சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை - கலிவிருத்தம் 1
கலிவிருத்தம்
(புளிமா கூவிளங்காய் புளிமாங்கனி கூவிளங்காய்)
பொடியார் மேனியனே புரிநூலொரு
..பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளரங்கையின்
..மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள்
..வீர(ட்)டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை
..நீயலதே! 1
- 028 திருக்கடவூர் வீரட்டம்
பொழிப்புரை:
திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே,
புரியாகிய நூல், ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற் பொருந்தி விளங்க, கூர்மை பொருந்திய முத்தலை வேல் (சூலம்) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே,
திருக்கடவூரினுள், `வீரட்டம்` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே,
என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லது வேறு யார் துணை!