உமிக்குற்றுக் கைவருந்து மாறு - பழமொழி நானூறு 368

உமிக்குற்றுக் கைவருந்து மாறு!
இன்னிசை வெண்பா

தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற
தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்
இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட
உமிக்குற்றுக் கைவருந்து மாறு. 368

- பழமொழி நானூறு

பொருளுரை:

அருவிகள் விட்டு விளங்கிப் பொன்னைக் கொழித்து இழியும் குளிர்ச்சி பொருந்திய மலைநாடனே!

தம்மை ஒருபொருளாகக் கொண்டு அடைந்தவர்களுக்குற்ற தீமை தம்மை அடைந்ததாகவே நினைத்து, அதனான் வரும் துன்பமும் எம்மை யடைந்ததேயாம் என்று அறிதலின்றி அதனைக் களையாது விட்டவிடத்து அவர் என்ன ஆவர்? உமியைக் குற்றுதலான் கை வருந்துமாற்றை யொக்கும்!

கருத்து:

தம்மை யடைந்தாரைத் தாம் காத்தல் வேண்டும்.

விளக்கம்:

தமக்குற்றது, எமக்குற்றது என்பன தீய செயலும், அதனான் வருந் துன்பமுமாம். என்னாம் என்ற வினா யாதும் செய்ய ஆற்றான் எனப் பொருள் பயந்து நின்றது.

உமிக்குற்றுதலான் பயன்பெறா தொழிதலே யன்றிக் கையும் வருந்துதல் போல, அவராற் பயன்பெறா தொழிதலேயன்றி, அவரையே களைகணாக நம்பி வேறு முயற்சியின்றி இருத்தலின், அவர் கைவிட்ட விடத்து அதனை நீக்க முடியா தழுங்கும் அல்லலும் உளவாம்.

'உமிக்குற்றுக் கைவருந்துமாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Sep-23, 7:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே