தீக்கு மருந்து

அன்று நல்ல வெயில்! சேதுராமன் வியர்வை விறுவிறுக்க பழைய இரும்பு சாமான்களை லாரி ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்தான். அவன் உயர்பள்ளி வரை படித்துவிட்டு, வீட்டின் பொருளாதாரம் காரணமாக சின்ன சின்ன வேலைகளை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு கொடுத்து உதவி வந்தான்.
அவனுக்கு உடன் பிறந்தவர்கள், இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி. தந்தை ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்து வந்து வந்தார். நஷ்டம் காரணமாக கம்பெனியை இழுத்து மூடி விட்டனர். மேலும் அவருக்கு மாரடைப்பு வந்து, கால்கள் சுவாதீனமின்றி நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். தாய் சில வீடுகளுக்கு சென்று, சமையல் செய்து கொடுத்து, கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தாள். சேதுராமனின் தம்பி உயர்நிலை பள்ளியில் படித்து வந்தான். அவன் தங்கைகள் இருவர், நல்ல படிப்பின் காரணமாக கல்லூரியில் மானியம் பெற்று படித்து வந்தார்கள்.

சேதுராமன் அவ்வப்போது அவன் குடும்பத்தை பற்றியும் அவன் வருங்காலம் பற்றியும் நினைத்து வருந்தி, குழம்பிப் போய் கொண்டிருந்தான். அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற நாட்டமும் இல்லை. ஆனால் பிறருக்கு உதவும் எண்ணம் அவனிடம் மிகவும் அதிகம் இருந்தது. பணத்தையோ பாராட்டையோ எதிர்பார்க்காமல் அவன் அடுத்தவருக்கு ஏதாவது உதவி புரிந்து வந்தான். அவனுடைய தம்பிக்கு கணக்கு மற்றும் ஆங்கிலம் சொல்லித்தருவான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு அந்தா அவசரம் எதுவென்றாலும் சேதுராமன் உடனடியாக சென்று அவனாலான உதவியை செய்துவந்தான். கோவிட் தொத்துநோய் வந்திருந்தபோது அவன் வீட்டின் அருகில் இருந்த பத்து குடும்பங்களுக்கு தேகத்தால் பல உதவிகள் செய்தான்.

இப்போது, இரும்பு சாமான்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்த சேதுராமன் கதையை மேலும் பார்க்கலாம். லாரி மேலே ஏற்றிய இரும்பு சாமான்களைச் சரிசெய்ய அவன் லாரி மேலே ஏறி நின்றான். அவன் சரக்கு ஏற்றிக்கொண்டிருந்த லாரி, போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒரு சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்நேரம், ஒரு இளம்பெண் படு வேகமாக ஒரு மோப்பெட் வண்டியில் சென்று கொண்டிருந்தாள். திடீரெண்டு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அந்த பெண் லாரியின் பின்புறம் மோப்பெட் வண்டியை இடித்தாள். இடித்த வேகத்தின் காரணமாக அவள் தூக்கி எறியப்பட்டு லாரியின் மேல் இரும்பு சாமான்கள் மீது விழுவதற்கு இருந்தபோது, சரியான நேரத்தில் சேதுராமன் இதை கவனித்து, கூர்மையான இரும்பு சாமான்களின்மீது அவள் விழுந்து விடாமல், தன் இருகைகளால் அந்த பெண்ணைத் தாங்கினான். இருப்பினும் அவளது உடல் கனம் காரணாமாக, அவள் அவன் கையிலிருந்து தவறி கூர்மையான இரும்பு சாமான்கள் மீது அவள் முகம் மோதியது. நல்லவேளை, அந்தப்பெண் தலைக்கவசம் அணிந்திருந்ததால் முகத்தில் பெரிய அளவில் காயங்கள் படவில்லை. கழுத்து மற்றும் தோள்பட்டையில் சிறு காயங்கள் ஏற்பட்டது. நல்ல வேளை, தப்பித்தாள் அந்த இளம்பெண்.
எதிர்பார்க்காமல் நடந்த இந்த விபத்தால் அந்த பெண் மூர்ச்சையானாள். பக்கத்தில் இருந்தவர்கள் சேதுராமனிடம் சொன்னார்கள் "நீ லாரி மேலே இருந்ததால், இந்த பெண் மேலே போகாமல் தப்பித்தாள். மோப்பெட் மிகவும் பயங்கரமாக சேதம் ஆயிருச்சு. மொபெட்டுக்கு வந்தது மோப்பெட்டோடு போய்விட்டது"

சேதுராமன் அந்த பெண்ணை பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் அவசரப்பிரிவில் காண்பித்தான். தான் வண்டியை லாரியில் இடித்து விட்டோம் என்ற பயம் மற்றும் விபத்தின் அதிர்ச்சியின் காரணமாக அவள் மூர்ச்சை அடைந்துள்ளதாக மருத்துவர் கூறினார். பின்னர் அவளது காயங்களுக்காக ஒரு ஊசி போடப்பட்டு அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அந்த பெண் கண்ணை திறந்து பார்த்தாள். அவளின் பெற்றோர்கள் அங்கிருந்தார்கள். சேதுராமன் அந்த பெண்ணை அவன் கைகளில் தாங்கியபோது, அவள் இடுப்பினில் இருந்த சின்ன பையை பத்திரமாக எடுத்து வைத்திருந்தான். அந்த பையில் ஒரு செல்போனும் பணமும் இருந்தது.

அந்தப்பெண் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கையில் சேதுராமன், அவளது பையில் இருந்த செல்போனை திறந்து (நல்ல வேளை, அவளுடைய போன் பூட்டப்படாமல் இருந்தது) தொடர்பு விவரங்களை பார்த்த போது, அம்மா அப்பா என்று இரண்டு போன் எண்கள் இருந்தது. அப்பா என்கிற நம்பருக்கு அவன் போன் செய்து விவரத்தை சொன்னான்.
பெண்ணின் அப்பா உடனேயே கிளம்பி ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து அவனுக்கு மிக்க நன்றி சொல்லியவுடன் சேதுராமன் விபத்து நடந்த விவரங்களைச் சொன்னான். அவர் வாகன இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தகவல் கொடுப்பதாக கூறினார். அவனுடைய செல்போன் நம்பரையும் வாங்கிக்கொண்டார். அவனுக்கு ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் கொடுத்தபோது, சேதுராமன் பணிவுடன் மறுத்துவிட்டான். அத்துடன் இல்லாமல் அந்தப்பெண்ணின் கைப்பையை (அதில் உள்ள செல்போன் மற்றும் பணத்துடன்) அவரிடம் கொடுத்தான். இதைக்கண்டு பெண்ணின் தந்தை சேதுராமனிடம் "உன்னுடைய நேர்மையை நான் வெகுவாக மெச்சுகிறேன்" என்றார்.

சேதுராமன் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் அவன் சரக்கு ஏற்றிக்கொண்டிருந்த லாரி இருக்கும் இடத்திற்கு சென்றான். அங்கே போக்குவரத்துக்கு துறை போலீசார், லாரி ஓட்டுனரிடம் உரையாடிக்கொண்டிருந்தனர். சேதுராமன் அவர்களிடம் நடந்தவற்றை கூறினான். "லாரிக்கு சேதம் ஒன்றும் இல்லை. பொதுமக்கள் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. அந்த பெண்ணின் மொபெட்தான் அதிகம் சேதம் அடைந்துள்ளது. அது குறித்து பெண்ணின் தந்தை இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு தெரிவித்துவிட்டார் " என்று அவன் சொன்னவுடன் ஒரு அதிகாரி "பெண்ணின் அப்பாவிற்கு இந்த என் போன் எண்ணை கொடுத்து என்னுடன் பேசச்சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு இதர காவலர்களுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர்கள் சென்றவுடன் ஓட்டுனர் "சேதுராமா, உன்னுடைய உயர்ந்த உதவும் எண்ணத்தை பாராட்டுகிறேன்' என்று அவனை மெச்சினார்.

அன்று இரவு, அந்த பெண் சேதுராமனுக்கு போன் செய்து நன்றி கூறினாள். மிகவும் வேகமாக தான் மொபெட்டில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென கொஞ்சம் தலை சுற்றல் ஏற்பட்டு வண்டியின் சமநிலை இழந்து விபத்து நடந்து விட்டது என்று கூறினாள். அவள் பெயர் சுமதி என்றும் கூறினாள். அடுத்த நாள் அவள் தந்தையுடன் சேதுராமன் வீட்டிற்கு சென்று சேதுராமனுக்கு நேரில் நன்றி கூறினாள். அவன் வீட்டை பார்த்து விட்டு அவன் குடும்ப நிலை பற்றியும், சேதுராமனின் படிப்பு மற்றும் வேலை அனுபவங்கள் குறித்தும் அவர்கள் தெரிந்து கொண்டனர். பின்னர் மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு அவர்கள் வீடு திரும்பினர்.

ஒரு வாரம் கழித்து, சுமதி சேதுராமனுக்கு போன் செய்து அவள் தந்தையின் தொழிற்சாலையில் துணிக்கிடங்கில் வேலை செய்ய முடியுமா என்று கேட்டாள். சம்பளம் மாதம் 25000 என்றும் குறிப்பிட்டாள். சேதுராமன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் மனதில் நினைத்துக்கொண்டான் ' கரும்பு தின்ன கூலியா’. "ரொம்ப நன்றி மேடம். இப்போது உள்ள எனது குடும்ப சூழ்நிலையில் எனக்கு இப்படி ஒரு நல்ல வேலை வாய்ப்பு கொடுத்ததிற்கு நான் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன்" என்று தழுதழுத்த குரலில் கூறினான்.

அடுத்த ஒரு வாரத்தில் சேதுராமனுக்கு வேலை அழைப்பு கடிதம் வந்தது. அதில் கையொப்பமிட்டிருந்தது வேறு யாரும் இல்லை, சுமதி தான். சேதுராமன் மிகுந்த ஆச்சரியமும் குதூகலமும் அடைந்தான். சேதுராமனின் குடும்பத்தில் உள்ள அனைவரது முகங்களிலும் திருப்தி நிறைந்த புன்னகை மலர்ந்தது. அடுத்த நாளே சென்று வேலையில் சேர்ந்தான். தொழிற்சாலையில் பலவகை துணி வகைகள் தயாரிக்க பட்டு வந்தது. ஆலையின் உள்ளே நான்கு துணி கிடங்குகள் இருந்தது. அதில் ஒன்றை சேதுராமன் பார்த்து கொள்ள வேண்டும். மூன்றே மாதத்தில், சேதுராமன் நல்ல திறமையுடனும் பொறுப்புடனும் பணிகளை செய்ய கற்றுக்கொண்டான். சுமதி வாரம் ஒரு முறை அவன் வேலை செய்யும் துணி கிடங்கிற்கு வந்து அவனை விசாரித்து அவன் வேலைகளையும் பாராட்டி சென்றாள். வேலை கிடைத்து மாதாந்திர வருமானம் கிடைத்ததால் சேதுராமன் அவன் குடும்பத்தை ஓரளவுக்கு நன்கு கவனிக்க முடிந்தது.

ஒரு நாள், சுமதி தொழிற்சாலையில் ஒரு துணி கிடங்கில் ஆலோசனை கூட்டத்திற்காக சென்றிருந்தாள். பேச்சு வார்த்தைகள் முடிந்து, சுமதி தனி ஒரு அறையில் சில குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தாள். அந்த அறையில் நிறைய பட்டுத் துணிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அங்கே தீ பிடித்து கொண்டது. வேலை தீவிரத்தில் சுமதி தீ பற்றியதை முதலில் கவனிக்கவில்லை. அவள் அருகில் வேறு யாரும் இல்லை. அவளது வெகு அருகில் தீ பற்றிய போதுதான் அவளுக்கு அந்த அறையில் தீ பிடித்துக்கொண்டது தெரிய வந்தது.
அவளுக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றியது என்று தெரியவில்லை. அவள் செல்போனில் சேதுராமனுக்கு போன் செய்து, தான் பக்கத்துக்கு துணி கிடங்கில் தீயில் சிக்கி கொண்டிருப்பதாகச் சொல்லி முடிக்கவில்லை, தீ அவளை சுற்றிப் படரத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கார்பன்டை ஆக்ஸைடு உருளைகளை எடுத்து வந்து தீயை அணைக்க துவங்கினர். தீயணைப்பு மையத்திற்கு தகவல் சென்று தீயணைப்பு வண்டியும் தொழிற்சாலையை நோக்கி விரைந்தது.

சீதாராமன் போனில் சுமதியின் குரலில் இருந்த பீதியை கவனித்து மிகவும் கவலை அடைந்தான். நூறு மீட்டர் தூரத்தில் சுமதி இருக்கும் துணி கிடங்குக்கு மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றான். தீ வெளியிலும் பரவி உள்ளதால் சுமதியின் அறைக்குள் யாரும் செல்லவில்லை. சிலர் வெளியிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். சேதுராமன் ஆபத்தின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் சுமதியின் அறைக்குள் ஓடி நுழைந்தான். நல்ல வேளையாக, ஒருவர் சேதுராமன் கையில் ஒரு போர்வையை கொடுத்தார். அந்த நிலையிலும் சுமதி அங்கும் இங்கும் ஓடாமல் தரையில் மல்லாக்காக படுத்து அவள் முகம் தீயினால் சுடாதவாறு போராடிகொண்டிருந்தாள். சேதுராமன் அவளை போர்வையால் சுற்றி அப்படியே தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தான். ஒரு சில அதிகாரிகளும் தொழிலார்களும் தொழிற்சாலையின் ஆம்புலன்ஸ் வண்டியில் அவர்கள் இருவரையும் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிசென்றார்கள். அதே நேரத்தில் தீயணைப்பு வண்டியும் அங்கே வந்து அடுத்த பதினைந்து நிமிடங்களில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. நல்ல வேலையாக தீ மற்ற துணி கிடங்குகளுக்கு பரவவில்லை.

ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருவரும் முதலுதவி பெற்றார்கள். அதிருஷ்டவசமாக சுமதிக்கு தீயின் பாதிப்பு கடுமையாக இல்லை. உடம்பில் அவளுக்கு அங்கும் இங்கும் தீ காயங்கள், அவ்வளவே. மேலும், சுமதி தீ விபத்து நேர்ந்தபோது பாலியஸ்டர் புடவை கட்டியிருந்ததால், அவள் அதிக தீக்காயங்கள் இன்றி தப்பினாள். அவள் முகம் தப்பித்தது. சேதுராமனுக்கு உடலிலும் முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டது. சுமதி மற்றும் சேதுராமனின் குடும்பத்தினர் அவர்களை சென்று பார்த்தனர். வெளியூரில் இருந்த சுமதியின் தந்தை விமானம் மூலம் அன்று இரவே வந்து விட்டார். தனது தொழிற்சாலையில் தன் மகளுக்கே தீ விபத்தா எனஅதிர்ந்து போனார். இருவரையும் பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று சிகிச்சை அளித்தார்கள்.

சுமதி இரண்டு வாரங்களில் குணம் அடைந்தாள். ஆனால் சேதுராமனுக்கு முகத்தில் தீக்காயத்தினால் இரண்டு பக்கமும் தழும்பு ஏற்பட்டது. சுமதியின் சிபாரிசு மூலம் சேதுராமனுக்கு ஸ்கின் கிராபிட்டிங் (தோல் மாற்றம்) செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு அவன் மீண்டும் வீடு திரும்பினான். ஆனால் அவன் முகம் பழைய பொலிவுடன் இல்லை. அவன் வீட்டில் இருப்பவர்கள் அவனது நிலையை கண்டு வேதனையும் கவலையும் அடைந்தனர்.

இந்த நிலையில்தான் சேதுராமனுக்கு அவன் வாழ்க்கையில் எதிர்பார்க்காத ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. அப்போது வரை அவனுக்கு எஜமானிபோல இருந்த சுமதி, சேதுராமனை தன் எஜமானனாக ஏற்றுக்கொண்டாள். ஆம், சுமதி சேதுராமனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தாள்.

சுமதியின் இந்த எதிர்பாராத செய்கையை சிறிதும் எதிர்பார்க்காத சேதுராமன், வார்த்தைகள் இன்றி திண்டாடினான். அவன் அவளிடம் "நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இப்படி பேசுகிறீர்கள் என்று நினைக்கிறன். உங்களிடம் ஒரு சாதாரண தொழிலாளியாக இருக்கும் நான் எந்த ஒரு விதத்திலும் இதற்கு தகுதியானவன் இல்லை" என்று தழுதழுத்த குரலில் சொன்னபோது அந்த நேரத்தில் சுமதியின் தந்தை அங்கே வந்தார். அவர் "சேதுராமன், உன்னிடம் பல தகுதிகள் இல்லாமல் இருக்கலாம். ஆயினும், மனிதாபிமானம் எனும் தெய்வீக குணம் உன்னிடம் அபரிமிதமாக உள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவே சுமதி எங்களிடம் 'இப்படிப்பட்ட நேர்மையான கண்ணியமான சேதுராமனை நான் மணக்க விரும்பிக்கறேன்' என்றபோது நானும் என் மனைவியும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும், பிறகு சிறிது நேரம் யோசித்துவிட்டு அவளுக்கு எங்கள் சம்மதத்தை தெரிவித்துவிட்டோம்." என்றார்.
துணிகிடங்கின் அருகில் இருந்த ஒரு மின்சார அறையில் ஏற்பட்ட ' குறைந்த மின்னழுத்தம்' காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவந்தது. தீ காப்பீடு இருந்த காரணத்தினால் தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கு என்பது சதவிகிதம் வரை காப்பீட்டு நிறுவனத்திலிருந்து தொகை கிடைத்தது.

எளியமுறையில் சேதுராமன்-சுமதி திருமணம் நிறைவேறியது. சுமதியின் தந்தை, அவர்கள் இருவருக்கும் தனது வேறு ஒரு வியாபாரத்தை கொடுத்து வீட்டிலிருந்தபடியே கவனிக்க ஏற்பாடு செய்தார். சுமதியின் திறமையாலும், சேதுவின் உழைப்பினாலும் அந்த வியாபாரம் நன்கு விரிவடைந்து நல்ல லாபத்துடன் இயங்க தொடங்கியது. சேதுவின் தம்பி பி.காம் பட்டம் பெற்று அவர்கள் வியாபாரத்தில் உதவியாக இருந்தான். சேதுராமன் தன் பெற்றோர்களையும் தன்னுடனே வைத்து கொண்டான். அவன் தங்கை இருவரும் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படித்து முடித்து அங்கேயே நல்ல உத்தியோகத்தில் சேர்ந்தனர். சிறந்த மருத்துவ உதவியினால் சேதுவின் தந்தைக்கும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவன் தாயின் மகிழ்ச்சியை கேட்கவேண்டுமா?

அடுத்த மூன்று வருடங்களுக்குப் பிறகு, பின் சுமதி சேதுராமன் இருவரும் சேர்ந்து, ஐம்பது லட்சம் ரூபாயில் "தீக்கு மருந்து" என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவினார்கள். அநாதைகள் மற்றும் முதியோர்கள் நலத்திற்காக இந்த அறக்கட்டளை பணம் மற்றும் பொருள் உதவி செய்கிறது. இது தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள்ள மக்களுக்கு தீ விபத்தினால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் இந்த அறகட்டளை ஏற்றுக்கொண்டு, காயமடைந்தவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் முடிந்த உதவியையும் செய்து வருகிறது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (19-Sep-23, 11:13 am)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : theekku marunthu
பார்வை : 56

மேலே