ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும் - பழமொழி நானூறு 369

இன்னிசை வெண்பா

மாற்றத்தை மாற்றும் உடைத்தலால் மற்றவர்க்(கு)
ஆற்றும் பகையால் அவர்களைய வேண்டுமே
வேற்றுமை யார்க்குமுண் டாகலான் ஆற்றுவான்
நூற்றுவரைக் கொன்று விடும். 369

- பழமொழி நானூறு

பொருளுரை:

மனவேறுபாடு எத்திறத்தார்க்கும் உண்டு ஆகலானும், அவ்வேறுபாட்டால் ஒருவர் கூறியவற்றை அவர்க்குத் துணைபுரிவார் தஞ்சொற்களால் மாறு கொண்டு உடைக்கவல்லர் ஆதலானும் தம் பகைவர்க்கு தம்மோடு மாறுபாடு கொண்டொழுகும் துணையாய் வந்த பகைவராலேயே அவரைக் களைந்தெறிதல் வேண்டும்;

அங்ஙனம் கொல்லவல்லான் ஒருவனே நூறு பகைவர்களைக் கொல்ல வல்லனாம்.

கருத்து:

தம் பகைவர்களுக்குள் மன வேறுபாடு உண்டாகுமாறு செய்து ஒருவரை ஒருவரால் களைக என்பது.

விளக்கம்:

வேற்றுமை யார்க்குமுண்டு என்றது, மாற்றத்தை மாற்றம் உடைத்தலுக்கு ஏதுவாயிற்று. ஆகலான், அவர் பிரிவர் என்பதாயிற்று. ஆகவே, அவர்கள் மன வேறுபாட்டில் மிக்கொழுகுமாறு செய்து அவராலேயே அவரைக் களைக என்பது. இது பகைவனுக்கும் துணையாயினானுக்கும் வேறுபாட்டை உண்டாக்குவித்து ஒருவனால் ஒருவன் அழியுமாறு செய்க என்றது.

'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்றுவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Sep-23, 7:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே