அம்மாச்சியின் ராஜாங்கம்

அம்மாச்சியின் ராஜாங்கம்

‘அம்மாச்சி” இரண்டு நாளா பேச்சு மூச்சு இல்லாம இருக்காமடா, நான் முசிறிக்கு கிளம்பி பொறென், நீ அங்கன வந்து சேரு.
அம்மா ராஜுவிடம் சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள். என்னாச்சுமா அம்மாச்சிக்கு? என்று அடுத்த கேள்வியை கேட்பதற்குள் அவளுக்கு என்ன அவசரமோ? போனை அணைத்து விட்டாள். மீண்டும் போன் செய்து கேட்கலமென நினைத்தவன் வேண்டாம்,முசிறியில் இருக்கும் அவள் அண்ணன் வீட்டில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கும் அம்மாச்சியை பார்க்க பறந்து கொண்டிருக்கலாம். இப்ப என்ன செய்யலாம்?
இன்னைக்கு வெள்ளிக்கிழமை, சாயங்காலம் வரைக்கும் கம்பெனியில ஒப்பேத்திட்டு இராத்திரி திருச்சி பஸ் ஏறிடவேண்டியதுதான், ராஜூ முடிவு செய்து கொண்டாலும் சூப்பர்வைசரிடம் போய் இதை சொல்லி லீவு கேட்பதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டான்.
வீட்டில் சம்சாரத்திடம் போனில் சொல்லி விட்டான், சாயங்காலம் வருவேன், ரெடியா இரு, ‘நைட்டு’ பஸ் ஏறிடலாம். இதை கேட்ட அவளுக்கு ஏக சந்தோசம், ஒரு மாசமாய் அவள் அம்மாவை பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தாலும், செலவு ‘கையை கட்டுமே’ என்று இறுக்கி கொண்டிருந்தாள். இப்ப என்னடான்னா பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி கிழவிக்கு பேச்சு மூச்சு இல்லாம போயி திருச்சிக்கு கிளம்பறதா ஆயிடுச்சு.
திருச்சியில் அவள் அம்மா வீடு, ராஜூ வீட்டுக்கு அடுத்த இரண்டாவது தெருவில்தான் இருக்கிறது. அப்படியே அம்மா வீட்டுல ஒதுங்கிக்கலாம், கணவனுடன் முசிறி போய் பார்த்து விட்டு, அப்படியே திருச்சிக்கு வந்துடலாம். முசிறியில் வீட்டில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த எண்ணத்தில் அவள் ராஜூவின் அம்மாச்சியை விட அம்மா வீட்டு கனவில் இருந்தாள்.
ராஜூவுக்கு அம்மாச்சி ஞாபகமாகவே இருந்தது, நல்ல தாட்டியான கிழவி, இருந்தால் எண்பது பக்கம் இருக்கும். மூணு நேரமும் வட்டல் சோறு என்றாலும் தாராளமாக ஒரு பிடி பிடிப்பவள். அவளை ஒரு ஆள் பிடித்து நிறுத்த முடியாது. மாமனே ஒரு சில நேரம் இவனிடம் சொல்லி புலம்புவதுண்டு எங்க ஆயிக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்தே நான் முடிஞ்சி போயிடுவண்டா, இரண்டு நாள்ல இருபது பாக்கெட் பிஸ்கட்ட தின்னு தீர்த்து போடும்டா, இன்னைக்கு வரும்போது வாங்கியா அப்படீங்கும், முந்தா நேத்துதானே வாங்குனேன் அப்படீன்னா “அவ்வளவுதான் உலகத்துல இல்லாத வசவை ஆரம்பிச்சிடும்.
இவன் அம்மாச்சியை பார்க்க போய்விட்டு கிளம்பும்போது ராஜூ இந்தாடா கையில் ஐனூறு ரூபாய் நோட்டை யாருக்கும் தெரியாமல் திணிப்பாள்.
வச்சுக்கடா, அவனை தொட்டு மகிழ்வாள். தாத்தன் அவனிடம் என்னடா அம்மாச்சி ஏதாச்சும் கொடுத்துச்சா? அவர் பங்குக்கு இன்னொரு ஐனூறு ரூபாயை திணிப்பார்.
வேணா என்று தலையசைத்தால் கொண்டு போடா “இங்க இல்லாமயாடா கிடக்குது இரண்டு கழுதைகளும் சம்பாரிச்சு கொட்டுதுங்க, பேத்தி கூட சம்பாரிக்க ஆரம்பிச்சுட்டா, அவருக்கு தன்னுடைய பெண்ணின் பையன்கள் மட்டும் இப்படி சாதாரண வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறார்களே என்னும் ஆதங்கம்.
அவர் இரண்டு கழுதைங்கள் என்று சொன்னது பையனையும், மருமகளையும், இரண்டு பேரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். அதுவும் மருமகள் ராஜூவின் அத்தை தலைமையாசிரியை. இதனாலேயே மாமா ராஜிவிடமும் அவன் அண்ணன்களிடமும் அதிகமாக ஒட்ட மாட்டார். என்னடா நல்லாயிருக்கியா? அவ்வளவுதான் மனைவியின் முன்பு இது மட்டும்தான். இரகசியமாக ராஜூவின் மூத்த அண்ணனுக்கு மனைவிக்கு தெரியாமல் ஒரு பக்கம் மூன்று லட்ச ரூபாயை கடன் வாங்கி ஒரு அரசு வேலையில் சேர்த்து விட்டவர், எங்க அக்காவுக்கு செய்யறது இந்த ஒரு உதவிதான், மேற்கொண்டு என்னால எதுவும் செய்யமுடியாது, எதிர்பார்க்காதே. எப்படியோ ஒருவனுக்காவது அரசு வேலை வாங்கி கொடுத்தாரே என்று இவர்கள் ஒதுங்கி கொண்டார்கள். அவர்களுக்கு மூன்று பெண்கள் இருந்த போதும், இவர்கள் பக்கம் திரும்பவே இல்லை.
அதிலும் இளைய பெண் டி.என்.பி.சி எழுதி அரசு பதவி வாங்கி தன் கணவனுடன் சென்னையிலேயே செட்டிலாகிவிட்டாள். முதலாமவள் திருச்சியில் கவர்ன்மெண்ட் பஸ் டிரைவருக்கு கட்டி கொடுத்திருந்தது.
இப்படி இவர்கள் எல்லாம் நல்ல வசதியுடன் இருப்பதை பார்த்து கொண்டிருந்த அம்மாச்சிக்கும், தாத்தனுக்கும் தன்னுடைய மகள் குடும்பம் அப்படி இல்லையே என்னும் வருத்தம்தான்.
கொரோனா வந்து அம்மச்சியையும், தாத்தனையும் ஒரே நேரத்தில் பற்றிக்கொள்ள அத்தை அப்பொழுது மட்டும் தன் கெளரவத்தை விட்டு கொடுத்து ராஜுவை வரச்சொல்லி உடனே முசிறி கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்க்க சொல்லி விட்டாள். அது மட்டுமல்ல தன்னுடைய பெண்களையும், கணவனையும் போய் பார்க்க கூடாது என்று தடையும் போட்டு விட்டாள்.
ராஜூவும், அவன் அம்மாவும் முசிறி கிளம்பி போய் அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க முயற்சிக்க, அவர்கள் திருச்சி ஆசுபத்திரிக்கு கூட்டி போக சொல்லி விட்டார்கள். அங்கு கொண்டு போய் சேர்த்து இருவரையும் கவனித்து கொண்டார்கள். அதை விட அத்தைக்கு அடுத்த அடியாக அவள் கணவனுக்கும் கொரோனா தொற்றி கொள்ள, வேறு வழியின்றி இவனுக்கு போன் செய்து வர சொன்னாள். இவனே மாமனையும் தைரியமாக இரு சக்கர வண்டியில் தன் பின்னால் உட்கார வைத்து முசிறியில் இருந்து திருச்சி ஆசுபத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்து மூவரையும் ஒரு சேர பார்த்து கொண்டார்கள் இவனும், அம்மாவும்.
எல்லாம் சரியாகி அம்மாச்சியையும், தாத்தனையும், மாமனையும் முசிறிக்கு கொண்டு போய் சேர்த்தவுடன் அத்தை மாமனை மட்டும் சந்தோசமாக வரவேற்றவள் இவர்கள் இருவரையும் “வாங்க” என்றதோடு சென்று விட்டாள். செல்லும் போது அவள் முணு முணுத்தது இவன் காதில் விழுந்தது, கிழவி இப்பவும் குண்டு கல்லாட்டம் எந்திரிச்சி வந்துட்டா”
அம்மாச்சிக்கு கொஞ்சம் சத்தமாக கேட்டிருந்தாலும் அவ்வளவுதான், அத்தையின் காது கருகி போகும் அளவுக்கு வசவு வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருப்பாள். ஒரு தலைமையாசிரியை வீட்டில் இப்படிப்பட்ட வார்த்தைகளை அக்கம் பக்கம் கேட்டால் இவர்கள் மதிப்பு என்னவாகும்? அதனால் இப்படி முணு முணுப்பதோடு சரி. அம்மாச்சிக்கும் தெரியும் இவள் இதுக்குத்தான் பயப்படுவாள் என்று. அதனால் இன்றும் அவள்தான் அங்கு குரல் ஓங்கி பேசுபவள்.
அத்தைக்கு பேரன் பேத்திகள் எடுத்தும் இன்னும் இந்த கிழவியின் கட்டுப்பாட்டில் இந்த குடும்பம் இருக்கிறதே என்னும் வருத்தம் அதிகமாகவே இருக்கிறது.
அம்மாச்சி அமைதியாக படுத்து கிடந்தது போலத்தான் தெரிகிறது. மூச்சு காற்று மட்டும் ஏறி இறங்கி கொண்டிருக்கிறது. அத்தை வலுக்கட்டாயமாக தன் முகத்தை சோகமாக வைத்திருப்பது போல இருக்கிறாள். அவ்வப்போது மனசுக்குள் இருக்கும் களிப்பு சில நேரங்களில் முகத்தில் பிரதிபலித்து விடுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
“பாவம்” ஹெட்மிஸ்” அவங்க மாமியார் இத்தனை நாளா கண்ணுக்குள்ள வச்சு பார்த்துட்டு இப்ப அவங்க இப்படி கிடக்கறதை பார்க்கறதுக்கு அவங்களுக்கு துக்கம் தாங்க முடியமாட்டேங்குது” இப்படி ஒரு ஆசிரியை பக்கத்தில் இருக்கும் ஆசிரியையிடம் சொல்லி கொண்டிருந்தாள் அதுவும் சத்தமாக. அத்தையின் காதில் விழுக வேண்டும். அவளுக்கு அத்தையிடம் ஒரு சில சொந்த உதவி தேவைப்படுகிறது, அதை இந்த சமயத்தில் இப்படி சொல்லி அவளின் கவனத்தை பெற்று விட்டால் நல்லதுதானே.
தாத்தனைத்தான் இவன் பார்த்தான். அவர் என்னமோ கிழவி இப்படி படுத்திருப்பதை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை, அவ்வப்போது பீடியை இழுத்து இழுத்து வெளியே விட்டு கொண்டிருந்தார். என்ன இது? தொன்னூறு வயசு ஆவுது, கிழவி போயிட்டா இவரை யாரு கவனிப்பான்னு கொஞ்சம் கூட கவலையில்லாம..! ராஜூ கூட இப்படி நினைத்து கொண்டிருந்தான்.
மூன்றாம் நாள் மதியம் மூன்று இருக்கும், அமைதியாய் படுத்து மூச்சை மேலும் கீழுமாய் விட்டு கொண்டிருந்த அம்மாச்சி திடீரென்று விழித்தவள் சட்டென எழுந்து உட்கார்ந்து “ஏன்னாடி எதுக்கு இப்படி என்னை சுத்தி உட்கார்ந்து கும்மியடிச்சு கிட்டிருக்கீங்க” செத்து போயிட்டான்னா. “போங்கடி போய் முதல்ல குடிக்கறதுக்கு சொம்பு நிறைய ஆட்டுப்பாலை கொண்டு வாங்க. மூணு நாளா வயித்தை கட்டுனதுக்கு பாலு குடிச்சுட்டு அப்புறமா ஏதாவது சாப்பிடலாம்.
அத்தை முணுமுணுத்தபடியே வீட்டு பின்னால் இருந்த பட்டியில் ஆட்டுப்பாலை கறக்க சொல்லி காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தாள். சொம்புடனே கொடுத்தாள். கிழவி அதுக்கு வேறு வசவு வார்த்தைகள் சொல்வாள். அப்புறம் பார்க்க வந்திருக்கும் கெளரவமான ஆசிரியர் கூட்டம் இவளை பற்றி என்ன நினைக்கும்? அதுவும் தலைமை ஆசிரியை.
அத்தை என்ன முணுமுணுத்திருப்பாள்? ராஜூ அவள் வாயசைப்பு போனதை வைத்து இப்படியாக இருக்குமோ என்று வடித்து பார்த்தான் “கிழவி என் உசிரை எடுத்த பின்னாடிதான் போய் சேரும்”
திடீரென யாரோ சிரிக்கும் சத்தம் கேட்க ராஜூ உட்பட எல்லோரும் திரும்பி பார்க்க தாத்தன் தன் பொக்கை வாயால் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தார். அவருக்கு முதலிலேயே தெரிந்திருக்குமோ தன் பொண்டாட்டி தன்னை விட்டு போக மாட்டாள் என்று.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-Sep-23, 11:24 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 283

மேலே