பாரதி தெருக்களில் எவ்வளவு பேர் பாரதியை அறிவார்கள்

இன்றிலிருந்து நூற்றியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ் சகாப்தம், ஏன் ஒரு இந்திய சரித்திரம், காலத்துடன் கலந்து ஐக்கியமானது. புதிய தமிழ் கவிதையின் தந்தை, தேசியகவி சுப்ரமணிய பாரதியார் மிகவும் குறைந்த வயதில், தனது முப்பத்தியொன்பதாவது வயதில் இறந்தார். சுதந்திர தாகத்தை கொடுத்த மாமனிதர், நம் நாடு சுதந்திரம் அடைந்ததை காணக் கொடுத்துவைக்கவில்லை.
பாரதி குறுகிய காலமே வாழ்ந்தார்
காலம் வென்ற கவிஞராக சிறந்தார்
நம் சுதந்திரத்திற்கு கூக்குரலிட்டார்
இறுதியில் ஏழையாகவே இறந்தார்

குறுகிய கால வாழ்க்கையில் சாதனை புரிந்து சென்றவர்கள் பலருண்டு. ஆதி சங்கரர் முப்பத்தியிரண்டு வயது மட்டுமே வாழ்ந்து, அத்வைத சித்தாந்தத்தை தோற்றுவித்து, பகவத் கீதை மற்றும் வேறு பல வேத நூல்களுக்கும் விளக்க உரை வழங்கினார். சுவாமி விவேகானந்தர் நாற்பது வயதில் மறைந்தாலும் உலகமே போற்றும் சிந்தனையாளராகவும், ஆன்மீகவாதியாகவும் வாழ்ந்து சென்றார். ஐம்பத்தியொரு வருடம் மட்டும் வாழ்ந்து, இராமலிங்க அடிகளார் ஆறாயிரம் பாடல்கள் இயற்றி, மனித சமுதாயத்திற்கு அன்பின் பெருமையை, இரக்கத்தின் அருமையை, மனிதாபிமானத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். ஜீவகாருண்யம், கொல்லாமை எனும் தெய்வீக குணங்களை மனிதன் பின்பற்றினால் கடவுள் தன்மையை உணரமுடியும் என்று தெளிவுணர்ந்து கூறினார்.
இந்த வகையில் பாரதியாரும் அவரது முப்பத்தியொன்பது வருட குறுகிய வாழ்க்கையில் இந்திய சுதந்திரத்திற்காக போராடி, தமிழில் கவிதை வழங்குவதில் ஒரு புரட்சியையும் செய்து, மனிதனின் உயர்வுக்கு தேவையான குணங்களை தனது மயிர்கூச்செரியவைக்கும் கவிதைகள் மூலம் சமுதாயத்திற்கு தந்து சென்றார்.
"தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தை அழித்திடுவோம்' என்று, இவர் உணர்வுடனும் உணர்ச்சி பெருக்குடனும் மனிதாபிமானத்துடனும் கர்ஜனை செய்தது இன்றும் பலர் காதுகளில் ரீங்காரம் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆயினும், அவர் மறைந்து நூற்றியிரண்டு ஆண்டுகள் ஆனபின்னும், நம் நாட்டிலும் இன்னும் உலகத்தில் பல இடங்களில் மனிதர்கள் பட்டினியால் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
"என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?" என்று அவர் மனம் நொந்து பாடியதை இப்போது கேட்டாலும் உள்ளம் பதைக்கும், நெஞ்சம் துடிதுடிக்கும். இன்னும்கூட பல இடங்களில் கொத்தடிமை முறை இருந்துதான் வருகிறது என்பது மிகவும் கசப்பான உண்மை.
கடவுளுக்கு நாம்தான் உருவம் கொடுத்தோம் ஆனால் கடவுள் மனித உருவத்தை தாண்டிய பரம்பொருள் என்பதை அவர் அவரது கவிதைகள் வாயிலாக பகிர்ந்து கொண்டார். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்னும் வார்த்தைகளுக்கேற்ப 'நாம் காணும் யாவிலும், காணமுடியாதவற்றிலும் இறைபொருள் நிறைந்திருக்கிறது என்று ஓதியவர் பாரதியார்.
ஆயினும், கடவுளை உருவமாகவே வணங்கி வரும் முறைதான் நம் நாட்டில் இன்றும் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் 'கண்ணால் காண்பவற்றை மட்டுமே மக்கள் நம்புகின்றனர். சிலை வடிவில் மனித உருவத்தை பார்க்க இயலாவிட்டாலும், அந்த சிலையையே தெய்வம் என்று நம்பி தொழுகின்றனர். பக்தி சிந்தனை ஒரு மனிதனை நல்வழி படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மெய்ப்பொருளை உணர்வதற்கு, எல்லாம் கடந்து எங்கும் வியாபித்திருக்கும் அபூர்வமான, அற்புதமான தெய்வீக சக்தியை உணர்வதற்கு வெறும் பக்தி மார்க்கம் மட்டுமே வழி வகுக்காது என்றே பாரதியார் நம்பினார். நானும் இந்த கருத்தைத்தான் வழிமொழிகிறேன். பூசையையும் கோவில் சிலைகளையும் சடங்குகளையும் கடந்து செல்லும் பாதை தான் ஆன்மிகம். ஆன்மீக பாதையில் செல்பவருக்கு அகத்தின் உள்ளேதான் நாட்டமே தவிர வெளியில் தோற்றமளிக்கும் பொருட்களிலும் வேறு ரூபங்களிலும் இல்லை. இந்த கருத்தை பக்தி மார்கத்தில் செல்கின்ற பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இருப்பினும், ஒருவர் அல்லது ஒரு நம்பிக்கை உள்ளவர் இன்னொரு நம்பிக்கை கொண்ட ஒருவரிடம் அன்புடன் பழகினால் அதுவே ஒருவர் தெய்வத்திற்கு செய்யும் ஒரு சிறப்பாகும்.
"பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா" என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். இன்று உலகத்தில் என்ன நடக்கிறது? பாதகம் செய்பவர்களை கண்டு மக்கள் பயந்து பீதி கொள்வதே இன்று அதிகமாக இருக்கிறது. அஹிம்சை என்பது மகாத்மா காந்தியுடன் முடிந்து மடிந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
அமரகவி பாரதி மறைந்த இந்நாளில், அவரின் கவிதைகளை படித்து அவற்றின் பொருள் அறிந்திட, அவற்றில் நமக்கு நன்மை தருபவைகளை செயல்படுத்திட, அவற்றை நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்து வாழ்ந்திட தீர்மானம் இயற்றுவோம். நேர்மையுடன் அவற்றை செயல்படுத்துவோம்.
வாழ்க தமிழ்! வாழ்க பாரதியாரின் கவிதைகள்!
வாழ்க தமிழகம்! வாழ்க பாரதம்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-Sep-23, 12:58 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 62

மேலே