என்ன காரணம்

என்ன காரணம்?

உங்கள்ள யாருக்கு சைக்கிள் ஓட்ட தெரியும்?
எங்கள் கூட்டத்தில் தனசேகரன் முன் வந்தான். நான் நல்லா சைக்கிள் ஓட்டுவேன்.
எனக்கும் ஓட்ட தெரியும் என்று சொல்வதற்கு பயம், காரணம் பொள்ளாச்சி சந்தைக்குள் ஓட்டி சென்று வரவேண்டும். தனசேகரனை வியப்பாய் பார்த்தோம். எங்களுடனே காடு மலை எல்லாம் சுற்றி வருகிறான் இவன் எப்போது சைக்கிள் ஓட்ட கற்று கொண்டான்?
இப்ராஹிம் ராவுத்தர் தனசேகரனிடம் பத்து ரூபாய் கையில் கொடுத்தார். மார்க்கெட்டுல இரண்டு கிலோ வெங்காயம் வாங்கிட்டு விரசலா வா, பெரிய வெங்காயம் போதும். பை ஒன்றை கையில் கொடுத்தார்.
தனசேகரனின் பக்கத்து வீட்டுக்காரன் நான், அதனால் நீ வேணா என் கூட வர்றீயா? கேட்டான்.
டபுள்ஸ் அடிப்பியா?
ம்..ஸ்டைலாக சைக்கிளில் ஏறி உட்கார்ந்தவன், பெடல் போட்டபடி ஓடி வந்து ஏறிக்கோ.
எனக்கு தடுமாற்றம், ஓடிப்போய் ஏறுவதற்குள் இரண்டு முறை தடுமாறினேன். நான் தடுமாறும் போதெல்லாம் தனசேகரன் “சைக்கிள் பாரை” கஷ்டப்பட்டு பிடித்து கொண்டவன் அறிவு கெட்டவனே மெதுவா ஏறு.
சுறுசுறுவென கோபம் வந்தாலும் இபராஹிம் ராவுத்தரும் என்னோட செட்டு பையன்களும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது எனக்கு அவமானமாக இருந்தது.
அப்பாடி..ஒரு வழியாக ஏறி விட்டேன்.
பத்திரம்டா, வாங்கிட்டு சீக்கிரம் வாங்க, பிரியாணிக்கு வெங்காயம் பத்தலைன்னு சமையல்காரரு சொல்லி காத்துகிட்டிருக்காரு.
பிரியாணி, இந்த வார்த்தை கேட்டதும், தனா சீக்கிரம்டா, அவனை உசுப்பினேன்.
நாலு ரூபாய் இருபது காசு போக மிச்சத்தை இப்ராஹிம் ராவுத்தர் கையில் கொடுத்தோம். சரி எல்லாரும் போய் அக்கா கிட்ட இருங்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க.
ரஹமத் அலங்காரத்தில் அற்புதமாய் இருந்தாள். ஏற்கனவே அவள் நல்ல சிவப்பு, வட்ட முகம். அலங்காரம் அவளை இன்னும் பேரழகியாக காட்டியது.
எங்கள் எல்லோருக்குமே அப்பொழுது பதிமூன்று பதினாலு வயது இருக்கும். ஒன்பதாவது வகுப்பில் வால்பாறை அரசு பள்ளியில் படித்து கொண்டு இருந்தோம்.
வால்பாறையில் இருந்து இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தள்ளி எங்கள் குடியிருப்பு இருந்தது. எங்களை பள்ளிக்கு அழைத்து சென்று கூட்டி வந்து கொண்டு இருந்த பள்ளி வாகனத்தில் ஓட்டுநராக இருக்கிறார் இப்ராஹிம் ராவுத்தர்.
“ரஹமத்தும்” கூட எங்கள் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தவள். ஒரே பள்ளி வாகனம், அதில் நாங்கள் ஆறு பையன்கள், பெண்கள் ஐவர். அதில் ‘ரஹமத்தும், பவானி’ இருவரும் பனிரெண்டாவது வகுப்பில் ஒரே குரூப்பில் படித்து கொண்டிருந்தார்கள், மற்ற மூன்று பெண்கள் ஆறாவது ஒன்றிலும் ,இரண்டு ஏழாவதிலும் படித்து கொண்டிருந்தன.
“ரஹமத்தும், பவானியும்” ஒருவருக்கொருவர் அழகில் சளைத்தவர்கள் அல்ல, பவானி பிராமணர் வீட்டு பெண். அவளின் தந்தையும் அலுவலகத்தில் கிளார்க்காக இருக்கிறார்.
எங்கள் பள்ளியில். ரஹமத், பவானி வகுப்பு மாணவர்கள், சிறுவர்களாய் இருந்த எங்களை எப்பொழுதும் அருகில் அழைத்து பேசுவார்கள், சில நேரங்களில் சாக்லெட்டும் கூட கொடுப்பார்கள். அது எங்களுக்கு பெருமையாக இருக்கும், காரணம் அப்பொழுதெல்லாம் புரியவில்லை. எதற்கு தேவையில்லாமல் மாணவர்கள் ரஹமத்தையும், பாவனியையும் விசாரிக்கிறார்கள் என்று புரியாது.
பள்ளி மூன்றரைக்கெல்லாம் விட்டு விடும், கிட்டதட்ட வருடத்தில் ஆறு மாதம் நல்ல மழை இல்லாவிட்டால் தூறலாவது பெய்து கொண்டே இருக்கும். அந்த மழை சாரலில் இவர்கள் இருவரும் ஒரு சேர நடந்து எங்கள் வாகனத்திற்கு வரும்போது அவ்வளவு அழகாக இருக்கும். எங்களுக்குள் ஒரு போட்டி இருக்கும் யார் அவர்கள் அருகில் உட்கார்ந்து வருவது?
“பியூசி” யை எடுத்து விட்டு அரசு அந்த வருடம்தான் பிளஸ் டூ படிப்பை அறிமுகப்படுத்தி இருந்தது. அதனால் பெருமளவு மாணவ மாணவிகள் பி.யூசி கல்லூரியில் படிப்பது போன்ற மன நிலையிலேயே இருந்தார்கள்.
நாங்கள் ஒன்பதாவது வகுப்புக்கு பாசாகி வரும்போது எங்கள் குடியிருப்பு பகுதியிலேயே நடு நிலை பள்ளி வந்து விட்டது. அதனால் ஒன்பதுக்கு மேல் படிக்கும் மாணவ மாணவிகள் மட்டும் வால்பாறை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தோம். இப்ராஹிம் ராவுத்தருக்கும் பெரிய ஸ்கூல் பஸ் கொடுத்திருந்தார்கள், கிட்டத்தட்ட எழுபதிலிருந்து எண்பது மாணவ மாணவிகள் இருந்தோம்.
இப்ராஹிம் ராவுத்தருக்கு “ஐந்து பெண்கள்” ஒரு பையன். ரஹமத் அவர்கள் வீட்டில் மூன்றாவது பெண். ஒரு அக்கா வீட்டில் இருக்கிறாள். மூத்தவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, என்றாலும் மாப்பிள்ளையுடன் அருகில்தான் வசிக்கிறாள். வீட்டில் இருக்கும் அக்கா பி.யூசி படித்திருப்பதாக சொன்னார்கள்.
“பிளஸ்டூ”வில் ரஹமத், பவானி இருவருமே நல்ல மதிப்பெண் பெற்று வெளியே வந்தார்கள். பவானி அப்பா தன் மகள் கல்லூரியில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து விட்டார்.
ரஹமத்துக்கும் கல்லூரியில் சேரவேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. ஆனால் இப்ராஹிம் பாய் அதற்கான ஆர்வம் காட்டாமல் இருந்தார். அக்கம் பக்கம் இவருடன் வேலை பார்ப்பவர்கள் எடுத்து சொன்னார்கள். அவளை காலேஜூக்கு அனுப்புங்க பாய், நல்ல மார்க் எடுத்திருக்கா. ஹூஹும். அவர் கல்லைப்போல இருந்தார். எனக்கென்னவோ அவருக்கு ஆசையிருந்திருக்கலாம், ஆனால் இவள் ஒருவளை காலேஜில் சேர்த்தாலும், ஹாஸ்டலில்தான் விட வேண்டும். அதற்கு எப்படியும் மாதம் “ஐநூறு ஆயிரம் அனுப்ப வேண்டும்” வாங்கும் சம்பளமே இரண்டாயிரம் சொச்சம்தான். அவர்கள் வீட்டில் எட்டு உருப்படிகள், அத்தனை பேரும் இவரின் ஒற்றை சம்பளத்தை நம்பித்தான். இந்த சூழ்நிலையில் இவருக்கு “ரஹமத்தை” இவ்வளவு தூரம் படிக்க வைத்ததே பெரிசு.
வீட்டிற்குள் முடங்கி விட்டாள் ரஹமத், நாங்கள் குடியிருந்த பகுதியோ காட்டு பகுதி, அணை கட்டுமானத்துக்காக அரசாங்கம் அமைத்த பகுதி. அதனால் வேறு எதற்கும் தொழில் கற்று கொள்ளவோ, வேறு ஏதேனும் படிக்கவோ வாய்ப்பு இல்லாத பகுதி. நான்கைந்து பேர் அவளுக்காக அவள் வீட்டுக்கு டியூசன் செல்ல ஆரம்பித்தோம். எங்களை கண்டவுடன் அவள் முகம் கொஞ்சம் மலரும்.
அப்பொழுது வந்ததுதான் இந்த சம்பந்தம். மாப்பிள்ளை “நடுவட்டம் எஸ்டேட்டை” சேர்ந்தவர். எஸ்டேட்டில் ஏதோ உத்தியோகம். மூத்த அக்கா கல்யாணத்துக்கு ஒத்து கொள்ளாததால், அடுத்து ரஹமத்தை பேசி விட்டார்கள்.
ஆரம்பத்திலிருந்தே அவர்கள் சொன்னதெற்கெல்லாம் தலையாட்டியபடி இருந்தார் இப்ராஹிம் ராவுத்தர். கல்யாணம் பொள்ளாச்சியில் தான் வைக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். அக்கம் பக்கம் அவருடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவரிடம் எவ்வளவோ எடுத்து சொன்னார்கள், குடியிருப்பு பகுதியிலேயே மண்டப வசதி இருக்குது, பொள்ளாச்சியின்னா செலவு நிறைய ஆகும். இங்கேயே வச்சுட்டா சமையல் செலவு மட்டும்தான், மத்த செலவு எதுவுமிருக்காது. ஆனால் சம்பந்தி வீட்டார் ஒத்து கொள்ளவில்லை.
நாங்கள்தான் அவருக்கு துணையாய் ஒரு நாள் முன்னதாக பொள்ளாச்சி வந்து தங்கி எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். மண்டப வாடகையில் இருந்து சமையல் மற்றும் எல்லா செலவுகளும் அவரை இழுத்து சென்று கொண்டிருந்தன. நான் அடிக்கடி ரஹமத்தின் முகம் பார்த்து கொண்டிருந்தேன். அவளை பொருத்தவரை இந்த கல்யாணத்தை பெருமளவு வரவேற்றதாக தெரியவில்லை. எப்படியாவது “அப்பாவின் பாரத்தை” குறைக்க தான் போய் விட்டாள் போதும் என்று நினைப்பது போலத்தான் தோன்றியது.
ஏன் அப்படி தோன்றியது எனக்கு என்பதை இருவரும் இணையாக நின்றபோதுதான் புரிந்தது. அவளின் அழகு மாப்பிள்ளைக்கு சம்பந்தமில்லாமல் இருந்தது. இருவருக்கும் பத்து பனிரண்டு வருடங்கள் வித்தியாசம்..
மறுபடி நாங்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தோம். எங்கள் பள்ளி வாகனத்தின் பிரகாசம் சற்று மங்கித்தான் போயிருந்தது. ஒரு வருடம் ஓடியிருந்தது. நாங்களும் பத்தாவது வகுப்புக்கு வந்திருந்தோம். இப்ராஹிம் ராவுத்தர் இப்பொழுது பெண்கள் மட்டும் செல்லும் “ஸ்கூல் பஸ்ஸுக்கு” சென்று விட்டார். ஆண்பிள்ளைகளுக்கு தனி வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார்கள். அதனால் அவருடன் இருந்த தொடர்பு குறைந்து போய் விட்டது.
ரஹமத் வீட்டிற்கு வந்திருக்கிறாள் கேள்விப்பட்டு ஒரு முறை சென்று பார்த்தேன். எப்படிடா இருக்கே? அவளின் கேள்வி உயிரில்லாமல் இருப்பதாக பட்டது. அவளின் அழகு எங்கே போனது? முகம் ஒடுங்கி நிறம் மங்கி போயிருந்தது.
எதேதோ பேசி கொண்டிருந்தோம். பவானி கல்லூரி முடித்து மேல் படிப்பில் சேர்ந்து விட்டதாக அவளின் அப்பா இவளின் அப்பாவிடம் சொன்னாராம். இதை சொல்லும்போது அவளின் கண்களில் ஒரு வெறுமையை பார்க்க முடிந்தது.
அங்கிருந்து கிளம்பும்போது அடிக்கடி வந்துட்டு போடா என்று சொன்னாள். ஏன் அப்படி சொல்கிறாள்? அவள் ஊருக்கு போகப்போவதில்லையா? மனதில் ஒரு கேள்வி எழுந்தாலும் அதை கேட்க முடியவில்லை.
நாங்கள் “பிளஸ்டூவுக்குள்” வரும் போது எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பித்தது, அன்று மாணவர்கள் ஏன் எங்களை கவனித்தார்கள் என்பதை.
வருடங்கள் நிற்காமல் ஓடியிருந்தன, இப்ராஹிம் ராவுத்தர் வேறொரு ஊருக்கு மாற்றலாகி அங்கு சில வருடங்கள் வேலை செய்து ஓய்வும் அடைந்திருந்தார். கிட்டத்தட்ட மற்ற இரண்டு பெண்களுக்கு திருமணத்தை முடித்திருந்தார். கல்யாணத்துக்கு போக முடியவில்லை.
திருப்பூருக்கு கம்பெனி வியாபார விசயமாக மில் ஒன்றிற்கு வந்து வெளியே எனது வாகனத்தை எடுத்து கொண்டிருந்தேன். “ராஜேந்திரா” குரல் கேட்டவுடன் சட்டென்று திரும்பினேன்.
யார் அது? அடையாளம் தெரியவில்லை, மிக வயதான தோற்றத்துடன் மெலிந்த உருவமாய் ஒரு பெண்.
நான் திகைத்து நிற்பதை பார்த்த அந்த பெண் நான் “ரஹமத்” ஞாபகம் இருக்கா? சிரித்தாள். நான்கைந்து பற்கள் கூட காணாமல்.
ரஹமத்…இரு நிமிட தாமதத்திற்கு பின் சட்டென ஞாபகம் வர அப்படியே அதிர்ச்சியானேன். “அக்கா”
கோமுத்தூருக்கு திரும்பி கொண்டிருந்தேன். எனக்கு நாற்பத்தி ஐந்து வயது என்றால் அவளுக்கு ஒன்றிரண்டு வயது கூட இருக்கலாம், ஆனால் அவளின் தோற்றம் அறுபது வயதை தாண்டி இருப்பது போல. தனிமையாக வாழ்ந்து கொண்டு பனியன் கம்பெனியில் பணி செய்து கொண்டு. மனம் துவண்டு போனது. அவளை ஒன்றுமில்லாமல் செய்தது வறுமையா? சூழ்நிலையா? அல்லது தந்தையிடம் சண்டையிட்டு தன் கல்வியை தொடராமல் போனதா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Sep-23, 1:55 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : yenna kaaranam
பார்வை : 115

மேலே