை விடமுடியுங்களா? அவங்களே வந்து கடைய நடத்துறாங்க, எங்களுக்கும் நிம்மதியாய் போச்சு. என்னதான் இருந்தாலும் நிரந்தரமா நமக்குன்னு ஒரு போக்கிடம் வேணும் பாருங்க..! அவனுடன் பேசிக்கொண்டே இலையை விரித்து சூடாக நான்கு இட்லியை வைத்து சாம்பாரும் சட்னியும் வைத்தார்.
‘மனபாரத்துடன்’ சாப்பிட்டு முடித்தவன், இலையை மெல்ல சுருட்டி கொண்டு போய் போட்டு விட்டு கையை துடைத்தபடியே “பாவம் காசையே கொடுத்து விடுவோம்’ எண்ணியபடி கல்லா பெட்டி அருகே வந்தான்.
இவனுக்கு பரிமாறிய சர்வர் நின்றிருந்தார். இந்தாங்க சார் கணக்கு நோட்டு, உங்க பக்கத்தை திறந்து பார்த்து எழுதிக்குங்க, சொன்னவர் அந்த பெண்ணிடம் சார் நம்ம கிட்ட ரொம்ப வருசமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தவரு. ஐயாவுக்கு ரொம்ப நட்பு, அறிமுகப்படுத்தி விட்டார்.
இவன் படபடப்பாய் அவனது பக்கத்தை புரட்டி பார்க்க, அதில் அவனது கணக்கு முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. அப்படியானால் கண்டிப்பாய் இவன் வருவான் என்னும் நம்பிக்கையா?
இவனே பொறுமையாக கணக்கை முடித்து நானூறு ரூபாய் பாக்கி இருந்ததை எழுதி அந்த பெண்ணிடம் காட்டிவிட்டு இன்று சாப்பிட்ட கணக்கையும் எழுதி விட்டு சொன்னான். “இந்த மாசம் முடியறதுக்குள்ள” எல்லாத்தையும் முடிச்சுடறேங்க”
அதுக்கென்னங்க தம்பி நீங்க “ரெகுலரா வந்தா போதும்” அந்த பெண் சிரித்தபடியே சொன்னது அவனுக்கு “சோமேஸ்வர் முதலாளியே” சொன்னது போல் இருந்தது.
வெளியே வந்தவன் வயிறு நிரம்பியது போல மனமும் நிறைந்திருந்தது.