ஐந்து என்றால் பிச்சை, ஐநூறு கோடி என்றால் சம்பளம்

நம் நாட்டில் நல்லவர்கள் கெட்டவர்கள் எத்தனை கோடி பேர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் பிச்சைக்கார்கள் பல லட்ச கணக்கில் இருக்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் திட்டவட்டமாக சொல்லமுடியும்.
பிச்சைக்கார்கள் எதற்காக இந்த ஈனமான தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு மிகவும் முக்கியமான காரணம் 'வறுமை, பசியின் கொடுமை ' என்பதை நாம் ஒவ்வொருவருமே நன்கு அறிவோம். இதைத்தவிர வேறு சில காரணங்களையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அவற்றில் சிலவற்றை கீழே பட்டியலில் தருகிறேன்.
1. உடலை வருத்தி பிழைக்காமல் சுலபமாக பணத்தை பெறுதல்
2. சிறு வயதிலேயே அனாதையாக கைவிடப்படுவது
3. குழந்தையிலேயே அவர்களை பெற்றோர்களிடமிருந்து கடத்தி பிச்சை எடுக்க பழக்கிவிட்டு, அந்த பிச்சை பணத்தில் வாழ்கின்ற இதயமற்ற கயவர்களின் கல்மனம்
4. ஈட்டும் பணம் போதவில்லை என்பதால் குடி சிகரெட் போன்றவைகளை பிடித்து குடித்து இன்பமுற பிச்சை எடுப்பது
5. கணவனால் கொடுமை படுத்தப்பட்டு, குழந்தையுடனோ அல்லது தனித்தோ வீட்டை விட்டு வேறு ஊருக்கோ மாநிலத்திற்கோ சென்று, செய்வதறியாமல் பிச்சையில் ஈடுபடுவது.
6. மொத்த குடும்பமே உடலை வருத்திக்கொள்ளாமல் பிச்சையில் ஈடுபடுவது.
7. ஏதோ சில காரணங்களுக்காக அநாதை இல்லங்களிலிருந்து சொல்லிக்காமல் கொள்ளாமல் தப்பித்துக்கொண்டு, பசியை போக்கிக்கொள்ள பிச்சை எடுப்பது.
8. ஒரு தவறும் செய்யாதிருப்பினும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, பழிக்கப்பட்டு, சமுதாயத்திலிருந்து தள்ளி வைக்கப்படும் திருநங்கைகள்.
ஒருவர் தன்மானம், சுயமரியாதை, கவுரவம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு பிச்சை எடுக்க, இது போல வேறு பல காரணங்களும் இருக்கலாம். சமீபத்தில் நான் என் மனைவியுடன் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி போன்ற பல ஊர்களுக்கு சென்று வந்தேன்.
முன்பெல்லாம், பொதுவாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் ஆலயங்களின் வெளியில்தான் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து வந்தனர். ஆனால், இப்போது ஒரு முன்னேற்றம். அது என்னவெனில், கோவில்களின் உள்ளேயே இவர்கள் பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
கோயில் பிராகாரத்தை சுற்றி வருகையில் நம்மை பின்தொடர்ந்து வருகின்றனர் அல்லது கோவிலின் உள்ளே ஆங்காகே மூலைகளில் அமர்ந்து கொண்டு தட்டையோ அல்லது துண்டையோ விரித்துவிடுகின்றனர்.
மேற்கூறிய காரணங்கள் போதாதென்று, கோவில்களின் உள்ளேயே இருந்துகொண்டு, கோவிலினுள் நுழையும் பக்தர்களின் நடை உடை பாவனைகளை நன்கு கவனித்து அவர்கள் அருகில் வந்து, அவர்கள் ஒன்றும் கேட்காமலேயே , ' நீங்கள் முதலில் இந்த சாமியை கும்பிட வேண்டும், அந்த அரசமரத்தை ஆறு முறை சுற்றி வந்தால் உங்களுக்கு எல்லாம் நன்றாக நடக்கும், நீங்கள் வணங்கும் முறை சரியல்ல , இப்படி வணங்க வேண்டும், யாரும் பார்க்காத ஒரு சாமியை நான் உங்களுக்கு இந்த கோவிலில் காட்டுகிறேன், முதலில் இந்த சந்நிதிக்கு சென்றுவிட்டு பின்னர் அந்த சந்நிதிக்கு போவதுதான் சரியான முறை’, இப்படி ஏதாவது சொல்லிவிட்டு, பக்தர்களுடனேயே கோவிலை சுற்றி வருவார்கள். பொதுவாக இவர்கள் கேட்காமலேயே பக்தர்கள் ஏதாவது பணம் கொடுத்துவிடுகிறார்கள். சிலர் இவர்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். இந்த பேர்வழிகள் பார்ப்பதற்கு நல்ல உடை அணிந்துகொண்டு காணப்படுகின்றனர். இதை பிச்சை எடுப்பது என்று நேரடியாக கூறமுடியாது. ஆனால் இதுவும் ஒருவிதமான பிச்சைத்தொழில் என்றுதான் எனக்கு படுகிறது.
திருநங்கைகளை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இவர்கள் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் என்பது மட்டும் நிச்சயமாக தெரியும். அப்படியும் இப்படியும் இல்லாமல் ஒரு தினுசாக உடலமைப்பு கொண்டு, காலத்தின் கொடுமையால் இப்படி பிறந்து அல்லது உருவாகி, வாழ போராடும் இவர்களுக்கு பிச்சையை விட்டால் வேறு கதி இல்லை என்கிற நிலைதான் அதிகமாக இருக்கிறது. பிச்சை காரர்களை வளரவிடக்கூடாது என்பதுதான் என் எண்ணமாக இருந்தபோதிலும், ஏனோ உடல் ஊனம் கொண்டவர்கள், அதிக வயோதிகர்கள், போன்றவர்களுக்கு மற்றும் திருநங்கைகளுக்கு என்னால் பிச்சை போடாமல் இருக்கமுடியவில்லை.
மக்களை ஏமாற்றி பல வழிகளில் பணத்தை திருடுபவர்களைக்காட்டிலும் (லஞ்சம் வாங்குபவர்கள் இதில் அடக்கம்) பிச்சைக்காரர்கள் பரவாயில்லை என்பது என் கருத்து. இந்த கோணத்தில் பார்க்கையில் ஊரை ஏமாற்றுபவர்கள் பிச்சைக்காரர்களைவிட கேவலமானவர்கள் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை.
ஒரு புறம் ஐந்து ரூபாய்க்கு கூனி குறுகி பிச்சை கேட்கும் பிச்சை எடுக்கும் சமுதாயம். இன்னொரு புறம் ஒரு இருபது அல்லது முப்பது கால் ஷீட்டுகள் கொடுத்து, வெறுமனே நடித்துவிட்டு, ஐநூறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள். இந்த உலக வாழ்க்கையை என்ன சொல்வது?
இதுபோல நூற்று கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கும் நடிகர்கள் அவர்களின் ஐம்பது மடங்கு தேவைக்கு பணம் வைத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை ஏழை வயோதிகர்கள் மற்றும் குழந்தைகள் அனாதைகளின் இல்லங்களுக்கு தானம் தருமம் செய்வார்களானால், லட்சக்கணக்கான வறுமையில் வாடும் மக்கள், ஒரு வேளை இரு வேளை உணவு உண்டு வாழ முடியும். அப்படி உதவுபவர்கள் மனித சமுதாயத்தை உய்விக்கும் கொடைவள்ளல்களாக என்றென்றும் போற்றப்படுவர்.
நம் தமிழ் திரைப்பட நடிகர்களை மட்டும் நான் குறிப்பிடவில்லை. ஹிந்தி தெலுங்கு மற்றும் இதர மொழிகளில் நிறைய பணம் வாங்கிக்கொண்டு நடிக்கும் நடிகர்களையும் மட்டுமில்லாமல், மிக அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் ஹாலிவுட் நடிகர்களையும் சேர்த்துதான் இங்கு குறிப்பிடுகிறேன்.
இந்த உலகம் உள்ளவரை மனித சமுதாயம் உயர்வு தாழ்வுகளையும், ஏற்ற இறக்கங்களையும், சாதி மத குல பண குண பேதங்களையும் உடையதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களினாலும், குணங்களினாலும் இன்றைய உலகம் ஒரு புறம் பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் உயர்வு அடைந்திருந்தாலும் இன்னொரு புறம் வெட்கம் கெட்ட, மானம் இல்லாத, கவுரவம் மரியாதை, நாணயம் நேர்மை வாய்மை மனிதநேயம் போன்ற தெய்வகுணங்கள் மிகவும் குறைந்துவிட்ட தன்னலம் கொண்ட மனிதர்கள் அதிகம் உள்ள இடமாக மாறிவிட்டது.
நானும் ஓரளவுக்கு இயன்றவரை மற்றவர்களுக்கு (அல்லல் படும் உறவினர்களுக்கும், முதியோர் மற்றும் அநாதை இல்லங்களுக்கும்) பணமும் பொருளும் கொடுத்து உதவி வருபவன் என்னும் காரணத்தினாலேயே இந்த கட்டுரையை எழுத முற்பட்டேன்.
தாய் தந்த பிச்சையில் நாம் பிறந்தோம். நாம் தரும் பிச்சையில் பல பிச்சைக்காரர்கள் வாழ்கின்றனர். இதுதான் உலக வாழ்வு.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Sep-23, 12:41 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 32

மேலே